Pages

Monday, January 21, 2008

கிரிக்கெட் - இதுவா சாதனை?

இன்னிக்கி காலைல பேப்பர் பாத்தவங்க எல்லாம் ஒரு விஷயம் படிச்சிருப்பீங்க..
தலைப்பு இதுதான் "பெர்த் டெஸ்டில் இந்திய அணி இமாலய வெற்றி. ஆஸி.,சாதனையை தகர்த்தது"..
பேப்பர்லதான்னு இல்ல.. ஊர்ல திரும்புன பக்கமெல்லாம் இதே பேச்சுதான்.. "16 டெஸ்ட் தொடர்ந்து ஜெயிச்சுக்கிட்டே வந்தாய்ங்கல்ல - இந்தியாவா கொக்கா!! ஆப்பு அடிச்சோம்ல" - இப்படின்னு்..

ஓஹோ!! அப்போ இந்தியா தொடர்ந்து 17 டெஸ்ட் ஜெயிச்சு, ஆஸ்திரேலியாவோட சாதனைய முறியடிச்சிட்டாங்கலான்னுதானே கேக்குறீங்க?
அதுதான் இல்ல.. 16 டெஸ்ட் தொடர்ந்து ஜெயிச்சுக்கிட்டே வந்தவங்க, 17-வது டெஸ்ட்ல இந்தியாகிட்ட தோததுட்டாங்கலாம்..
அதுதான் சாதனையாம்.. :-(
அடக்கடவுளே!! சாதனை (அல்லது Record) அப்படிங்குற வார்த்தைக்கு அர்த்தம் என்னன்னு கூடவா மக்களுக்கு தெரியாம போச்சு..
அடுத்தவன சாதனை பண்ண விடாம தடுக்குறதுக்குப் பேர் சாதனையா - இல்ல - அத முறியடிக்குறதுக்கு பேர் சாதனையா ???
இந்த ஒரு சின்ன விஷயத்த கூட யோசிச்சு பாக்காம,இப்போ நாடு முழுக்க ஒரே கொண்டாட்டமா இருக்கு..

ஆஸ்திரேலியாவ பாத்திங்கன்னா விளையாடப் போற நாட்ல எல்லாம் ஜெயிச்சுக்கிட்டே இருக்கும்.. (Ofcourse சில தோல்விகளும் இருக்கு.. ஆனா, அதுக்கான சதவிகிதம் ரொம்பவே கம்மி).. அதெல்லாம் இங்க இருக்குற யார் கண்ணுக்கும் தெரியாது..
ஆனா, இந்தியா வெளிநாட்ல போய ஒரே ஒரு மேட்ச் ஜெயிச்சா அதுவே ரொம்ப பெரிய விஷயம்.. (அதுவும் ஆடிக்கொருதடவ அம்மாவசைக்கொருதடவன்னு நடக்கும்)..
இங்க இருக்கவங்களுக்கெல்லாம் அதுதான் சாதனையாமாம் ..

ஐய்யோ - என்ன சொல்றது இதுக்கு மேல.. நம்ம தலைவர் கவுண்டமணி சொல்வார்ல ஒரு படத்துல.. அதே ஸ்டைல்லயே நானும சொல்றேன் - வாழ்க ஜனநாயகம !!


நன்றி !!

Thursday, January 03, 2008

M S விஸ்வநாதன் - "சொல்லத்தான் நினைக்கிறேன்.. உள்ளத்தால் துடிக்கிறேன்"

இன்றைய இசையமைப்பாளர்கள், சமீப காலமா ரீமிக்ஸ் என்கிற பெயரில் பல நல்ல பழைய தமிழ் பாடல்களை கொலை செய்து கொண்டிருக்கிறார்கள்.. அவர்களிடம் கேட்டால், இன்றைய டிரெண்டு (Trend) இதுதான் என்று பதில் கிடைக்கிறது..

இது என்னை போன்ற பழைய பாடல்கள் மட்டுமே கேட்கிறவர்களுக்கு, அதுவும் M S விஸ்வநாதன் பாடல்கள் கேட்கிறவர்களுக்கு ரொம்பவே வருத்தமாக இருக்கிறது.. ஏனென்றால், இப்படி சிதைக்கப்படுகிற பொக்கிஷங்களெல்லாம் பெரும்பாலும் M S விஸ்வநாதனது பாடல்கள் தான்.. (இளையராஜா பாடல்களும் இதில் அடங்கும்).. காப்பி-ரைட், ராயல்டி, லைசென்ஸ் போன்ற விஷயங்களெல்லாம் என்னவென்றே தெரியாத காலத்தில் அமரத்துவம் வாய்ந்த பல நல்ல பாடல்களைக் கொடுத்து விட்டு, இன்று அவை படும் பாட்டைக் கண்டு கண்ணீர் விட்டுக் கொண்டிருக்கிறார் நமது மெல்லிசை மன்னர்..

திரு M S விஸ்வநாதன் சமீபத்தில் குமுதம் வார இதழில் தன்னுடைய எண்ணக்குமுறலை வெளியிட்டுருக்கிறார்.. கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதள முகவரியில் திரு M S V அவர்களது பேட்டியை படிக்கலாம்..

http://www.kumudam.com/magazine/Kumudam/2007-12-19/pg7.php

குமுதம் இணையத்தளத்தில் உறுப்பினரல்லாதவர்களுக்காக, அவரது பேட்டி இதோ:

புதுசா வந்திருக்கிற மியூசிக் டைரக்டர்ங்ககிட்டருந்து நான் நிறைய கத்துக்க வேண்டியிருக்கு’’ என்று எப்படித்தான் சொல்ல முடிகிறதோ ‘மெல்லிசை மன்னர்’ எம்.எஸ். விஸ்வநாதனுக்கு பெருந்தன்மை.

‘அழகிய தமிழ் மகன்’ படத்தில் ‘பொன்மகள் வந்தாள்...’ பாட்டும், ‘பொல்லாதவன்’ படத்தில் ‘எங்கேயும்.. எப்போதும்..’ பாட்டும் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கிறது அடுத்து ‘பில்லா’விலும் ‘மை... நேம் இஸ் பில்லா’... பாடலும் சுடச்சுட ரீ மிக்ஸில் கலக்க ஆரம்பித்திருக்கிறது. இந்த மூன்று பாடல்களும் அந்தக் காலத்தில் எம்.எஸ்.வி. இசையமைத்தவை என்பதுதான் ஹை லைட்.

ஒரு மாலை நேரத்தில் மெல்லிசை மன்னரைச் சந்தித்தோம்.

‘‘எப்படி இருக்கீங்க?’’ என்றதும்,

‘‘ஹார்ட் ஆபரேசனுக்குப் பிறகு நல்லா ரெஸ்ட் எடுத்தேன். தினமும் ‘பிஸியோதெரபி’ எடுத்துக்குறேன். இப்போ ஆல்ரைட். பழைய வேகம் வந்துடுச்சு. சமீபத்துல கூட ‘குங்குமக்காரி’ என்ற பக்தி ஆல்பத்துக்கும், ‘மணல்மேரி மாதா’ என்ற ஆல்பத்துக்கும் ஒரே வாரத்துல ரெக்கார்டிங் செய்து முடிச்சேன்.’’

‘‘சினிமா இசை இப்போ எப்படி இருக்கு?’’

‘‘எல்லாரும்... நல்லா பண்றாங்க. பிரமாதமான பாட்டெல்லாம் வருது. ஒரே ஒரு குறை, வார்த்தைகளைக் கடித்துத் துப்புறாங்க. கேட்கவே வருத்தமாயிருக்கு. நான் புதுசா மியூசிக் பண்ண வந்த சமயம் ‘தேவதாஸ்’ படத்துக்கு பாட்டு கம்போஸ் நடந்துக்கிட்டிருந்துச்சு. உடுமலை நாராயணகவி பாட்டை எழுதினார். சினிமாவுக்கு வர்றதுக்கு முன்ன நான் நாராயணகவி கிட்ட வேட்டி, சட்டை துவைச்சு போட்டுக்கிட்டு இருந்தேன். பிறகு தான் மியூசிக் பண்ற வாய்ப்புக் கிடைச்சது. ‘தேவதாஸ்’ படத்துல கவிராயர் எழுதின, ‘உலகே மாயம் வாழ்வே மாயம்’ என்ற பாட்டை கண்டசாலா பாடினார். தமிழ் சரியா உச்சரிக்க வராம ‘உல்கே மாயம்’னு பாடிட்டார். எவ்வளவோ சொல்லிக் குடுத்தும் வரல. சரின்னு அப்படியே பதிவு பண்ணிட்டோம். இதைக் கேட்டுட்டு உடுமலை நாராயணகவிராயர் என் கன்னத்துல ஓங்கி ஒரு அறை விட்டுட்டு, ‘ஏண்டா தமிழை இப்படிக் கொலை பண்றீங்க’ன்னு கோபப்பட்டார். அதுக்கப்புறம் ரொம்ப கவனமா பாடல் வரிகள் நல்லா கேட்கிற மாதிரி மியூசிக் பண்ணினேன். ஆனா கவிராயர் அன்னிக்கு பயந்தது மாதிரி இப்ப நடந்துட்டுருக்கு. கேரளாவிலோ, கர்நாடகாவிலோ இப்படிப் பாடமுடியாது. ஆனா தமிழர்கள் தான் மன்னிச்சு ஏத்துக்கிறாங்க.

இது ஒரு பெரும் குறையா இருந்தாலும், புதிய புதிய பாடல்கள் வித்தியாசமான குரல்கள்னு ஒரு வெரைட்டியா கேட்க முடியுது.’’

‘‘எல்லாரும் நல்லா பண்றதா சொன்னீங்க. இப்ப, பழைய பாடல்களை ரீ_மிக்ஸ் செய்யுறாங்க. அதில் அதிகமா உங்கள் பாடல்களாகவே இருக்கு. இது போன்ற முயற்சிகள் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?’’ இந்தக் கேள்வியைக் கேட்டதும் எம்.எஸ்.வி. முகம் மாறுகிறது. அதைத் தன் பளீர் புன்னகையால் மறைத்து விட்டுப் பேசுகிறார்.

‘‘நானும் கேட்டேன். நான் யாரையும் குற்றம் சொல்ல மாட்டேன். ஆனா இப்ப இருக்குற ரசிகர்கள், இளைய தலைமுறையினர் இதைத் தான் விரும்புறாங்கன்னு சொல்றது தப்பு. ‘‘தொட்டால் பூ மலரும்..’’ பாட்டை ரஹ்மான் ரீ_மிக்ஸ் செய்திருந்த சமயம், ஏர்போர்ட்ல மீட் பண்ணினோம். என்னைப் பார்த்துட்டு நான் எதுவும் சொல்வேனோன்னு பயந்தார் ரஹ்மான். ஆனா, நான் பாராட்டினேன். காரணம் ரஹ்மான் செய்தது ரீ_மிக்ஸ் மாதிரி இல்ல. முழு பாடல் வரிகளையும் அப்படியே வெச்சுக்கிட்டு டியூன் போட்டார். பாட்டு கேட்கவும் நல்லா இருந்தது. அதுதான் சரி. அப்படித்தான் பண்ணணும். ஆனா பழைய ட்யூனை வெச்சுக்கிட்டு இடையில் ‘காச் மூச்’னு கத்தறதும், சத்தமான மியூசிக்கும் கேட்கவே பரிதாபமாயிருக்கு. ஏன் இப்படிப் பண்ணணும். செய்தா ‘பழமை மாறாமல்’ செய்யணும். இப்ப கூட ‘பில்லா’ படத்துல ‘மை நேம் இஸ் பில்லா’ பாட்டை எனக்குப் போட்டுக் காண்பிக்கிறதுக்காக வர்றேன்னு சொன்னாங்க. நான் தவிர்த்துட்டேன். என்னோட வாழ்த்து எப்பவும் எல்லார்க்கும் இருக்கும். ஒரு ரசிகனா நான் இதை ரசிக்கவில்லை. இளைய தலைமுறைக்கு விஷம் பிடிக்குதுன்னா நாம விஷம் கொடுக்கலாமா? இது தப்பு. சரியில்ல...

‘நினைத்தாலே இனிக்கும்’ படத்துக்காக கம்போஸ் செய்தபோது, ஒரு கிராமத்துப் பாடலை நான் பாடிக் காண்பித்தேன். ‘கத்தாழங் காட்டுக்குள்ள... விறகொடிக்கப் போனபுள்ள’ இதுதான் அந்தப் பாட்டு. அதையே கண்ணதாசன், ‘எங்கேயும் எப்போதும்’னு உடனே பாடலை எழுதிக் கொடுத்திட்டார். இப்படி ஒன்றிலிருந்து ஒன்று வந்தால் தப்பில்லை. எதையும் கெடுத்திடக் கூடாது’’ என்றவர், ‘‘சொல்லத்தான் நினைக்கிறேன்.. உள்ளத்தால் துடிக்கிறேன்’’ என்று உச்ச ஸ்தாயியில் பாட ஆரம்பித்தார்..


"புது ராகம் படைப்பதாலே நானும் இறைவனே" என்று வைரமுத்து ஒரு பாடல் இயற்றி இருப்பார்.. மற்றவர்களுக்கு அது எப்படியோ, என்னை பொறுத்தவரையில் அது சரிதான்.. இசை அனைவருக்கும் பொதுவானது தான் என்றாலும் ஒரு பாடல் என்று வரும் போது அதை உண்டாக்கியவருக்கே அது சொந்தம் என்பது என் தாழ்மையான கருத்து..

"இளைய தலைமுறைக்கு விஷம் பிடிக்குதுன்னா நாம விஷம் கொடுக்கலாமா? இது தப்பு. சரியில்ல..." ---- திரு M S V அவர்களது இந்த கருத்தில் எனக்கு முழுமையான உடன்பாடு இருக்கிறதென்பதால்தான் நான் எனது எண்ணங்களை இங்கு பதிந்து வைத்திருக்கிறேன்..

ரீமிக்ஸ் பாடல் தான் எனக்கு பிடித்திருக்கிறதென்று அர்த்தமில்லாமல் 50 முறை, 100 முறை என்று அந்த பாடலைக் கேட்பவர்கள், தயவு செய்து அதன் உண்மையான வடிவத்தை ஒருமுறையாவது கேட்டு இந்த இசைக்கலைங்கனுக்கு மரியாதை செய்ய வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்..

நன்றி!!