Pages

Thursday, December 29, 2011

"என்றென்றும் ராஜா" - இசையுடன் என் அனுபவம்..

நான்  மிகவும் ஆவலுடன் காத்திருந்த "என்றென்றும் ராஜா" நிகழ்ச்சியை கடைசியில் பார்த்தாகி விட்டது..
இதே போன்றதொரு நிகழ்ச்சியை  ஜெயா தொலைகாட்சியில் முன்பே பார்த்து மிகவும் ரசித்த காரணத்தினால், இந்த முறை என் எதிர்பார்ப்பு மிகவும் அதிகமாகவே இருந்தது.. ஆனால், என் எதிர்பார்ப்பு முழுமையாக ஈடு செய்யப்படவில்லை என்பது என்னவோ உண்மை தான்.. ஆனாலும், ஒரு ரசிகனாக என்னை மகிழ்வித்த தருணங்கள் இதிலும் இருந்தது..

> நுழைவுச்சீட்டு முன்பதிவு செய்யும் போதே என்னை எரிச்சல் படுத்திய விஷயம் - நுழைவுச்சீட்டில் இருக்கை எண் போடப்படாமல், முன்னே வருபவர்க்கு முன் இருக்கைகளில் இடம் என்ற ஏற்பாடு..
> மாலை ஐந்து மணிக்கு நிகழ்ச்சி ஆரம்பிக்கும் என்று நுழைவுச்சீட்டில் போடப்பட்டிருந்தது.. அதனால் மாலை நான்கு மணிக்கே, எனக்கு குறிப்பிட்டிருந்த நேரு உள்விளையாட்டரங்கின் ஐந்தாம் எண் நுழைவாயிலுக்கு சென்றால், அங்கே மிகப்பெரிய கூட்டம் ஏற்கனவே காத்திருந்தது.. வரிசை முறை ஏதும் இல்லை.. பெண்கள், வயதானவர்கள், கையில் குழந்தைகளுடன் வந்திருந்தவர்கள் என்று அனைவருமே சற்று எரிச்சலோடு காணப்பட்டனர்..
> ஐந்து மணிக்கு வெளிக்கதவை திறந்து உள்ளே அனுப்பினார்கள்.. வரிசை முறை எதுவும் பின்பற்றப்படாததால், பலத்த நெரிசலுக்கிடையே தான் உள்ளே செல்ல முடிந்தது.. இரண்டு மூன்று காவலாளிகள் இருந்தும் அவர்கள் எதுவும் செய்யாமல் அமைதி காத்திருந்தது ஆச்சர்யமாக இருந்தது..
> வெளி வாசலை கடந்து உள்ளே சென்றபின், மையஅரங்கிற்கு உள்ளே நுழையும் மற்றுமோர் வாசல்.. நல்லவேளையாக அங்கே வரிசை முறை கடைபிடிக்கப்பட்டிருந்தது..
> உள்ளே சென்று இடம் பிடித்து அமருவதற்கே மணி ஐந்தரை ஆகிவிட்டிருந்தது,..



> ஆறரை மணிவரை ரசிகர்கள் வந்து கொண்டே இருந்தனர்.. கூட்டம் கட்டுக்கடங்காமல் போய்விட்டிருந்தது மகிழ்வான விஷயம் தான்.. அனால், இருக்கை எண் இல்லாமல், நுழைவுச்சீட்டு  அச்சிடப்படிருந்ததன் காரணம் அப்போது தான் தெரிந்தது.. ஆம், அனைத்து இருக்கைகளுமே  நிரம்பி விட்ட பின்பும், நிறைய பேர் நடை வழிப்பாதையில் அமர்ந்தும்/இருக்கைகளுக்கு பின்னால் நின்று கொண்டும் இருந்தனர்..

> இவையனைத்துமே நிர்வாக குறைபாடுகள் தான் என்பதை தவிர வேறெதுவும் இல்லை.. 

> ஆறரை மணிக்கு நிகழ்ச்சி துவங்கியது.. முதலில், இளையராஜா அழைத்து வந்திருந்த ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த இசை குழுவினர் சிறுது நேரம் தங்கள் இசை வல்லமையை காட்டினர்..  எனக்கு மிகவும் பிடித்திருந்தது.. அனால், பெரும்பாலானோர் பொறுமையிழந்து காணப்பட்டனர்.. ஒருவாறாக அது முடிந்த பின் சரியாக ஏழுமணிக்கு நம் இசைஞானி அரங்கில் தோன்றினார்.. கரகோஷம் அடங்குவதற்கு சற்று நேரம் பிடித்தது..

வந்த உடனேயே, என் "என் ஒரே நண்பனை அழைத்து வாருங்கள்" என்று சொல்லி தன ஆர்மோனிய பெட்டியை வாங்கி, தரையில் துண்டை விரித்து சம்மணமிட்டு அமர்ந்து, தனது விருப்பப் பாடலான "ஜனனி ஜனனி" பாடலை பய பக்தியுடன் இனிமையாக பாடி நிகழ்ச்சியை ஆரம்பித்து மிகவும் அருமையாக இருந்தது..


> நிகழ்ச்சி ஆரம்பித்ததும், அரங்கிற்குள் புகைப்படம் எடுக்க தடை செய்யப்பட்டது..  அதையும் மீறி அவ்வப்போது சிலர் புகைப்படம் எடுக்க, அங்கிருந்த காவலாளிகள் அவர்களிடம் சண்டையிட்டு கொண்டிருந்தனர்..

 > இரண்டாவது அம்மாவின் புகழ் பாடும், "அம்மாவென்றழைக்காத உயிரில்லையே" பாடலை கே. ஜே. யேசுதாசை அழைத்து பாடவைத்தார்..
பாடலை துவங்கும் முன், 'இது அந்த அம்மாவிற்காக' என்று இளையராஜா குறும்புடன் தன் விரல்களை வான் நோக்கி சுட்டிக் காண்பித்தார்.. :-)

> மறைந்து விட்ட தன் மனைவிக்காக சமர்ப்பணம் என்று மீண்டுமொரு அம்மா பாடலான "நானாக நான் இல்லை தாயே" பாடலையே எஸ். பி. பாலசுப்ரமணியத்தை அழைத்து பாடவைத்தார்..

> கே. ஜே. யேசுதாசின் அறிமுகத்திற்கு எழும்பிய கரவொலி, எஸ். பி. பாலசுப்ரமணித்தின் அறிமுகத்திற்கு எழும்பிய கரவொலியை விட அதிகமாக இருந்தது சற்று ஆச்சர்யமாக இருந்தது.. :-)
அனால் என்னை பொறுத்தவரையில் யேசுதாஸ் பாடியதில், "ஒரு ராகம் பாடலோடு காதில் கேட்டதோ", "என் இனிய பொன் நிலாவே" மட்டும் தான் இனிமையாக இருந்தது.. மற்ற பாடல்கள் அனைத்தையும் கொஞ்சம் சொதப்பி விட்டார் என்று தான்  சொல்லவேண்டும் .. இசை தகடுகளில் அவரது இனிமையான குரலில் பாடல்களை கேட்டு பழக்கப்பட்ட எனக்கு, மேடையில் சற்று தடுமாற ஆரம்பித்திருக்கும் அவரது குரல் அவ்வளவாக சுகப்படவில்லை..  வயதாகிவிட்டிருப்பது காரணமாக இருக்கலாம்..
> "This song is very close to my heart" என்ற முன்னுரையுடன் அவர் பாட ஆரம்பித்த "பூவே செம்பூவே உன் வாசம் வரும்" பாடலை துவக்கத்தில் நன்றாக ஆரம்பித்தாலும், பாடலின் இடையில் வரும் வயலின் இசை முடிவதற்கு முன்பே அவர் அடுத்த சரணத்தை பாட ஆரம்பிக்க, இளையராஜா அதை கண்டு பிடித்து பாடலை அப்படியே நிறுத்தி வைத்து யேசுதாசை மீண்டும் சரியாக இசையோடு இணைந்து பாட வைக்க முயற்சித்தார்.. இரண்டாவது முறையும் யேசுதாஸ் அதே தவறை செய்ய, ராஜா மறுபடியும் பாடலை நிறுத்தி  யேசுதாசுடன் ஒரு நிமிடம் பேசி தவறை செய்து மூன்றாவது  முறை சரியாக பாடவைத்தார்.. பாடல் முடித்ததும், "இந்த மேடை என்னை பொறுத்தவரையில்  ரெக்கார்டிங் ஸ்டூடியோ மாதிரி தான்.. தவறுகளை சரி செய்து கொண்டே பாடுகிறேன்" என்று சிரித்தவாறே சமாளித்தார்..

> இசைத்துறையில் இளையராஜாவிற்கு முன்னரே காலடி எடுத்து வைத்தவர் யேசுதாஸ்.. முதலில் மேடைக்கு வந்த போது "என் அன்புத்தம்பி" என்று இளையராஜாவை அழைத்ததோடு மட்டுமில்லாமல் எந்த வித ஈகோவும் இன்றி இளையராஜா சொன்ன திருத்தங்களை ஏற்று மூன்று முறை திரும்பவும் பாடியது அவரது பெருந்தன்மைக்கு நல்லதொரு சான்று.. கடைசி முறை சரியாக பாடும்போது, பாடலில் வரும் "
நான் செய்த பாவம் என்னோடு போகும்"  என்பதை இளையராஜாவை பார்த்து சிரித்துகொண்டே பாடியதை அரங்கில் இருந்த அனைவரும் ரசித்தனர்..

> எந்த சொதப்பல்களும் இல்லாமல் அனைத்து பாடல்களையும் அருமையாக பாடினார் எஸ். பி. பி.. பல வருடங்களுக்கு முன்பு பாடிய "பருவமே, புதிய பாடல் பாடு", "சுந்தரி கண்ணால் ஒரு சேதி", "மடைதிறந்து பாடும் நதி அலை நான்" பாடல்களை, அவர் இன்று பாடி கேட்க்கும் போதும் இனித்தது.. வயதாகி விட்டாலும் அவர் தன் குரலை இன்றும் இளமையாகவே வைத்திருக்கிறார்.. அவர் பாடிய
"மடைதிறந்து பாடும் நதி அலை நான்" பாடலுக்கு மட்டும் தான், மொத்த அரங்கமும் "Once More" கேட்டது.. இளையராஜா அதை நாசூக்காக தவிர்த்துவிட்டார்..


> ஒவ்வொரு பாடல் பாடி முடித்து மேடையில் இருந்து இறங்கும்போதும், ரசிகர்கள் அனைவரையும் எஸ். பி. பி பணிவுடன் தலை குனிந்து வணங்கி விடைபெற்றது  நெகிழ்வாக இருந்தது.. மற்றும் சில சமயங்களில், மேடையிலிருந்த இசை கலைஞர்களையும் அருகில் சென்று தட்டி கொடுத்து பாராட்டி விட்டு சென்றார்..
> மனோ, எஸ். ஜானகி இருவருமே நிகழ்ச்சியில் பாடாதது வருத்தமளித்தது.. அரங்கிற்கு வந்திருந்தனரா என்று கூட தெரியவில்லை..

> ஜானகி பாடிய பாடல்கள் அனைத்தையும் சித்ராவே பாடினார்..
"பருவமே, புதிய பாடல் பாடு, "சுந்தரி கண்ணால் ஒரு சேதி" என்று அவற்றில் பெரும்பாலானவற்றை ஏற்றுக்கொண்டாலும், ஜானகியின் "புத்தம் புது காலை" பாடலை மட்டும் சித்ரா பாடுவதை என்னால் அனுபவித்து கேட்க இயலவில்லை..  அது ஜானகியின் குரலில் மட்டுமே இனிக்கும் ஒரு பாடல் .. 

> தான் முதல் முதலில் எழுதிய பாடல் என்கிற வகையில் "இதயம் ஒரு கோவில்" பாடலை இளையராஜா பாடினார்..

> கண்ணதாசனுடன் தனக்கு ஏற்பட்ட இனிமையான அனுபவங்களை நினைவு கூர்ந்து கவிஞருக்கு புகழ்மாலை சூட்டினார் இளையராஜா..

> மறைந்த பாடகர் மலேசியா வாசுதேவனுக்காக என்று, அவர் பாடாத ஒரு பாடலை சமர்பித்தார் இளையராஜா..  என்ன பாடல் என்று நினைவில் இல்லை..

> நிகழ்ச்சியை தொகுத்தளித்தவர் நடிகர் பிரகாஷ்ராஜ்.. கடந்த முறை நடிகர் பார்த்திபன் தொகுத்தளித்த போது இருந்த சுவாரசியம் இந்த முறை சுத்தமாக இல்லை.. கடந்த முறை இளையராஜா "நான் தேடும் செவ்வந்தி பூவிது" பாடலை பாடும் முன் அவர் கொடுத்த முன்னுரை அவ்வளவு அழகாக இருக்கும்.. இந்த முறை அது போல் எந்த முன்னுரையும் இல்லாமல், அதே பாடலை இளையராஜா பாட ஆரம்பித்தது என்னவோ போல் இருந்தது..

> சிறப்பு விருந்தினராக ஹிந்தி திரைப்பட இயக்குனர் பால்கி வந்திருந்து, இளையராஜாவின் பின்னணி இசை சேர்க்கும் திறமையை பற்றி புகழ்ந்து பேசினார்.. அதற்க்கு "பா" படத்தில் வரும் ஒரு காட்சியை பின்னணி இசையில்லாமல் முதலில் திரையில் ஓடவிட்டு, பின்னர் பின்னணி இசையுடன் அதை மறுபடியும் ஓடவிட்டு  - ராஜாவின் இசை அந்த காட்சிக்கு எப்படியெல்லாம் மெருகேற்றி இருக்கிறது என்று அனைவருக்கும் பொறுமையாக விளக்கினார்..

> நிகழ்ச்சியில் தோன்றிய மற்றுமொரு சிறப்பு விருந்தினர், இளையராஜா பெரிதும் மதிக்கும் முதுபெரும் கர்னாடக இசை வல்லுநர் திரு. பாலமுரளிகிருஷ்ணா.. இளையராஜா இசையில் அவர் பாடிய "சின்ன கண்ணன் அழைக்கிறான்" பாடலை முழுவதுமாக பிசிறில்லாமல் கம்பீரமாக பாடினார்..


> பெரும்பாலான பாடல்கள் அனைத்தையும் எஸ். பி. பி, சித்ரா, இளையராஜா என்று மூவர் மட்டுமே பாடினர்.. ஹரிஹரன் "நீ பார்த்த பார்வை பொருள் நன்றி" என்ற ஒரே பாடலை மட்டும் பாடி விட்டு சென்றார்.. அந்த பாடலுக்கு இளையராஜாவே ஹார்மோனியம் வாசித்து மிகவும் அருமையாக இருந்தது..

> இன்றைய தலைமுறை பாடகர்கள் கார்த்திக், ஹரிசரண் இருவரும் வந்து தலா ஒரு பாடலை பாடிச் சென்றனர்... கார்த்திக் பாடிய "ஏதோ மோகம், ஏதோ தாகம்", ஹரிசரண், ரீட்டா பாடிய "சுந்தரி நீயும் சுந்தரன் நானும்" என்று இரு பாடல்களுமே அருமையாக இருந்தது.. இவர்களை இன்னும் சில பாடல்களை பாட வைத்திருக்கலாம்..

> பழைய பாடகர்கள் வரிசையில் தீபன் சக்கரவர்த்தியும், உமா ரமணனும் இணைந்து "பூங்கதவே  தாழ் திறவாய்" பாடலை அருமையாக பாடினர்.. பாடல் ஆரம்பிக்கும் போதே, அதன் முகப்பு இசையில் இசைக்குழுவை சேர்ந்த ஒருவர் சொதப்ப, பாடலை நிறுத்தி விட்டு - அவர் தவறை திருத்தி மீண்டும் முதலிலிருந்து பாடலை ஆரம்பித்தார் இளையராஜா.. இந்த நிகழ்வு, அவர் இசையில் எவ்வளவு "perfectionist" என்பதை மற்றுமொருமுறை நமக்கு உணர்த்தியது..


> சமீபத்தைய படங்களில் தனக்கு பிடித்த படம் என்று, "அழகர்சாமியின் குதிரை" திரைப்படத்தின் பின்னணி இசையை ஐந்து நிமிட நேரம் இளையராஜா வாசித்து காட்டினார்..

> இளையராஜாவின் மகள் பவதாரணி, ஹிந்தி திரைப்படமான "பா"-விலிருந்து "Ghum Shum Ghum" என்ற ஒரு ஹிந்தி பாடலை பாடினார்..

"சிம்பொனி என்றால் என்ன" என்று பிரகாஷ்ராஜ் மேடையில் இளையராஜாவைப் பார்த்து கேட்க, "பட்டிகாட்ல இருந்து வந்த என்கிட்ட ஏங்க அதபத்தி கேக்குறிங்க" என்று சிரிப்புடன் பதிலளித்த இளையராஜா - பின்னர் தான் இசையமைத்த சிம்பொனியிலிருந்து சில இசைக்குறிப்புகளை வாசித்து காண்பித்து அனைவரையும் பரவசப்படுத்தினார்.. அரங்கில் இருந்து பலர், அதை தங்கள் கைபேசியில் பதிவு செய்ததை காண முடிந்தது..

> மணி பத்தரையை தாண்டியும் நிகழ்ச்சி முடிவுறாமல் சென்றுகொண்டே இருந்தது.. எனக்கு நேரமாகிவிட்டிருந்த காரணத்தினால், நான் கிளம்பிவிட்டேன்..

> நான் தொகுத்திருந்த பத்து பாடல்களில் ஒன்று கூட பாடப்படவில்லை.. :-)

> இளையராஜா எழுதி, இசையமைத்து, பாடிய ஒரு பாடலில் வரும் வரிகள் இவை..
"எவரெவராகினும் அவர்க்கொரு துயரம்..
உயரிசை கேட்டிடில் துயர் மனம் உருகும்..
இன்னிசை, அது என்னிசை..
எவர்க்கும் பொதுவென்று அள்ளிக் கொடுப்பேன் "
இந்த வரிகள் உண்மை தான் என்பதை நேற்றைய நிகழ்ச்சி எனக்கு மீண்டுமொருமுறை பலமாக உறுதிப்படுத்தியது..

குறிப்பு: நிகழ்ச்சியின் மேலதிக படங்களை, இங்கே சென்று பார்வையிடலாம்..
 
நன்றி!!

Saturday, December 24, 2011

என்றென்றும் ராஜா - இசை நிகழ்ச்சி

மிகவும் பரபரப்பாக இருக்கிறது உள்ளுக்குள்..
ஆம், ஜெயா தொலைக்காட்சி வழங்கும் "என்றென்றும் ராஜா" இசை நிகழ்ச்சிக்கு  டிக்கெட் முன்பதிவு செய்திருக்கிறேன்..
இது வரையிலும் இந்த மாதிரியானதொரு நிகழ்ச்சிக்கு நான் சென்றதில்லை.. முதன் முறையாக இப்போது செல்லவிருக்கிறேன்..



வரும் 28 -ஆம் தேதி நேரு உள்விளையாட்டரங்கில் நடக்கவிருக்கும் என்றென்றும் ராஜாவை காண மிகவும் ஆவலாய் இருக்கிறது..
இசையின் இசையை ரசித்துவிட்டு வந்து என்னுடைய அனுபவங்களை இங்கு கண்டிப்பாக பதிவு செய்கிறேன்.. :-)

குறிப்பு: நிகழ்ச்சிக்கு வர ஆவலாய் இருப்பவர்கள், இங்கு சென்று டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம்.. 

நன்றி!!

Wednesday, December 21, 2011

இளையராஜா - பிடித்த பத்து

இசை சம்பந்தமான நிகழ்ச்சிகளில் விஜய் தொலைகாட்சியை விட ஜெயா தொலைகாட்சி சற்றே மேலானது.. தனி மனித துதிகள், வணிக நோக்கிற்காக வலிந்து திணிக்கப்பட்ட தேவையற்ற சண்டைகள் என்று எதுவும் இல்லாமல் நன்றாகவே இருக்கும்..  ஆனால்,  அத்தகைய நிகழ்ச்சிகள் மிக அரிதாகவே ஒளிபரப்பாகும் என்பதுதான் சற்று கவலையளிக்கக் கூடிய விஷயம்.. அவற்றில் நான் விரும்பி பார்த்தது - சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு ஒளிபரப்பாகி வந்த  எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் "என்னோடு பாட்டு பாடுங்கள்"..  தற்பொழுது விரும்பி பார்ப்பது - பல தரப்பட்ட இசை கலைஞர்களுடன் பாடகர் மனோ உரையாடும் "மனதோடு மனோ"..

இப்போது, கடந்த சில நாட்களாக ஜெயா தொலைகாட்சியில் விரைவில் ஒளிபரப்பாகவிருக்கும் "என்றென்றும் ராஜா" என்கிற இளையராஜாவின் இசை கச்சேரி சம்பந்தமான முன்னோட்ட காணொளி  ஒளிபரப்பாகி வருகிறது.. இதே போல், சில வருடங்களுக்கு முன்பு ஏற்கனவே ஜெயா தொலைகாட்சியில் ஒரு நிகழ்ச்சி நடை பெற்று பெரும் வரவேற்ப்பை பெற்றது என்பதால் இந்த நிகழ்ச்சியை நான் ஆவலோடு எதிர்நோக்கியுள்ளேன்..

என்றென்றும் ராஜா - முன்னோட்டம்



பிடித்த பத்து
இந்த விளம்பரத்தில் வரும் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், நம் இசைதேவனின் இசையில் நமக்கு பிடித்த 10 பாடல்களை நாம் எழுதி அனுப்ப வேண்டும்.. அவற்றில் பெரும்பாலானோரது விருப்பதை கணக்கிட்டு சிறந்த பத்து  பாடல்களை ராஜா மேடையில் அரங்கேற்றுவார் என்பது தான்..

கடு மழை பெய்தபின், சமுத்திரத்தில் அந்த மழை துளிகளை தேடுவது போலான ஒரு வேலை இது..  ராஜாவின் இசையுடனேயே பெரும்பாலான மணித்துளிகளை தினமும்  கடக்கும் என் போன்ற ராஜாவின் ரசிகர்கள் - எதை விடுவது எதை பிடிப்பது போலானதொரு நிலையில் தான் இருப்பார்கள் என்பது திண்ணம்..



சரி, என் பங்கிற்கு எனக்கு பிடித்த பத்து என்னவென்று நானும் இங்கே சொல்லி விடுகிறேன்.. அனால், இது தான் என்னளவிலான சிறந்த பத்து என்று முடிவு செய்திட தேவையில்லை.. அந்த சமுத்திரத்தில். இவை என் கைகளில் அகப்படும் பத்து துளிகள் மட்டுமே என்று அர்த்தம் கொள்ள வேண்டும்.. :-)

கூடுமானவரை நன்றாக இசையமைக்கப்பட்டு, அவ்வளவாக பிரபல்யமாகாத பாடல்கள், இளையராஜாவே பாடிய பாடல்கள் என்று முயற்சி செய்திருக்கிறேன்.. கண்டிப்பாக இது ஒரு தரவரிசை கிடையாது.. என் நினைவில் வந்த பிடித்த பத்து மட்டுமே..

1. சந்திரரும் சூரியரும் (அவதாரம்)
நடிகர் நாசர் நாட்டுப்புற கலைஞர்களின் வாழ்வியலை பதிவு செய்த ஒரு நல்ல திரைப்படம்.. இளையராஜா அதில் தனி ஆவர்த்தனமே நடத்தி இருப்பார்.. அதில் எனக்கு பிடித்த அருமையான பாடல் "சந்திரரும்  சூரியரும்" என்கிற பாடல்.. Grandeur Music என்றால் என்ன என்று எனக்கு அறிமுகப்படுத்தியது இந்த பாடல் தான்.. (சமீபத்தில் வெளிவந்த ஆயிரத்தில் ஒருவன் திரைபடத்தில் பார்த்திபன் சோழ மன்னனாக அறிமுகமாகும் காட்சியில் இசைக்கப்படும் இசையும் இந்த வகையை சேர்ந்தது தான்).. ஆனால், அன்று தொண்ணூறுகளின் மத்தியிலேயே மிகவும் அனாயசமாக இசைத்துக் காட்டியிருப்பர் இளையராஜா.. அதோடு மட்டுமில்லாமல், ஒரு நாட்டுப்புற கலைஞன் தன் lethargic குரலில், தான் இந்த நாட்டின் மன்னனானால்  என்னவெல்லாம் செய்வேன் என்று பாடுவதுபோல் அருமையாக பாடியும் இருப்பார்.. நீங்கள் உற்று நோக்கினால் இந்த பாடல் ஒரு விதமான மேற்கத்திய இசை சாயலில் இசைக்கப்பட்டிருப்பதை உணரலாம்.. அருமையான orchestration  என்கிற வகையில் எனக்கு மிகவும் பிடிக்கும்.. மிக அரிதாக ராஜா உச்சஸ்தாயில் பாடுவதையும் இந்த பாடலில் நீங்கள் கேட்கலாம்..
2. அதிகாலை நேரமே (மீண்டும் ஒரு காதல் கதை)
எஸ்.பி. பாலசுப்ரமணியம், எஸ். ஜானகி குரலில் வந்த இந்த அருமையான பாடலை எப்போது கேட்டாலும் என் மனதில் ஒரு விதமான அமைதி ஏற்படும்.. எஸ்.பி.பி மிகவும் அனுபவித்து பாடியிருப்பார் இந்த பாடலை.. பிரதாப் போத்தன் இயக்கிய இந்த திரைப்படம் எண்பதுகளின் துவக்கத்தில் வந்தது.. குறிப்பாக இந்த படத்தின் பாடல்கள் மட்டுமல்லாமல் பின்னணி இசையும் மிகவும் அற்புதமாக என் மனதை வருடி செல்லும்..

3. அப்பனென்றும் அம்மையென்றும் (குணா)
இளையராஜாவிடம் நன்றாக வேலை வாங்கக்கூடியவர்களில் கமல்ஹாசன் மிகவும் முக்கியமானவர்.. அவரது "குணா" திரைபடத்தில் இடம்பெற்றிருக்கும் இந்த பாடல், வாலியின் வரிகளில் விளைந்தது.. இந்த பாடலை சற்று உற்று நோக்கினால் லௌகிக வாழ்க்கையை வெறுத்து, துறவறத்தை நோக்கி நடைபோடும் ஒருவனது எண்ணத்தின்  வெளிப்பாடாக அமைந்திருப்பதை காணலாம்.. இளையராஜாவின் குரலும், இந்த பாடலுக்கான இசைகோர்ப்பும் ஒரு விதமான அமானுஷ்ய உணர்வை அள்ளி தெளிக்கும்..(இளையராஜாவின் தனிப்பாடல்களில் "ஒன்றான உன் பாவ கணக்கை பட்டியல் போட்டால்" என்பது தான் இந்த "அப்பனென்றும் அம்மையென்றும்" பாடல் உருவாக மூலகாரணமாக இருந்தது என்று முன்பொருமுறை கமல்ஹாசன் தன் பேட்டியில் குறிப்பிட்டிருந்தார்.. அந்த வகையிலே இது ராஜா எழுதிய பாடலாக தான் இருக்கும் என்று எனக்கு இன்றளவும் ஒரு நம்பிக்கை உள்ளது)..


4. அமுதே தமிழே (கோயில் புறா)
இளையராஜாவின் ஆரம்ப காலகட்டத்தில் வந்த இந்த திரைபடத்தின் பாடல்கள் அனைத்தும் மிகவும் அருமையாக இருக்கும்.. குறிப்பாக இந்த "அமுதே தமிழே" பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும்.. தமிழை போற்றும் இந்த பாடல் எனது விருப்ப பாடலாக வந்ததில் எந்த ஆச்சர்யமும் இல்லை.. எனக்கு மிகவும் பிடித்த இரு பெண் குரல்களில் (பி. சுசீலா, உமா ரமணன்) உருவான இந்த பாடலில் வரும் ஆண் குரல் இளையராஜாவின் ஆசான் என்றழைக்கபடும் ஜி. கே. வெங்கடேஷினுடயது என்று முன்பு எங்கோ படித்த ஞாபகம்.. முந்தய காலகட்டங்களில் ராஜாவினது இசை கச்சேரிகளில் தவறாமல் பாடப்படும் பாடலும் கூட.. அந்த வகையில் அவருக்கும் இது பிடித்தமான பாடலாகவே இருக்கும் என்று நினைக்கிறேன்..

5. கமலம் பாத கமலம் (மோகமுள்)
எழுத்தாளர் தி. ஜானகிராமன் எழுதியவற்றுள் சிறந்த புதினம் என்று இன்றளவும் போற்றப்படுவது  "மோகமுள்".. அதை இயக்குனர் ஞான ராஜசேகரன், இளையராஜாவின் இசையில் திரைப்படமாக வெளிக் கொண்டுவந்தார்.. கர்நாடக இசையோடு தொடர்புடைய புதினம் இது என்பதால் நம் இசைஞானி ஒரு ராஜபாட்டையே நடத்தி இருப்பார்.. பாடல்கள், பின்னணி இசை என்று அனைத்தும் அருமையாக இருக்கும்.. நான் குறிப்பிட்டிருக்கும் "கமலம் பாத கமலம்" பாடலை கேட்டுப்பாருங்கள்.. கே. ஜே. யேசுதாசின் அற்புதமான குரல், இளையராஜாவின் தெய்வீகமான இசை, வாலியின் அற்புதமான வரிகள் என்று ஒன்றிற்கொன்று போட்டி போட்டு இந்த பாடல் சிறப்பாக வடிவம் பெற்றிருக்கும்.. திரை பாடல் என்றில்லாமல் பக்தி இலக்கியத்திலும் சேர்க்கும் தகுதி படைத்தது இந்த பாடல் என்பது என் தனிப்பட்ட கருத்து..


6.பொன்னோவியம் (கழுகு)
திரைத்துறையில் ராஜாவை அறிமுகப்படுத்திய பஞ்சு அருணாச்சலதினுடைய அந்நாளைய பிரம்மாண்ட தயாரிப்பு கழுகு.. ஆரம்ப காலங்களில்  ராஜாவினது இசையில் வந்த பரீட்சார்த்தமான முயற்சிகளில் பொன்னோவியம் பாடல் மிக முக்கியமானது.. இசை கருவிகளின் ஆதிக்கத்தை பெருமளவு குறைத்து பெரும்பாலும் ஹம்மிங் (Humming) முறையிலேயே கொண்டு சென்றிருப்பார்.. இரு வேறு விதமான ஹம்மிங்களை ஒரே நேரத்தில் கொண்டுவந்து அதன் மேல் இளையராஜாவும் எஸ். ஜானகியும் செய்யும் ஹம்மிங்கை இன்று கேட்டாலும் இனம்புரியாத ஒரு உற்சாகம் தொற்றிக்கொள்ளும்.. ராஜாவின் அந்நாளைய tender voice இந்த பாடலின் மிகப்பெரிய பலம்..


7. பூவே நீ நானாகவும் (கை கொடுக்கும் கை)
என் அபிமான இயக்குனர் மகேந்திரனின் இயக்கத்தில் வெளிவந்த படம் "கை கொடுக்கும் கை".. அதில் இடம் பெற்ற இந்த பாடல் மிக அருமையானதொரு மெலடி.. இதுவும் ராஜாவே பாடியே பாடல் தான்.. கண் பார்வை தெரியாத தன் மனைவிக்கு  அவளது கணவன் ஆதரவாக பாடும் பாடல் இது.. இரவு நேரங்களில் தூங்கப்போகும் சமயங்களில் நான் தவறாமல் கேட்க்கும் பாடல்களில் இதுவும் ஒன்று.. இசை தாலாட்டு என்ற வார்த்தையின் அர்த்தம் இந்த பாடலுக்கு மிகவும் பொருந்தும்..

8. ஒரு கணம் ஒரு யுகமாக (நாடோடி தென்றல்)
இளையராஜாவின் சில நல்ல பாடல்கள் படங்களில் இடம் பெறாமலே போனதுண்டு.. (இது போன்ற பாடல்களை தொகுத்து விரைவில் ஒரு பதிவிட முயற்சிக்கிறேன்).. அவற்றில் எனக்கு பிடித்த முக்கியமான பாடல் "ஒரு கணம் ஒரு யுகமாக".. எஸ்.ஜானகியும் இளையராஜாவும் போட்டி போட்டு கொண்டு மிகவும் லயித்து பாடி இருப்பார்கள்.. காதலனை பிரிந்த காதலி முதல் பகுதியை பாடுவது போல ஜானகி உருகி இருப்பார்.. பின்பு காதலன் அவளை தேடி வந்து விட்டான் என்பது போல ராஜா அடுத்த பகுதியை ஆரம்பிப்பார்.. பிரிவு, சேர்க்கை என்று இரண்டு பகுதியுமே ஒரே தாளத்தில் மிகவும் மெதுவாகவே செல்வது போல தோன்றினாலும் இரண்டையுமே நன்றாகவே வேறுபடுத்தி பார்க்க முடியும்.. குறிப்பாக 'வானமும் பூந்தென்றலும்' என்று இளையராஜா ஆரம்பிக்கும் போது கூடுதலாக வயலினும், தபேலாவும் சேர்ந்து கொண்டு பிரிந்தவர் கூடினர் என்கிற உத்வேகத்தை கொடுக்கும்.. காதலில் இருப்பவர்கள், காதலின் ஆரம்ப கட்டங்களில் இருப்பவர்கள், காதலியை தற்காலிகமாக பிரிந்தவர்கள் போன்றோருக்கு மிகவும் பிடிக்கும்..

கூடுதல் தகவல்: மிக அரிதாக சில படங்களுக்கு அனைத்து பாடல்களையும் தானே  எழுதி இசையமைத்திருப்பார் இளையராஜா.. அந்த வகையிலே தனது நண்பர் பாரதிராஜா இயக்கிய இந்த படத்தின் அத்தனை பாடல்களையும் எழுதி இசையமைத்ததோடு மட்டுமல்லாமல் கதாசிரியராகவும் உழைத்திருந்தார் ஆம், இந்த படத்தினுடைய கதை இளையராஜாவினுடயது தான்.. பாரதிராஜாவின் இயக்கம், இளையராஜாவின் இசை/பாடல்கள்/கதை, எழுத்தாளர் சுஜாதாவின் வசனம் என்று பெரும் ஜாம்பவான்கள் இணைத்த படம் இது..

9. Kaise Kahoon (நண்டு)
இயக்குனர் மகேந்திரனின் நண்டு திரைபடத்தில் இடம்பெற்ற இனிமையான ஹிந்தி பாடல் 'Kaise Kahoon'.. எண்பதுகளில் இருந்த இசை மாதிரிகளில், ராஜாவின் இசையில் ஒரு மென்மையான ஹிந்தி பாடல் கேட்டால் எப்படி இருந்திருக்கும் என்று யோசிப்பவரா? இந்த பாடல் உங்களுக்கு தான்.. எனக்கு மிகவும் பிடித்த திரைப்படம் நண்டு.. எழுத்தாளர் சிவசங்கரி எழுதிய "நண்டு" என்கிற நாவலை தழுவி எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்தில் - தீபன் சக்கரவர்த்தி பாடிய "ஆடுதம்மா ஆற்றின் அலைகள்", உமா ரமணன் பாடிய "மஞ்சள் வெயில் மாலையிட்ட பூவே", மலேசியா வாசுதேவன் பாடிய "அள்ளி தந்த பூமி அன்னையல்லவா" என்று அனைத்து பாடல்களுமே என்னுடைய விருப்ப பாடல்கள் தான்.. நான் தேர்வு செய்திருக்கும் "Kaise Kahoon" என்கிற இந்த பாடலை பாடியவர் பூபேந்திர சிங் எனும் வடமொழி பாடகர்.. இந்த பாடலை எழுதியவர் கருப்பு வெள்ளை காலகட்டங்களில் மிகவும் பிரபலமாக இருந்த பின்னணி பாடகர் பி.பி. ஸ்ரீநிவாஸ் என்பது ஆச்சர்யமளிக்கும் செய்தி.. உறக்கமில்லா இரவுகளை விரட்ட இந்த பாடல் ஒரு நல்ல நிவாரணி..

10.மந்திரம் இது மந்திரம் (ஆவாரம்பூ)
புகழ்பெற்ற மலையாள இயக்குனர் பரதன், தேவர் மகனுக்கு பின் இயக்கிய திரைப்படம் "ஆவாரம்பூ".. மனதிற்கு பிடித்த பெண்ணை வர்ணித்து, சற்றே காமம் கலந்து காதலன் பாடும் இந்த பாடல் கே.ஜே. யேசுதாசின் காந்தர்வ குரலில் தெய்வீக தன்மையோடு நம் காதுகளில் ஒலிப்பதற்கு காரணம் இளையராஜாவின் இசையே அன்றி வேறெதுவும் இல்லை.. பாட்டின் இடையே மிருதங்கமும் வயலினும் மாறி மாறி இசைக்கப்படும் வகையில் (3:14 - 03:55) ஒரு இசை துண்டம் வரும்.. அதன் இனிமையை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.. அனுபவித்து கேட்டால் தான் உணர முடியும்..

குறிப்பு:
எனக்கு பிடித்த பத்து பாடல்களை தேர்வு செய்தபின தான் கவனிக்கிறேன்..
> எனக்கு பிடித்த மலேசியா வாசுதேவன், மனோ, சித்ராவின் குரல்களில் நான் ஒரு பாடலை கூட தேர்வு செய்திருக்கவில்லை..
> 2000 பிறகு வந்த எந்த படத்திலிருந்தும் நான் பாடல்களை தேர்வு செய்யவில்லை..
70-80-90- களில் வந்த பாடல்களையே தேர்வு செய்திருக்கிறேன்..
> மேற்கூறிய கால கட்டங்களில் வந்த இளையராஜாவின் பாடல்களை கேட்பதில் இருக்கு சுகானுபவம், அந்த பாடல்களை ஒளி வடிவில் பார்க்கும்போது கண்டிப்பா குறைந்து விடும்.. மகேந்திரன்,பாரதிராஜா, மணிரத்னம் போன்ற வெகு சிலர் தான் ராஜாவின் பாடல்களை நன்றாக படமாக்கி இருப்பார்கள்.. மற்றயோர் பாட்டு கிடைத்து விட்டதே, அதுவே போதும் என்கிற அளவில் படமாக்கி இருப்பார்கள்.. அதனால் அதனை பாடல்களையும் ஒலி வடிவிலேயே இணைத்திருக்கிறேன்..


நன்றி!!

Tuesday, December 13, 2011

தனிமையின் நீட்சி


"மாற்றம் ஒன்றிற்கு தான் மாற்றமே இல்லை", "Changes are Inevitable" போன்ற வாக்கியங்களின் மேல் எனக்கு நம்பிக்கையே இருந்ததில்லை..
நான் செய்து கொண்டிருக்கின்ற/பழகிக் கொண்ட விஷயங்கள் என் மனதில் ஆழமாக வேரூன்றி விட்டு விட்டால் அவற்றிலிருந்து என்னை மாற்றிக் கொள்ள முயன்றதே இல்லை.. என்னை சுற்றி நடக்கும் பல மாற்றங்களை, புதிய தோன்றல்களை நான் ஏற்றுக்கொண்டு அனுசரித்து போனதே இல்லை..
<<அதற்காக நான் பிடிவாதமுள்ள கொள்கைகாரன் என்றோ, பழமை விரும்பி என்றோ அர்த்தம் கொள்ள வேண்டாம்.. :-) >>
"I am already in my comfort zone.. Why should i make it complicate by adhering new/updated things" - என்பது என்னளவில் எனக்கு நானே ஏற்படுத்திக் கொண்ட ஒரு வகையான நியாயம்..

ஆனால், சமீப காலமாக என்னை நான் ஒரு விஷயத்தில் மாற்றிக் கொண்டுவிட்டேன்.. உண்மையை சொல்ல வேண்டுமென்றால் - மாற்றிக் கொள்ள வேண்டிய கட்டாயம் வந்து விட்டது..

நான் தனிமையை மிகவும் விரும்புபவன்.. தனிமையிலே இனிமை காண்பது எனக்கு மிகவும் மிகவும் பிடித்தமான ஒன்று..
சிறு வயது முதலே தனிமையை சிலாகிப்பது தான் என் சுபாவம் என்றாலும் நான் தனிமையின் உச்சத்தை தொட்டதற்கு -"எதற்கு புதிய உறவுகள் என்ற எண்ணம்", "சக மனிதர்கள் மூலம் என் வாழ்வில் நான் சந்தித்த சில கசப்பான அனுபவங்கள்" போன்ற வேறு சில காரணங்களும் உண்டு..
இதே சென்னையில் தான் எனது பெற்றோர்/உடன் பிறந்தோர் இருகின்றார்கள்.. இருந்தாலும் நான் எனக்கு பிடித்த அந்த தனிமையை விரும்பி, தனியாக ஒரு வீடு எடுத்து தங்கி வருகிறேன்..
(இதை வைத்துக்கொண்டு என் குடும்பத்தின் மீது எனக்கு அன்பில்லை என்று அர்த்தம் கொள்ள தேவையில்லை)..

இப்படி நான் விரும்பிய தனிமை, கடந்த ஒரு வருட காலமாக என்னை வேறு ஒரு தளத்திற்கு  கொண்டு செல்ல ஆரமபித்தது..
அலுவலகத்திலும் சரி, வெளியிலும் சரி - சக மனிதர்களோடு பழகுவதை நான் அறவே தவிர்க்க ஆரம்பித்தேன்..
எங்கும் செல்லாமல் வீட்டிலேயே அடைந்து கிடக்க ஆரம்பித்தேன்.. நாளடைவில் மிகப்பெரிய வெறுமை என்னை ஆட்கொள்ள ஆரம்பித்தது..
எவருடனும் பேசாமல் பழகாமல் இருக்க ஆரம்பித்தன் விளைவு - எல்லா தருணங்களிலும் மனதில் பலவிதமான தேவையற்ற சிந்தனைகள் தோன்ற ஆரம்பித்தது..
மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானது போன்ற ஒரு உணர்வு..
ஒரு கட்டத்தில், இதன் உச்சமாக நான் வாய்திறந்து பேசக்கூட வாய்ப்புகள் குறைந்து போக ஆரம்பித்தது..
வீட்டிற்க்கு தொலைபேசியில் பேசுவதை தவிர்த்து பார்த்தால், நான் அதிகம் பேசுவது ஆங்கிலத்தில் (business talks i.e., பணி நிமித்தமான பேச்சுக்கள்) மட்டுமே என்றானது..
கிட்டதட்ட இந்த சுட்டியில் விவரிதிருப்பதை போன்ற ஒரு நிலையில் தான் நான் இருந்தேன்..


இதிலிருந்து என்னை நான் வெளியேற்றியே ஆகவேண்டும், நான் மாறியே ஆகவேண்டும் முடிவு செய்தேன்..

எப்படி? அதற்கு ஒரே வழிதான் உள்ளது.. எனக்கு பிடித்த தனிமையை விட்டுக் கொடுத்து விடாமல் இதிலிருந்து மீள வேண்டுமென்றால், சக மனிதர்களோடு பழக ஆரம்பிக்க வேண்டும்..
ஆம்.. கடந்த இரு மாத காலமாக. எந்த வித வேறுபாடும் இல்லாமல் நான் சந்திக்கும் அத்தனை மனிதர்களுடனும் சகஜமாக சிரித்து பேசி பழக ஆரம்பித்திருக்கிறேன்..
இப்பொழுது என்னை நான் ஓரளவு மீட்டு விட்டதாகவே உணர்கிறேன்..
என் இயல்பை மீறிய ஒரு விஷயத்தை தான் நான் செய்கிறேன் என்று எனக்கு தெரிகிறது.. ஆனாலும் கஷ்டப்பட்டு ஒருவாறாக என்னை நான் பழக்கிக் கொண்டு விட்டேன்..

முன்பு சொன்னதுபோல் எனக்கு பிடித்த தனிமையை என்றும் நான் விட்டு கொடுத்து விடப் போவதில்லை..
"தனியாக ஒரு உலகை படைத்தது, இந்த சமூகத்தில் வாழ்ந்த ஒரு மனிதனை அதில் விட்டுப் பாருங்கள்.. அவன் அங்கு தான் எந்த விதமான போலிதன்மையும் இல்லாமல் இருப்பான்"
"நான் தனியாக இருக்கும் இந்த வீடு என்பது என் உலகம்.. இங்கு தான் நான் யார் என்று என்னை நான் உணர்கிறேன்.. இங்கே தான் நான் நானாக இருக்கிறேன்.. என் வாழ்கையை நான் வாழ்கிறேன்.." போன்ற என் கருத்தில் எந்த மாற்றமும் வந்துவிடவில்லை
அதே சமயம், இந்த தனிமையின் நீட்சி என்னை முழுமையாக ஆட்கொண்டு வேறு ஒரு அபாய கட்டத்திற்கு கொண்டுசென்று விட்டுவிடக்கூடாது என்பதில்  கவனமாக இருக்கிறேன்..

நன்றி!!

Sunday, December 11, 2011

அன்றும் இன்றும்..


அன்று:
அப்போது எனக்கு சுமார்  பதிமூன்று அல்லது பதினான்கு வயதிருக்கும்.. லேசாக உதட்டின் மேல் மீசை அரும்பி விட்டிருந்த நேரம்..பள்ளியிலும், வெளியிலும் அனைவரும் என்னை பெயர் சொல்லியோ அல்லது வாடா/போடா என்றோ தான் அழைத்ததுண்டு.. வீட்டில் அனைவரும் பெயர் சொல்லி கூப்பிடுவார்கள்..தாத்தா மட்டும் சில நேரங்களில் என்னை அன்பாக 'என்னங்கையா' என்று அழைப்பர்..

ஒருநாள்,.வீட்டினருகே இருந்த ஒரு மளிகை கடையில் ஏதோ வாங்குவதற்காக சென்றிருந்தேன்.. கடையில் வழக்கமாக இருக்கும் அண்ணாச்சிக்கு பதில் அன்று வேறு ஒரு பெரியவர் இருந்தார்.. வீட்டில் என்னென வாங்க வேண்டும் என்று எழுதி குடுத்த சீட்டை அவரிடம் நீட்டினேன்..நான் கேட்ட சரக்கையெல்லாம் கட்டிகொடுத்து விட்டு,  "மொத்தம் எழுபத்தஞ்சு  ருபா ஆகிருச்சு சார்" என்று சொல்லி என்னிடம் பணத்தை கேட்டார்..ஒன்றும் புரியாமல் சற்றே முழித்தவாறு அவரை உற்று நோக்கினேன்.. "எழுபத்தஞ்சு  ருபாய் சார்" என்று சற்று உரக்க சொன்னார்..

அவரை பார்த்து நான் முழித்ததன் காரணம்?
என் வாழ்வில் முதன் முறையாக சார் அன்று ஒருவர் அழைத்தது அது தான் முதல் முறை.. அன்றைக்கு மிகவும் சந்தோசமாக இருந்தது.. பெரிதாக ஏதோ சாதித்து விட்டதை போன்று ஒரு நினைப்பு மனதிற்குள்..சற்றும் வளர்ந்தேயிராத என் மீசையை தடவி விட்டுக்கொண்டே வீட்டுக்கு திரும்பினேன்..தெருவில் வரும் வழியிலெல்லாம், எல்லாரும் என்னை ஏதோ ஒரு பெரிய மனுஷனை பார்ப்பது போல பார்பதாகவே எனக்கு தோன்றியது..
"ஒரு வழியாக நம் பால்ய பிராயம் முடிந்தது.. நாம் இளைஞன் ஆகிவிட்டோம்" என்றெல்லாம் அன்றிரவு தூக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்தேன்..

இன்று:
இரண்டு வாரங்களுக்கு என் வயது முப்பதை எட்டியிருந்தது..
வழக்கமாக நான் அலுவலகத்திற்கு கேபில் (Office Cab) தான் செல்வதுண்டு..
இரண்டு மூன்று வாரமாக புதிதாக ஒருவர் என்னுடன் கேபில் வந்து கொண்டிருக்கிறார்.. அவ்வளவாக பழகவில்லை அவருடன் என்றாலும், அவ்வபோது சில நேரங்களில் சில விஷயங்கள் பேசுவதுண்டு..என்னை பெயர் சொல்லி வாங்க/போங்க என்றே பேசுவார்..
இரண்டு நாட்களுக்கு முன்பு ஒரு நாள் அவர் என்னுடன் வரவில்லை.. அடுத்த நாள் அவரை பார்த்த பொழுது, "என்னங்க, நேத்து வரல?" என்று சாதாரணமாக கேட்டேன்..  அவர் அதற்க்கு சிரித்தவாறே, "பிரசன்னா சார் , உங்களுக்கு அதெல்லாம் சொன்ன புரியாது" என்று சொல்லிவிட்டு, நான் அதற்க்கு பதில் கேள்வி கேட்பேன் என்று எதிர்பார்த்து நின்றார்..நான் அதற்கு மேல் பேச்சை வளர்க்காமல் சிரித்தவாறே அந்த இடத்தை விட்டு நகர்தேன்..

நான் ஏன் அவருடன் பேச்சை வளர்க்கவில்லை?
காரணம் - அவர் சார் என்று என்னை கூப்பிட்டதும்  எனக்கு என்ன பேசுவதென்றே தெரியவில்லை. அதனாலே தான் அந்த இடத்தை விட்டு அகன்றேன் என்பது தான் உண்மை.. அன்றிரவு வரை ஏதோ ஒன்றை இழந்தது போல் வெறுமையாக இருந்தேன்..முன்பு என்னை ஒருவர் சார் என்று அளித்த போது ஏற்பட்ட அந்த மகிழ்ச்சி, இன்று சற்று அதிர்ச்சியாக மாறியது ஏன்?
கடந்த மாதம் தான் என் வயது முப்பதை தொட்டிருந்தது  - அதனாலா?
இருந்தும் சார் என்ற வார்த்தையை என் மனம் ஏன் ஏற்க மறுத்தது என்று அந்த தருணத்தில் எனக்கு தெரியவில்லை..

பின்பு பலவாறான கோணங்களில் யோசித்து பார்த்து தெளிவு பெற்றேன்.. அவர் சாதாரணமாகவோ அல்லது நகைச்சுவையாகவோ ஏதோ ஒன்றை சொல்ல வந்திருப்பார்.. அவருக்கு கண்டிப்பாக என்னைவிட ஓரிரண்டு வயது குறைவாக தான் இருக்கும்.. அவர் என்னை சார் என்று அழைப்பதில் என்ன தவறு இருக்கிறது.. வயது மூப்பு என்பது மனிதரை பிறந்த அனைவருக்கும் வந்தே தீரும்..எவரும் அதற்க்கு விலக்கில்லை..முப்பது என்பது அப்படி ஒன்றும் தளர்த்த வயதும் அல்லவே.. பின், ஏன் இது போன்ற தாறுமாறான சிந்தனைகள்? மனிதரனைவருக்கும்  பொதுவாக, இயற்கையாக நிகழும் விஷயங்களை நாம்ஏற்று கொள்ளத்தான் வேண்டும் அல்லவா:-)

"Do not regret growing older.  It is a privilege denied to many" - (Unknown Author).. 

நன்றி!!

Wednesday, November 16, 2011

சினிமாவில் புதிர்கள் ? ? ?

கடந்த வாரம் முழுக்க ராஜ் டிவியில் இரவு 11:30 மணிக்கு, இயக்குனர் பாலச்சந்தரின் படங்களாக ஒளிபரப்பிக் கொண்டிருந்தார்கள்..
நானும் கடந்த வாரம் முழுக்க விடுப்பில் இருந்ததால், அவற்றில் சிலவற்றை பார்க்க நேர்ந்தது..

"ஒரு வீடு இரு வாசல்", "பொய்க்கால் குதிரை" என்ற இரு படங்கள் நான் இதற்கு முன்னர் கேள்விப்பட்டிராதவை.. இரண்டுமே சுமார் தான்..

"பொய்கால் குதிரை" - கிரேசி மோகனின் "Marriages made in Saloon" என்ற மேடை நாடகத்தை தழுவி எடுக்கப்பட்ட படம் என்று பின்னர் இணையத்தின் மூலமாக அறிந்தேன்.. நாடக மேடையில் பார்க்கும் போது, கண்டிப்பாக நன்றாக இருந்திருக்கும்.. பெரிய திரையில் அவ்வளவாக எடுபடவில்லை..

<<Marriages made in Saloon நாடகத்தை இங்கே பார்க்கலாம்>>

"ஒரு வீடு இரு வாசல்" - எண்பதுகளின் இறுதில் வந்த இந்த படம் கண்டிப்பாக ஒரு வித்தியாசமான முயற்சி என்று சொல்லலாம்.. ஒரே திரைபடத்தில் முழுக்க வேறுபட்ட இரு கதைகள் என்று எடுக்கப்படிருக்கிறது.. அதில் முதல் கதை எனக்கு பிடித்திருந்தது.. இரண்டாவது கதை சுமார்.. இரண்டு கதைகளுமே அனுராதா ரமணனின் புதினங்களை தழுவி எடுக்கப்பட்டவை என்று விக்கிபீடியாவில் போட்டிருக்கிறது.. அனால், டைட்டிலில் சிவசங்கரி என்று பார்த்ததாக ஞாபகம்..

மூன்றாவதாக நான் பார்த்தது, "அச்சமில்லை அச்சமில்லை".. கிராமத்து பின்னணியில் ஒரு அரசியல் படம்.. ரசிக்கும்படியான நிறைய Political Satire Dialogues.. ராஜேஷ்/சரிதாவின் நடிப்பில், வி.எஸ். நரசிம்மன் இசையில் அருமையான பாடல்கள் கொண்ட ஒரு திரைப்படம்..
படத்தில் வரும் எனக்கு மிகவும் பிடித்த 'ஆவாரம்பூவு ஆறேழு நாளா' என்ற பாடலை நீங்கள் அனைவரும் கேட்டிருப்பீர்கள். . அதை இயற்றியவர் கவிஞர் ஈரோடு தமிழன்பன்.. (அந்நாளைய தூர்தர்ஷன் செய்தி வாசிப்பாளர் - ஞாபகமிருக்கிறதா?)

சரி, விஷயத்திற்கு வருகிறேன்..
எனக்கு சுமார் 12 வயதிருக்கும் பொழுது, சென்னை தொலைகாட்சியில் "அச்சமில்லை அச்சமில்லை" படத்தினுடைய சில காட்சிகள் திரைமலரில் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது..
அதில் ஒரு காட்சி வரும்.. காதலிக்காக கோவிலை ஒட்டிய அருவியினருகே காதலன் காத்திருப்பான்.. காதலியோ அவனை சந்திக்க வராமல், அந்த அருவியினது மேல் பரப்பில் நின்று கொண்டு ஒரு குறிப்பை மரப்பட்டையில் எழுதி நீரிலே மிதக்க விடுவாள்..
அது அருவி வழியாக, தண்ணீரில் இறங்கி காதலனை வந்தடையும்.. பார்த்தவுடனே காதலனுக்கு புரிந்து விடும் - அது தன் காதலியின் செய்தி தான் என்று.. அனால் அதில் எழுதி இருக்கும் குறிப்பை அவனால் புரிந்து கொள்ள முடியாமல் தவிப்பான்.. அங்கு வரும் கதையின் நாயகி (சரிதா), அந்த குறிப்பை படித்து பார்த்து விட்டு, "இது கூட விளங்காமல் இருக்கிறாயே" என்று சிரித்துக் கொண்டே செல்வாள்.. எனக்கும் அந்த குறிப்பின் அர்த்தம் அந்த வயதில் புரியவில்லை.. என்னவாக இருக்கும் என்று யோசித்து கொண்டே இருந்தேன் சில நாட்கள்.. பின்னர் அதை முழுவதுமாக மறந்தும் விட்டேன்.. ஆனால், இந்த முறை பார்க்கும் போது என்ன அர்த்தம் என்று புரிந்து விட்டது.. :-)

காதலி தான் வர முடியாது என்பதை காதலனுக்கு தெரிவிக்க கொடுத்திருந்த குறிப்பு : "வந்ததால் வரவில்லை.. வராவிட்டால் வந்திருப்பேன்"..
என்ன, உங்களுக்கு அர்த்தம் புரிகிறதா?

இரண்டாவதாக விசுவினுடைய ஒரு படம்.. பெயர் சரியாக ஞாபகமில்லை..சுமார் பதினைந்து வயதில் பார்த்ததாக நினைவு.. வேடிக்கை அது வாடிக்கை, சம்சாரம் அது மின்சாரம் போன்று ஏதோ ரைமிங்காக தலைப்பை கொண்ட ஒரு படம்.. அதில் வரும் ஒரு காட்சி - எழுத்தாளரான ரவி ராகவேந்தர், தன்னை சந்திக்க வரும் தனது ரசிகையான பல்லவியிடம் ஒரு புதிர் போடுவார்.. அது புரியாமல் பல்லவி முழிப்பார்.. பின்னர் விடையை ரவியே பல்லவியிடம் கூறுவார்..

அந்த புதிர் - ஒரு பெண்ணை " ஊரார் கண்ட கோலம், ஆனால் உடையவன் காணாத கோலம்.." அது என்ன கோலம்? என்று எனக்கு விடை உடனேயே தெரிந்து விட்டது.. உங்களுக்கு விடை தெரிகிறதா?
விடாமல் அதை தொடர்ந்து, "உடையவன் மட்டும் கண்ட கோலம், ஆனால் ஊரார் காணாத கோலம்" என்று அடுத்த புதிர் கேள்வியாக வரும்.. அதை கேட்டு, பல்லவி வெட்கப்பட, பின்னர் ஏதேதோ நடந்து விடும் .. (ஆமா, என்ன நடந்திருக்கும்?? :-))

இறுதியாக, இன்று வரையில் எனக்கு விடை தெரியாத ஒரு புதிர்..
சுமார் பத்து வருடங்களுக்கு முன்பு - வரிசையாக சேனல் மாற்றிக் கொண்டே வரும் போது, இயக்குனர் பாக்யராஜ் ஒரு பெண்ணிடம் புதிர் போடுவதாக ஒரு திரைபடத்தின் காட்சியை கண்டேன்.. விடை என்னவென்று பார்பதற்குள் மின் தடை ஏற்பட்டு விட்டது.. படத்தின் பெயரும் தெரியவில்லை.. அந்த நடிகையும் யார் என்று தெரியவில்லை..

படு சுவாரசியமான அந்த புதிர் - "ஒரு பெண் தன் கணவனிடம் ஒரே ஒரு விஷயத்தை மட்டும் மறைத்து இறுதி வரை ரகசியம் காப்பாள்.கடைசி வரை அது என்னவென்று கணவனுக்கு தெரியவே தெரியாது.. அது என்ன ரகசியம்?" .. பாக்யராஜ் கேட்கிற கேள்வி என்பதால் நானும் பலவாறாக (எக்குதப்பாகவும் கூட) யோசித்து பார்த்துவிட்டேன்.. இன்று வரை எனக்கு விடை சிக்கவே இல்லை.. பார்க்கலாம், என்றாவது ஒரு நாள் எதேச்சையாக அந்த படத்தை நான் பார்க்காமலா போய்விடுவேன்..

நன்றி!!!

Sunday, October 02, 2011

மரண சிந்தனை (சிறுகதை)

அன்று சனிக்கிழமை.. இரவு மணி பதினொன்று இருக்கும்.. அவன் அப்பொழுதுதான் அழுவலகத்திலிருந்து வீட்டிற்க்கு வந்திருந்தான்.. இங்கே வீடு என்று அவனால் குறிப்பிடப்படுவது அவன் தனியாக தங்கி இருக்கும் அந்த 1 BHK வாடகை ரூமைத்தான்.. அவனைப் பொறுத்தவரையில், அதுதான் வீடு..

சமீப நாட்களாக அவன் மிகுந்த மனவருத்தத்தில் இருக்கின்றான் என்பதை அவன் முகத்தை வைத்தே சுலபமாக சொல்லி விடலாம்.. தன்னை தொடர்ந்து துரத்தி வரும் பிரச்சனைகள் அனைத்திற்கும் எப்பொழுது தீர்வு கிட்டும்? -அல்லது- தீர்வு கிட்டுமா? கிட்டாதா? என்று பலவாறாக மனதிற்குள் சிந்தனைகள் ஓடிக்கொண்டிருந்தது..

பேண்ட்டிலிருந்து கைலிக்கு மாறியவன், முகம் கழுவுவதற்காக குளியலறைக்குள் நுழைந்தான்.. பலவாறான சிந்தனையோட்டதில் இருந்த அவன் குளியலறை விளக்கை போட்டிருக்கவில்லை.. குழாயை திறந்ததும், சில்லென்று பீறிட்டு வரும் தண்ணீரை இரு கைகளிலும் பிடித்து , வேகமாக முகத்தை அடித்துக் கழுவியதும், சற்றே புத்துணர்ச்சி அடைந்ததாய் ஒரு உணர்வு அவனுக்கு.. குழாயை மூடலாம் என்று கையை அதனருகே கொண்டு சென்று போது, கையில் ஏதோ சுருக்கென்று தைத்ததைப் போன்றதொரு உணர்வு.. என்னவாக இருக்கும்? விளக்கை எரிய விட்டிருக்காததால், கண்ணுக்கு ஒன்று புலப்படவில்லை..

கண்ணை கசக்கி உற்று பார்த்தபொழுது - ஏதோ ஒன்று, குழாயின் கைப்பிடியருகே நெளிவதை போன்று தோன்றியது..சற்று பின்வாங்கி விளக்கை போட்டு அது என்னவென்று பார்த்தான்.. இப்பொழுது அது அவன் கண்களுக்கு பளிச்சென்று தெரிந்தது.. ஆம்,அது ஒரு பாம்பு.. சுமார் நான்கடி நீளம், சற்றே பழுப்பு நிறம்..சட்டென்று அறையில் வெள்ளிச்சம் பரவியதால் அதற்கு கண்கள் கூசியிருக்குமோ என்னவோ.. இவனைப் பார்த்து சற்று சீறியது ..

இவன் முகத்திலோ, சிறு சலனமுமில்லை.. பயம்? படபடப்பு? - ம்ஹும்..
அந்த பாம்பை அப்படியே வெறித்துப்பார்த்துக்கொண்டு நின்றிருந்தான்.. சிலநொடிகள் கடந்தன..ஏதாவதொரு கம்பை எடுத்து தன்னை அடிக்க முயற்சிப்பான் என்று எதிர்பார்த்திருந்த பாம்பு, இவன் ஒரு வெத்துவெட்டு என்று முடிவு செய்து, குழாயின் பின்னிருந்த பைப்பைப் பற்றி மேல்நோக்கி சென்று சாவகாசமாக வெளியேறியது..
இவனோ, எந்தவொரு சிந்தனையுமில்லாமல் - வெளியேறிச்சென்ற பாம்பைப் பார்த்தவாறு குளியலறையை விட்டு வெளியே வந்தான்..

சாவகாசமாக ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்தவாறு, வீட்டை விட்டு வெளியே வந்து வெளி வாசலில் நின்றவாறு தெருவை இருபக்கமும் பார்த்தான்.. எந்தவொரு ஆள் நடமாட்டமும் இல்லை.. ஒட்டு மொத்தமாக ஊரே அடங்கியிருந்தது.. "ஒரு வேளை அனைவருமே பாம்பு கடித்து அவரவர் வீட்டிற்க்குள் சமாதியாகி விட்டனரா?".. தன்னுடைய கற்பனை எவ்வளவு சிறுபிள்ளைத்தனமானது என்பது அவனுக்கு நன்றாகவே தெரியும்.. இருந்தாலும் , தன் கேள்வியை நினைத்து, தனக்குதானே மெலிதாக சிரித்துக் கொண்டான்..

கடிபட்ட தன் கையைப் பார்த்தான்.. வழக்கமாக பாம்பு கடிபட்ட இடம் என்பது, இரண்டு பற்கள் பதிந்ததுபோலதான் இருக்கும் என்று எங்கோ படித்த ஞாபகம்..தனக்கு மட்டும் ஏன் ஒரே ஒரு பல் பதிந்தது போல இருக்கிறது? ஒருவேளை பாம்பு நம்மை சரியாக கடிக்கவில்லையா??
மருத்துவரிடம் ஊசி போட்டுக்கொள்ளும் போது, முதலில் ஊசி குத்துவது தெரியும்.. பின்பு, அவர் மருந்தை செலுத்தும்போது ஏதோ ஒன்று உட்புகுவது போல் தோன்றும்.. அதுபோல, பாம்பு கடித்த போது நமக்கு முதலில் சிறு வலி தோன்றியது.. பிறகு, ஒரு திரவம் நமக்குள் உட்புகுவது போல தோன்றியது.. ஆக, பாம்பு நம்மை ஒழுங்காக தான் கடித்திருக்கிறது என்று நினைத்துக் கொண்டான்..

உள்ளுக்குள், பலவாறாக அவனது சிந்தனை உழன்று கொண்டிருந்தது..
"இந்த நாளில், இந்த நேரத்தில் பாம்பு நம்மை கடிக்க வேண்டு என்பது முன்பே எழுதி வைக்கப்பட்ட விதியா?" "அப்படிதான் என்றால், பாம்பு கடித்து நாம் இறக்க வேண்டுமென்றும் விதிக்கப்பட்டிருக்குமா என்ன?" "அப்படிதான் விதிக்கப்பட்டிருக்கும் என்றால், அது அப்படியே இருந்து விட்டு போகட்டுமே..நாம் ஏன் அதை மாற்ற முயற்சிக்க வேண்டும்?" "இதை நாம் ஏன், நம் துன்பங்களிலிருந்து/பிரச்சனைகளிலிருந்து விடுதலை பெற கிடைத்த வாய்ப்பாக எடுத்துக் கொள்ளக்கூடாது.. ?"

கிட்டத்தட்ட பதினைந்து நிமிடங்கள் கடந்து விட்டன.. உடம்பில் எந்தவொரு மாற்றமும் ஏற்படவில்லை.. பாம்பு கடிபட்டவர், இரவில் தூங்கக்கூடாது என்று ஏதோவொரு சினிமாவில் பார்த்தது ஞாபகம் வந்தது.. சரி,நாம் தூங்க முயற்சிப்போம் என்று அறைக்குள் திரும்பவும் வந்தான்..

பர்ஸில் இருக்கும் தன் பெற்றோரின் புகைப்படங்களை ஒரு முறை பார்த்து விட்டு, காலமாகிவிட்ட தன் பாட்டி தாத்தாவின் படங்களை தொட்டு கும்பிட்டு விட்டு விளக்கை அணைத்தான்.. கதவை வெறுமனே சாத்தி விட்டு, தாளிடாமல் வந்து படுத்துக் கொண்டான்.. காரணம் - நாளை நாம் இறந்த பிறகு, நம் உடலை எடுப்பதற்காக வீட்டு கதவு உடைக்கப்படும்.. போகிற நேரத்தில் ஏன் வீட்டின் உரிமையாளருக்கு வீணாக செலவு வைக்க வேண்டும் என்கிற எண்ணம் தான்..

விளக்கை அணைத்து படுத்த பின்னரும்,சிந்தனைகள் உழன்றன.. நாளை நாம் மரணமடைந்து விட்டோமென்றால், அதை எப்பொழுது அனைவரும் அறிவார்கள்?
சாதாரணமாக நாம் யார் வீட்டிற்கும் போனதில்லை.. பிறர் நம் வீட்டிற்கு வருவதையும் நாம் விரும்பியதில்லை.. பின்பு எப்படி நம் மரணம் இவ்வுலகிற்கு அறிவிக்கப்படும்?
வீட்டினருகே இருக்கும் கடையில் டீ குடிப்பதை தவிர வேறு யாரிடமும் தெருவில் பழக்கமில்லை...
வீட்டு உரிமையாளரும், முதல் தேதியன்று தான் வாடகை வாங்க வருவார்..நாளை முதல் தேதியும் அல்ல..
நாளை ஞாயிற்று கிழமை வேறு.. வார நாட்களாக இருந்தாலாவது, ஏன் வரவில்லை என்று அலுவலகத்திலிருக்கும் சக பணியாளர்கள் நம்மை தொடர்பு கொள்ள முயற்சித்து பார்ப்பார்கள்.. அதற்கும் இப்போது வாய்ப்பில்லை..
ஊரிலிருந்து அப்பா அம்மா யாராவது நாளை காலை போனில் அழைக்கலாம்.. ஓரிருமுறை முயற்சித்து பார்த்துவிட்டு, சற்று பதட்டமடைவார்கள்.. பின்பே, பல்வேறான முயற்சிகளுக்குப்பின் ஒருவாறாக நம் மரணம் அனைவருக்கும் தெரியவரும்..
நாம் மரணமடையும் பட்சத்தில், அது வெளியே தெரிய வருவதற்கே இவ்வளவு சிக்கல்கள் இருக்கிறதே.. நாம் மரணமடைவதில் தவறேதும் இல்லை என்று முடிவு செய்தவாறு கண்ணை மூடி தூங்க முயற்சித்தான்.. பின்னர், அதில் ஒரு வழியாக வெற்றியும் கண்டான்..

மறுநாள் காலை மணி ஒன்பதரை.. கண்விழித்தான்.. கடிபட்ட கையில் லேசாக வலி இருப்பது போலிருந்தது.. கடிபட்ட இடமும் சற்று தடித்திருந்தது.. பாம்பு நன்றாகதானே நம்மை கடித்தது.. ஏன், ஒன்றுமே ஆகவில்லை? ம்ஹ்ஹ்ம் - கஷ்டம்தான் .. "நாம் பலமாக இருக்கிறோமா ? அல்லது, அது ஒரு பலவீனமான பாம்பா? " ஒன்றுமே புரியவில்லை அவனுக்கு..
நமக்கு உயிர் போகவில்லை.. சரி, அதற்குப் பதில் வேறு ஏதாவது உடற்குறை ஏற்பட்டுவிட்டால்? கை வலிக்கிறதே.. ஒரு வேளை, அந்த கை மட்டும் விளங்காமல் போய்விட்டால்? உயிர் போனாலும் பரவாயில்லை.. இது போல் உடல் பலவீனங்கள் வந்து சேர்ந்தால், நாம் மேலும் பலவிதமான பிரச்சனைகளை எதிர்கொள்ள நேரிடும்.. இருக்கின்ற பிரச்சனைகளே போதும், சமாளித்து கொள்ளலாம் என்று எண்ணியவாறு அருகிலிருக்கும் மருத்துவமனைக்கு கிளம்பலானான்..

இனிமேலாவது, இது போலான முட்டாள்தனங்களுக்கு அவன் இடம் கொடுக்க மாட்டான் என்று நம்புவோமாக..

குறிப்பு:
>> Veronika Decides to Die கதையின் தாக்கத்தில் எடுக்கப்பட்ட ஒரு சிறு முயற்சியே இச்சிறுகதை..
>> இது கற்பனையும், உண்மையும் சரிவிகிதத்தில் கலந்து எழுதப்பட்ட கதை..

Wednesday, September 28, 2011

மறந்து போன பாடல்கள்..

கடந்த ஒரு வாரமாக "சதுரங்கம்" திரைப்படம் - விரைவில் என்கிற விளம்பரம் பத்திரிக்கைகளில்..



சற்று பின்னோக்கி திரும்பிப் பார்க்கிறேன்..
நான் இறுதி ஆண்டு முதுகலை பயிலும் பொழுது சதுரங்கம் திரைப்படத்தின் பாடல் வெளியிடப்பட்டது.. பார்த்திபன் கனவு என்கிற அருமையான திரைப்படத்திற்குப் பிறகு கரு. பழனியப்பன் இயக்கிய படம் - இதழியலை (Journalism) மையமாகக்கொண்ட ஒரு ஆக்க்ஷன் த்ரில்லர் - அப்பொழுது உச்சத்தில் இருந்த வித்யாசாகர் இசை - என்று அந்தத் திரைப்படத்தைப்பற்றி மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது..
பாடல்களும் மிக அருமையாக வந்திருந்தது..
பின்வரும் இந்த இரு பாடல்களும் எனக்கு மிகவும் பிடித்துப்போய் அடிக்கடி கேட்டுக் கொண்டிருந்தேன் அந்த காலகட்டங்களில்..
"கார்த்திக்/ ஸ்ரீலேகா பாடிய - எங்கே எங்கே என் வெண்ணிலவு"
"மது பாலகிருஷ்ணன்/ ஹரிணி பாடிய - விழியும் விழியும் நெருங்கும் பொழுது"


கிட்ட தட்ட ஆறரை வருடங்கள் ஓடிவிட்ட பிறகு இப்பொழுது படம் வெளியிடப்பட்டுகிறது..
படம் வெற்றிபெறுமா? ரசிகர்களை கவருமா? - தெரியவில்லை..
ஆனால் நான் கண்டிப்பாக இந்த படத்தை பார்ப்பேன்..

சதுரங்கம் திரைப்படத்தின் பாடல்களை இங்கே கேட்கலாம்..

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

சதுரங்கத்தைப் பற்றி பேசுகிற பொழுது ஞாபகம் வருகிற மற்றுமொரு திரைப்படம் "காதல் சாம்ராஜ்யம்"..



பழம்பெரும் தயாரிப்பாளர் பஞ்சு அருணாசலம் தயாரிக்க, தேசிய விருது பெற்று உச்சத்தில் இருந்த அகத்தியன் இயக்க, யுவன் (தன்னுடைய ஆரம்ப காலகட்டங்களில் இருந்தபொழுது) இசையமைமக்க, முழுக்க முழுக்க இளைஞர்களைக்கொண்டு எடுக்கப்பட்ட படம்.. அருமையாக விளம்பரம் செய்து பாடல்களை வெளியிட்டார்கள்.. அனைத்து பாடல்களுமே அருமையாக இருந்தது..
இது நான் இளங்கலை முடித்து முதுகலை பயில ஆரம்பித்திருந்த காலகட்டம்.. எங்களுடைய விடுதி அறையில் இந்தப்பாடல்கள் ஓயாமல் ஓடிக்கொண்டிருந்தது நினைவுக்கு வருகிறது..
என்னுடைய விருப்பத் தேர்வாக இருந்த பாடல்கள்..
பல்ராம்/கோபிகா பாடிய - இரு கண்கள் சொல்லும் காதல் சேதி"
சங்கர் மகாதேவன் பாடிய - "கல்லூரி பாடம் மாற்றுங்கள்"
எஸ்.பி.பாலசுப்ரமணியம்/ சுஜாதா பாடிய - "சித்தன்ன வாசல் சித்திரம் போல உனையார் வரைந்தாரோ"

பாடல்கள் தவிர, ஒலிநாடாவில் இடம்பெற்றிருந்த "சல்சா தீம்" என்ற இசை கோர்வையும் எனக்கு பிடிக்கும்..

சதுரங்கதைப் போலவே, இந்தப்படமும் முழுமையாக எடுக்கப்பட்டு இன்றுவரையிலும் வெளிவராமல் தூங்கிக் கொண்டிருக்கிறது..

காதல் சாம்ராஜ்யம் திரைப்படத்தின் பாடல்களை இங்கே கேட்கலாம்

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

இதைப்போலவே, நான் பள்ளி இறுதி ஆண்டு படிக்கும்போது வெளிவந்த பாடல்கள் கோடீஸ்வரன் என்ற படத்தினுடையது..

அப்பொழு பிரபல தயாரிப்பாளராக இருந்த கே.டி. குஞ்சுமோன் தயாரிப்பில், அவரது மகன் எபி குஞ்சுமோனும், சிம்ரனும் நடிக்க, அகோஷ் என்று அழைக்கப்பட்ட மூன்று இசையமைப்பாளர்கள் இசையமைப்பில் வெளிவந்தது.. படத்தின் பாடல்கள் அப்பொழுது சற்று நன்றாகவே வரவேற்ப்பை பெற்றது.. ஆகோஷ் இசையமைப்பில் அதற்க்கு முன்னர் வந்த ஹரிச்சந்திரா (கார்த்திக், மீனா நடித்தது) படத்தில் பாடல்கள் நன்றாக இருந்த காரணத்தினால் கோடீஸ்வரன் பாடல்களையும் நான் வாங்கி கேட்டேன்.. "தாம் தரிகிட தோம்" என்ற பாடல் எனக்கு அன்றைய விருப்பபாடல்.. மனோ பாடிய "அடி கண்ணே" என்கிற பாடலும் எனக்கு பிடிக்கும்..முந்தய இரு படங்களிப்போல் அல்லாமல் இந்தப்படம் படப்பிடிப்பே நிறைவு பெறாமல் நின்று விட்டது..

கோடீஸ்வரன் திரைப்படத்தின் பாடல்களை இங்கே கேட்கலாம்..

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

நம் இசைஞானி விஷயத்தில் இப்படி பல பாடல்கள் படங்களிலிருந்து வெட்டுபட்டிருக்கின்றன.. அவற்றில் நான் இன்றும் அடிக்கடி கேட்கும் பாடல்கள் சில..
அலைகள் ஓய்வதில்லை - ஜானகியின் குரலில் "புத்தம் புது காலை, பொன்னிற வேளை"..
தளபதி - ஜானகி, யேசுதாசின் குரலில் "புத்தம் புது பூ பூத்ததோ"..
ராஜாதி ராஜா - பி.சுசிலா, சித்ராவின் குரலில் "என் நெஞ்ச தொட்டு சொல்லு என் ராசா"


இப்படியாக பல பாடல்கள்- நான் கேட்டு ரசித்து, பின்னாளில் திரையில் வராமலேயே போய்விட்டது..

நன்றி !!