Pages

Tuesday, February 07, 2012

தவறும், நேர்மையும்


இரண்டு நாட்களுக்கு முன்பு - இரவு உணவை முடித்து கொள்வதற்காக, வேளச்சேரியில் இருக்கும் ஒரு உணவகத்திற்கு சென்றிருந்தேன்..
சென்னையில் இருக்கும் பெயர்பெற்ற, சிறந்த உணவகங்களில் அதுவும் ஒன்று.. அதன் வேளச்சேரி கிளைக்குத்தான் நான் சென்றிருந்தேன்..

நான் அடிக்கடி செல்லும் உணவகம் அது என்பதால் அங்கிருக்கும் பெரும்பாலான சர்வர்கள் எனக்கு பரிட்சயமாகிவிட்டார்கள்.. கிட்டத்தட்ட அனைவரது பெயர்களும் (வட இந்திய பணியாளர்கள் தவிர) எனக்கு தெரியும் என்பதால், அவர்கள் பெயரை சொல்லி அண்ணா என்று தான் அழைப்பேன்.. சர்வர்களை பெயர் சொல்லி அழைத்து சிநேகமுடம் பழகுவது இது போன்ற உயர்தர சைவ உணவகங்களில் நடப்பது மிகவும் அரிது என்றே நினைக்கிறேன்.. இதைப் பார்க்கும் என் அருகிலிருப்பவர்கள், ஏதோ காணக்கிடைக்காத ஒன்றை கண்டது போல் ஆச்சர்யமாக பார்ப்பார்கள்..
As usual, I never mind that.. :-)

அன்றும், வழக்கம் போல எனக்கான பதார்த்தங்களை ஒரு சர்வரிடம் வேண்டிவிட்டு காத்திருந்தேன்.. எனக்கு அருகில் அமர்ந்திருந்த ஒரு குடும்பத்தினர் அப்போதுதான் சாப்பிட்டு முடித்துவிட்டு, பில்லுக்காக காத்துக்கொண்டிருந்தனர்.. என் டேபிளையும், அருகிலிருந்த டேபிளையும் அந்த ஒரே சர்வர் தான் பார்த்துக் கொண்டிருந்தார்.. 

பில்லும் வந்தது.. அந்த குடும்பத்தின் பெண்மணி பில்லை சரிபார்த்துவிட்டு தன் கணவரது காதில் ஏதோ கிசுகிசுத்தார்.. அவர்கள் அருந்தியிருந்த ஒரு காபி பில்லில் விடுபட்டுப் போயிருந்தது தான் சமாசாரம்.. அந்த நேர்மையான குடும்பத் தலைவர், உடனடியாக எழுந்து அருகில் நின்றிருந்த மேற்ப்பார்வையாளரிடம் அதை சுட்டிக்காட்டி, தன் குடும்பத்தினர் அருந்திய காப்பியையும் பில்லில் சேர்க்கச் சொன்னார்..
அதை பார்த்துக்கொண்டிருந்த நான், உலகில் நேர்மை இன்னும் முழுமையாக அழிந்துவிடவில்லை என்று நினைத்து மகிழ்ந்தேன்..

உடனே தனியாக ஒரு பில்லை காப்பிக்காக தயார் செய்த மேற்பார்வையாளர், அதை அக்குடும்பத்தினரிடம் கொடுத்துவிட்டு - தவறுக்கு மன்னிப்புக்கேட்டு அவர்களது நேர்மையையும் பாராட்டினார்.. 

என் மகிழ்ச்சி நெடுநேரம் நீடிக்கவில்லை.. பிறகுதான் வினையே ஆரம்பித்தது (அந்த சர்வருக்கு).. அக்குடும்பத்திற்கு பரிமாறிய சர்வரை, அந்த மேற்பார்வையாளர் தனியாக அழைத்துக் கொண்டு உள்ளே சென்றார்.. என்னை வேறொரு சர்வர் கவனிக்க ஆரம்பித்திருந்தார்.. 

சற்று நேரம் கழிந்தது.. அந்த சப்ளையர் பேயறைந்த முகத்துடன் வெளியே வந்தார்.. வந்தவர் எங்கும் நில்லாமல் உணவகத்தை விட்டு வெளியேறினார்.. 
இதை பார்த்துக்கொண்டிருந்த எனக்கு பலத்த அதிர்ச்சி மேலிட்டது.. 
கண்டிப்பாக அந்த சர்வருக்கு நன்றாக திட்டு விழும் என்று மட்டும் தான் நான் எதிர்பார்த்திருந்தேன்.. வேலை போய்விடும் அளவிற்கு விபரீதம் நிகழும் என்று நினைத்து கூட பார்க்கவில்லை.. அவர்கள் சாப்பிட்ட உணவுகளை பட்டியலிட்டு, கவுண்டரில் உள்ள கணக்கரிடம் பில்லை தயார் செய்யும் பொழுது, அக்குடும்பத்தினர் அருந்தியிருந்த  காப்பியை சப்ப்ளையர் மறந்துவிட்டிருந்தார்.. 

அங்கு சாப்பிட செல்லும் தருணங்கள் தவிர எனக்கு அந்த சர்வர் எந்த விதத்திலும் பரிட்சயம் இல்லாதவர்.. இருந்தபோதிலும், நான் அறிந்தவரை அவர் வேண்டுமென்றே அந்த தவறை செய்திருக்க வாய்ப்பில்லை என்றே கருதுகிறேன்.. 

அந்த சர்வர் செய்தது கண்டிப்பாக தவறுதான்.. (தெரிந்து செய்த தப்பு அல்ல..தவறிப்போய் செய்த தவறு தான்).. அதன் மூலம் அவர் எந்தவித ஆதாயத்தையும் அடைந்திருக்க வாய்ப்பில்லை என்று எண்ணும்போது, இதற்க்கான தண்டனை சற்று அதிகமோ என்றே தோன்றியது.. 

எனக்கு நிலைகொள்ளவில்லை.. அந்த மேற்ப்பார்வையாளரிடம் பேசலாமா என்று கூட தோன்றியது.. இருந்தாலும் அவசரப்பட்டு ஏதும் செய்திட வேண்டாம் என்று நினைத்துக்கொண்டிருந்த போது, என் உணர்வறிந்த (தற்போது பரிமாறிக்கொண்டிருந்த) சர்வர் என்னிடம் வந்து மெதுவான குரலில் என்ன நடந்தது என்று விவரித்தார்.. 

தவறு செய்த அந்த சர்வருக்கு உள்ளே சென்றதும் நன்றாக திட்டு விழுந்திருக்கிறது.. அவருக்கான தண்டனை - 'அன்றைய நாளில் மேற்கொண்டு எந்த வேலையும் செய்யாமல் கிளம்பி விடவேண்டும், அவரது மாத சம்பளத்தின் ஐந்து நாள் பங்கு பிடிக்கப்படும் என்பதுதான்'..  அவரது வேலையே பறித்து அதிகபட்ச  தண்டனை அளிக்காமல், அவருக்கு அளிக்கப்பட இது போன்ற சிறிய அளவிலான தண்டனை என்னளவில் சரியென்றே படுகிறது.. (என்னளவில் இது சிறிய தந்தையாக இருக்கலாம்.. அவருக்கு ஐந்து நாள் சம்பளம் என்பது சற்று பெரிய தண்டனையாகவே இருக்கும் என்று நினைக்கிறேன்)..
இந்த சம்பவத்தை அந்த சர்வர் தன் தவறுகளிலிருந்து திருத்திக்கொள்ளக் கிடைத்த வாய்ப்பாக எடுத்துக்கொள்வார் என்று நினைக்கிறேன்..

இதை மற்றொரு கோணத்திலும் நான் நினைத்துப் பார்க்க தவறவில்லை.. 
சர்வர் செய்த அந்த மனித தவறை பெரிதுபடுத்தாமல், அக்குடும்பத் தலைவர் மேற்ப்பார்வையாளரிடம் சென்று முறையிடுவதை விடுத்து, அந்த சர்வரிடமே தவறை சுட்டிக்காட்டி இருக்கலாமோ என்றும் தோன்றியது.. எனக்கு பழக்கமில்லாத சர்வராக இருந்தாலும் நான் இதை தான் செய்திருப்பேன்..  :-)

நன்றி!!