Pages

Wednesday, December 21, 2011

இளையராஜா - பிடித்த பத்து

இசை சம்பந்தமான நிகழ்ச்சிகளில் விஜய் தொலைகாட்சியை விட ஜெயா தொலைகாட்சி சற்றே மேலானது.. தனி மனித துதிகள், வணிக நோக்கிற்காக வலிந்து திணிக்கப்பட்ட தேவையற்ற சண்டைகள் என்று எதுவும் இல்லாமல் நன்றாகவே இருக்கும்..  ஆனால்,  அத்தகைய நிகழ்ச்சிகள் மிக அரிதாகவே ஒளிபரப்பாகும் என்பதுதான் சற்று கவலையளிக்கக் கூடிய விஷயம்.. அவற்றில் நான் விரும்பி பார்த்தது - சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு ஒளிபரப்பாகி வந்த  எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் "என்னோடு பாட்டு பாடுங்கள்"..  தற்பொழுது விரும்பி பார்ப்பது - பல தரப்பட்ட இசை கலைஞர்களுடன் பாடகர் மனோ உரையாடும் "மனதோடு மனோ"..

இப்போது, கடந்த சில நாட்களாக ஜெயா தொலைகாட்சியில் விரைவில் ஒளிபரப்பாகவிருக்கும் "என்றென்றும் ராஜா" என்கிற இளையராஜாவின் இசை கச்சேரி சம்பந்தமான முன்னோட்ட காணொளி  ஒளிபரப்பாகி வருகிறது.. இதே போல், சில வருடங்களுக்கு முன்பு ஏற்கனவே ஜெயா தொலைகாட்சியில் ஒரு நிகழ்ச்சி நடை பெற்று பெரும் வரவேற்ப்பை பெற்றது என்பதால் இந்த நிகழ்ச்சியை நான் ஆவலோடு எதிர்நோக்கியுள்ளேன்..

என்றென்றும் ராஜா - முன்னோட்டம்



பிடித்த பத்து
இந்த விளம்பரத்தில் வரும் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், நம் இசைதேவனின் இசையில் நமக்கு பிடித்த 10 பாடல்களை நாம் எழுதி அனுப்ப வேண்டும்.. அவற்றில் பெரும்பாலானோரது விருப்பதை கணக்கிட்டு சிறந்த பத்து  பாடல்களை ராஜா மேடையில் அரங்கேற்றுவார் என்பது தான்..

கடு மழை பெய்தபின், சமுத்திரத்தில் அந்த மழை துளிகளை தேடுவது போலான ஒரு வேலை இது..  ராஜாவின் இசையுடனேயே பெரும்பாலான மணித்துளிகளை தினமும்  கடக்கும் என் போன்ற ராஜாவின் ரசிகர்கள் - எதை விடுவது எதை பிடிப்பது போலானதொரு நிலையில் தான் இருப்பார்கள் என்பது திண்ணம்..



சரி, என் பங்கிற்கு எனக்கு பிடித்த பத்து என்னவென்று நானும் இங்கே சொல்லி விடுகிறேன்.. அனால், இது தான் என்னளவிலான சிறந்த பத்து என்று முடிவு செய்திட தேவையில்லை.. அந்த சமுத்திரத்தில். இவை என் கைகளில் அகப்படும் பத்து துளிகள் மட்டுமே என்று அர்த்தம் கொள்ள வேண்டும்.. :-)

கூடுமானவரை நன்றாக இசையமைக்கப்பட்டு, அவ்வளவாக பிரபல்யமாகாத பாடல்கள், இளையராஜாவே பாடிய பாடல்கள் என்று முயற்சி செய்திருக்கிறேன்.. கண்டிப்பாக இது ஒரு தரவரிசை கிடையாது.. என் நினைவில் வந்த பிடித்த பத்து மட்டுமே..

1. சந்திரரும் சூரியரும் (அவதாரம்)
நடிகர் நாசர் நாட்டுப்புற கலைஞர்களின் வாழ்வியலை பதிவு செய்த ஒரு நல்ல திரைப்படம்.. இளையராஜா அதில் தனி ஆவர்த்தனமே நடத்தி இருப்பார்.. அதில் எனக்கு பிடித்த அருமையான பாடல் "சந்திரரும்  சூரியரும்" என்கிற பாடல்.. Grandeur Music என்றால் என்ன என்று எனக்கு அறிமுகப்படுத்தியது இந்த பாடல் தான்.. (சமீபத்தில் வெளிவந்த ஆயிரத்தில் ஒருவன் திரைபடத்தில் பார்த்திபன் சோழ மன்னனாக அறிமுகமாகும் காட்சியில் இசைக்கப்படும் இசையும் இந்த வகையை சேர்ந்தது தான்).. ஆனால், அன்று தொண்ணூறுகளின் மத்தியிலேயே மிகவும் அனாயசமாக இசைத்துக் காட்டியிருப்பர் இளையராஜா.. அதோடு மட்டுமில்லாமல், ஒரு நாட்டுப்புற கலைஞன் தன் lethargic குரலில், தான் இந்த நாட்டின் மன்னனானால்  என்னவெல்லாம் செய்வேன் என்று பாடுவதுபோல் அருமையாக பாடியும் இருப்பார்.. நீங்கள் உற்று நோக்கினால் இந்த பாடல் ஒரு விதமான மேற்கத்திய இசை சாயலில் இசைக்கப்பட்டிருப்பதை உணரலாம்.. அருமையான orchestration  என்கிற வகையில் எனக்கு மிகவும் பிடிக்கும்.. மிக அரிதாக ராஜா உச்சஸ்தாயில் பாடுவதையும் இந்த பாடலில் நீங்கள் கேட்கலாம்..
2. அதிகாலை நேரமே (மீண்டும் ஒரு காதல் கதை)
எஸ்.பி. பாலசுப்ரமணியம், எஸ். ஜானகி குரலில் வந்த இந்த அருமையான பாடலை எப்போது கேட்டாலும் என் மனதில் ஒரு விதமான அமைதி ஏற்படும்.. எஸ்.பி.பி மிகவும் அனுபவித்து பாடியிருப்பார் இந்த பாடலை.. பிரதாப் போத்தன் இயக்கிய இந்த திரைப்படம் எண்பதுகளின் துவக்கத்தில் வந்தது.. குறிப்பாக இந்த படத்தின் பாடல்கள் மட்டுமல்லாமல் பின்னணி இசையும் மிகவும் அற்புதமாக என் மனதை வருடி செல்லும்..

3. அப்பனென்றும் அம்மையென்றும் (குணா)
இளையராஜாவிடம் நன்றாக வேலை வாங்கக்கூடியவர்களில் கமல்ஹாசன் மிகவும் முக்கியமானவர்.. அவரது "குணா" திரைபடத்தில் இடம்பெற்றிருக்கும் இந்த பாடல், வாலியின் வரிகளில் விளைந்தது.. இந்த பாடலை சற்று உற்று நோக்கினால் லௌகிக வாழ்க்கையை வெறுத்து, துறவறத்தை நோக்கி நடைபோடும் ஒருவனது எண்ணத்தின்  வெளிப்பாடாக அமைந்திருப்பதை காணலாம்.. இளையராஜாவின் குரலும், இந்த பாடலுக்கான இசைகோர்ப்பும் ஒரு விதமான அமானுஷ்ய உணர்வை அள்ளி தெளிக்கும்..(இளையராஜாவின் தனிப்பாடல்களில் "ஒன்றான உன் பாவ கணக்கை பட்டியல் போட்டால்" என்பது தான் இந்த "அப்பனென்றும் அம்மையென்றும்" பாடல் உருவாக மூலகாரணமாக இருந்தது என்று முன்பொருமுறை கமல்ஹாசன் தன் பேட்டியில் குறிப்பிட்டிருந்தார்.. அந்த வகையிலே இது ராஜா எழுதிய பாடலாக தான் இருக்கும் என்று எனக்கு இன்றளவும் ஒரு நம்பிக்கை உள்ளது)..


4. அமுதே தமிழே (கோயில் புறா)
இளையராஜாவின் ஆரம்ப காலகட்டத்தில் வந்த இந்த திரைபடத்தின் பாடல்கள் அனைத்தும் மிகவும் அருமையாக இருக்கும்.. குறிப்பாக இந்த "அமுதே தமிழே" பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும்.. தமிழை போற்றும் இந்த பாடல் எனது விருப்ப பாடலாக வந்ததில் எந்த ஆச்சர்யமும் இல்லை.. எனக்கு மிகவும் பிடித்த இரு பெண் குரல்களில் (பி. சுசீலா, உமா ரமணன்) உருவான இந்த பாடலில் வரும் ஆண் குரல் இளையராஜாவின் ஆசான் என்றழைக்கபடும் ஜி. கே. வெங்கடேஷினுடயது என்று முன்பு எங்கோ படித்த ஞாபகம்.. முந்தய காலகட்டங்களில் ராஜாவினது இசை கச்சேரிகளில் தவறாமல் பாடப்படும் பாடலும் கூட.. அந்த வகையில் அவருக்கும் இது பிடித்தமான பாடலாகவே இருக்கும் என்று நினைக்கிறேன்..

5. கமலம் பாத கமலம் (மோகமுள்)
எழுத்தாளர் தி. ஜானகிராமன் எழுதியவற்றுள் சிறந்த புதினம் என்று இன்றளவும் போற்றப்படுவது  "மோகமுள்".. அதை இயக்குனர் ஞான ராஜசேகரன், இளையராஜாவின் இசையில் திரைப்படமாக வெளிக் கொண்டுவந்தார்.. கர்நாடக இசையோடு தொடர்புடைய புதினம் இது என்பதால் நம் இசைஞானி ஒரு ராஜபாட்டையே நடத்தி இருப்பார்.. பாடல்கள், பின்னணி இசை என்று அனைத்தும் அருமையாக இருக்கும்.. நான் குறிப்பிட்டிருக்கும் "கமலம் பாத கமலம்" பாடலை கேட்டுப்பாருங்கள்.. கே. ஜே. யேசுதாசின் அற்புதமான குரல், இளையராஜாவின் தெய்வீகமான இசை, வாலியின் அற்புதமான வரிகள் என்று ஒன்றிற்கொன்று போட்டி போட்டு இந்த பாடல் சிறப்பாக வடிவம் பெற்றிருக்கும்.. திரை பாடல் என்றில்லாமல் பக்தி இலக்கியத்திலும் சேர்க்கும் தகுதி படைத்தது இந்த பாடல் என்பது என் தனிப்பட்ட கருத்து..


6.பொன்னோவியம் (கழுகு)
திரைத்துறையில் ராஜாவை அறிமுகப்படுத்திய பஞ்சு அருணாச்சலதினுடைய அந்நாளைய பிரம்மாண்ட தயாரிப்பு கழுகு.. ஆரம்ப காலங்களில்  ராஜாவினது இசையில் வந்த பரீட்சார்த்தமான முயற்சிகளில் பொன்னோவியம் பாடல் மிக முக்கியமானது.. இசை கருவிகளின் ஆதிக்கத்தை பெருமளவு குறைத்து பெரும்பாலும் ஹம்மிங் (Humming) முறையிலேயே கொண்டு சென்றிருப்பார்.. இரு வேறு விதமான ஹம்மிங்களை ஒரே நேரத்தில் கொண்டுவந்து அதன் மேல் இளையராஜாவும் எஸ். ஜானகியும் செய்யும் ஹம்மிங்கை இன்று கேட்டாலும் இனம்புரியாத ஒரு உற்சாகம் தொற்றிக்கொள்ளும்.. ராஜாவின் அந்நாளைய tender voice இந்த பாடலின் மிகப்பெரிய பலம்..


7. பூவே நீ நானாகவும் (கை கொடுக்கும் கை)
என் அபிமான இயக்குனர் மகேந்திரனின் இயக்கத்தில் வெளிவந்த படம் "கை கொடுக்கும் கை".. அதில் இடம் பெற்ற இந்த பாடல் மிக அருமையானதொரு மெலடி.. இதுவும் ராஜாவே பாடியே பாடல் தான்.. கண் பார்வை தெரியாத தன் மனைவிக்கு  அவளது கணவன் ஆதரவாக பாடும் பாடல் இது.. இரவு நேரங்களில் தூங்கப்போகும் சமயங்களில் நான் தவறாமல் கேட்க்கும் பாடல்களில் இதுவும் ஒன்று.. இசை தாலாட்டு என்ற வார்த்தையின் அர்த்தம் இந்த பாடலுக்கு மிகவும் பொருந்தும்..

8. ஒரு கணம் ஒரு யுகமாக (நாடோடி தென்றல்)
இளையராஜாவின் சில நல்ல பாடல்கள் படங்களில் இடம் பெறாமலே போனதுண்டு.. (இது போன்ற பாடல்களை தொகுத்து விரைவில் ஒரு பதிவிட முயற்சிக்கிறேன்).. அவற்றில் எனக்கு பிடித்த முக்கியமான பாடல் "ஒரு கணம் ஒரு யுகமாக".. எஸ்.ஜானகியும் இளையராஜாவும் போட்டி போட்டு கொண்டு மிகவும் லயித்து பாடி இருப்பார்கள்.. காதலனை பிரிந்த காதலி முதல் பகுதியை பாடுவது போல ஜானகி உருகி இருப்பார்.. பின்பு காதலன் அவளை தேடி வந்து விட்டான் என்பது போல ராஜா அடுத்த பகுதியை ஆரம்பிப்பார்.. பிரிவு, சேர்க்கை என்று இரண்டு பகுதியுமே ஒரே தாளத்தில் மிகவும் மெதுவாகவே செல்வது போல தோன்றினாலும் இரண்டையுமே நன்றாகவே வேறுபடுத்தி பார்க்க முடியும்.. குறிப்பாக 'வானமும் பூந்தென்றலும்' என்று இளையராஜா ஆரம்பிக்கும் போது கூடுதலாக வயலினும், தபேலாவும் சேர்ந்து கொண்டு பிரிந்தவர் கூடினர் என்கிற உத்வேகத்தை கொடுக்கும்.. காதலில் இருப்பவர்கள், காதலின் ஆரம்ப கட்டங்களில் இருப்பவர்கள், காதலியை தற்காலிகமாக பிரிந்தவர்கள் போன்றோருக்கு மிகவும் பிடிக்கும்..

கூடுதல் தகவல்: மிக அரிதாக சில படங்களுக்கு அனைத்து பாடல்களையும் தானே  எழுதி இசையமைத்திருப்பார் இளையராஜா.. அந்த வகையிலே தனது நண்பர் பாரதிராஜா இயக்கிய இந்த படத்தின் அத்தனை பாடல்களையும் எழுதி இசையமைத்ததோடு மட்டுமல்லாமல் கதாசிரியராகவும் உழைத்திருந்தார் ஆம், இந்த படத்தினுடைய கதை இளையராஜாவினுடயது தான்.. பாரதிராஜாவின் இயக்கம், இளையராஜாவின் இசை/பாடல்கள்/கதை, எழுத்தாளர் சுஜாதாவின் வசனம் என்று பெரும் ஜாம்பவான்கள் இணைத்த படம் இது..

9. Kaise Kahoon (நண்டு)
இயக்குனர் மகேந்திரனின் நண்டு திரைபடத்தில் இடம்பெற்ற இனிமையான ஹிந்தி பாடல் 'Kaise Kahoon'.. எண்பதுகளில் இருந்த இசை மாதிரிகளில், ராஜாவின் இசையில் ஒரு மென்மையான ஹிந்தி பாடல் கேட்டால் எப்படி இருந்திருக்கும் என்று யோசிப்பவரா? இந்த பாடல் உங்களுக்கு தான்.. எனக்கு மிகவும் பிடித்த திரைப்படம் நண்டு.. எழுத்தாளர் சிவசங்கரி எழுதிய "நண்டு" என்கிற நாவலை தழுவி எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்தில் - தீபன் சக்கரவர்த்தி பாடிய "ஆடுதம்மா ஆற்றின் அலைகள்", உமா ரமணன் பாடிய "மஞ்சள் வெயில் மாலையிட்ட பூவே", மலேசியா வாசுதேவன் பாடிய "அள்ளி தந்த பூமி அன்னையல்லவா" என்று அனைத்து பாடல்களுமே என்னுடைய விருப்ப பாடல்கள் தான்.. நான் தேர்வு செய்திருக்கும் "Kaise Kahoon" என்கிற இந்த பாடலை பாடியவர் பூபேந்திர சிங் எனும் வடமொழி பாடகர்.. இந்த பாடலை எழுதியவர் கருப்பு வெள்ளை காலகட்டங்களில் மிகவும் பிரபலமாக இருந்த பின்னணி பாடகர் பி.பி. ஸ்ரீநிவாஸ் என்பது ஆச்சர்யமளிக்கும் செய்தி.. உறக்கமில்லா இரவுகளை விரட்ட இந்த பாடல் ஒரு நல்ல நிவாரணி..

10.மந்திரம் இது மந்திரம் (ஆவாரம்பூ)
புகழ்பெற்ற மலையாள இயக்குனர் பரதன், தேவர் மகனுக்கு பின் இயக்கிய திரைப்படம் "ஆவாரம்பூ".. மனதிற்கு பிடித்த பெண்ணை வர்ணித்து, சற்றே காமம் கலந்து காதலன் பாடும் இந்த பாடல் கே.ஜே. யேசுதாசின் காந்தர்வ குரலில் தெய்வீக தன்மையோடு நம் காதுகளில் ஒலிப்பதற்கு காரணம் இளையராஜாவின் இசையே அன்றி வேறெதுவும் இல்லை.. பாட்டின் இடையே மிருதங்கமும் வயலினும் மாறி மாறி இசைக்கப்படும் வகையில் (3:14 - 03:55) ஒரு இசை துண்டம் வரும்.. அதன் இனிமையை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.. அனுபவித்து கேட்டால் தான் உணர முடியும்..

குறிப்பு:
எனக்கு பிடித்த பத்து பாடல்களை தேர்வு செய்தபின தான் கவனிக்கிறேன்..
> எனக்கு பிடித்த மலேசியா வாசுதேவன், மனோ, சித்ராவின் குரல்களில் நான் ஒரு பாடலை கூட தேர்வு செய்திருக்கவில்லை..
> 2000 பிறகு வந்த எந்த படத்திலிருந்தும் நான் பாடல்களை தேர்வு செய்யவில்லை..
70-80-90- களில் வந்த பாடல்களையே தேர்வு செய்திருக்கிறேன்..
> மேற்கூறிய கால கட்டங்களில் வந்த இளையராஜாவின் பாடல்களை கேட்பதில் இருக்கு சுகானுபவம், அந்த பாடல்களை ஒளி வடிவில் பார்க்கும்போது கண்டிப்பா குறைந்து விடும்.. மகேந்திரன்,பாரதிராஜா, மணிரத்னம் போன்ற வெகு சிலர் தான் ராஜாவின் பாடல்களை நன்றாக படமாக்கி இருப்பார்கள்.. மற்றயோர் பாட்டு கிடைத்து விட்டதே, அதுவே போதும் என்கிற அளவில் படமாக்கி இருப்பார்கள்.. அதனால் அதனை பாடல்களையும் ஒலி வடிவிலேயே இணைத்திருக்கிறேன்..


நன்றி!!

No comments:

Post a Comment