Pages

Tuesday, December 08, 2009

அல்பிரட் ஹிட்ச்காக்




நான் அல்பிரட் ஹிட்ச்காக்-கினது திகில்/மர்மப் படங்களை மிகவும் விரும்பிப் பார்ப்பேன்.. சற்றேறக்குறைய அவரது எல்லா படங்களையுமே பார்த்திருக்கிறேன்.. தொழில்நுட்பம் வளர்ச்சியடையாத அந்தக் காலகட்டங்களிலேயே நாம் மிரளக்கூடிய அளவிற்கு அவருடைய படைப்புகள் இருக்கும்.. தற்பொழுது வருகின்ற திகில் திரைப்படங்களின் காட்சியமைப்பில் பெரும்பாலும் குரூரமும், வன்முறையுமே வியாபித்திருக்கும்.. இதற்கு மாறாக சற்றே நயமாக படம் பிடிக்கப்பற்றிக்கும் ஹிட்ச்காக்கினது படங்கள்..

மர்மப்படங்கள் மீது எனக்கு எப்படி ஈர்ப்பு ஏற்ப்பட்டது என்றால், சிறுவயதிலேயே எனக்கு மர்மக்கதைகளின்பால் ஏற்பட்ட காதல் தான் காரணம்..தேவனின் துப்பறியும் சாம்பு கதைகளை படிக்கும்போதெல்லாம் நானே அந்த கதையின் ஒரு கதாபாத்திரமாக மாறிவிடுவேன்.. (அவை பெரும்பாலும் குழந்தைகளை ஈர்க்கும் வண்ணம் சற்று நகைச்சுவை முலாம் பூசப்பட்டதாகவே இருக்கும்).. பிற்பாடு என்னுடைய பதின்ம வயதுகளில் பட்டுக்கோட்டை பிரபாகர், ஆர்னிகா நாசர், சுபா போன்றோர்களது படைப்புகளை மட்டுமல்லாது, சுஜாதவினது மர்ம நாவல்களையும் (எனக்கு மிகவும் பிடித்தமானவை - கரையெல்லாம் செண்பகப்பூ, நிர்வாண நகரம், கொலையுதிர் காலம்) விடாது படித்திருக்கிறேன்.. இந்திரா சௌந்தர்ராஜனுடைய அமானுஷ்யம் கலந்த மர்ம நாவல்களையும் எனக்கு ரொம்பப் பிடிக்கும்..

படித்து முடித்து, பிற்பாடு வேலையில்சேர்ந்த இப்பொழுதைய கால கட்டங்களில்தான் (கடந்த மூன்று/நான்கு வருடங்களில்) ஹிட்ச்காக்கினுடைய மர்மப்படங்களை தேடிப்பிடித்து பார்க்க ஆரம்பித்தேன்.. அவற்றில் எனக்குப் பிடித்த சில படங்களையும், அவற்றை தமிழ்த் திரைப்படங்களில் எவ்வாறு செலவில்லாமல் (ஹிட்ச்காக்கிடம் கண்டிப்பாக முறையாக உரிமையெல்லாம் பெற்றிருக்க மாட்டார்கள் என்பது என்னுடைய எண்ணம்) புகுத்தி இருக்கிறார்கள் என்பதைப் பற்றியும் இங்கு எழுதலாம் என்பதே இந்தப் பதிவினுடைய நோக்கம் ஆகும்..

Psycho (1960)

> ஹிட்ச்காக் என்றதுமே எல்லாருக்கும் நினைவிற்கு வருவது அவருடைய mastepiece என்று கருதப்படுகிற Psycho படமாகத்தானிருக்கும்.. இதைப்பற்றி ஒரு தனி பதிவே எழுத வேண்டி இருக்குமளவிற்கு விஷயங்கள் இருக்கின்றன..
> கலர்ப்படங்கள் சற்றேறக்குறைய முழுமையாக ஆக்கிரமிக்கப் பட்டுவிட்ட காலத்தில், முழுக்க முழுக்க கருப்பு வெள்ளையிலேயே எடுக்கப்பட்டது இந்தப் படம்..
> இந்தப்படத்தில் வரும் கொலைகாட்சிகளில் ஒன்றில் கூட கொலையாளியினுடைய கத்தி எதிராளியின் மீது பாய்வது போல் நீங்கள் பார்க்க முடியாது.. நீங்கள் உன்னிப்பாக கூர்ந்து கவனித்தால் தான் அது உங்களுக்குப் தெரியவரும்..
> அதிலும் குறிப்பாக, கதாநாயகி குளியலறையில் கொலை செய்யப்படும் காட்சி மிகவும் மூர்க்கத்தனமான காண்பிக்கப்பட்டிருப்பது போல் தெரியும்.. ஆனால், அந்தக்காட்சியில் அவள் மீது கத்திக்குத்து விழுவதை நீங்கள் பார்க்க முடியாது..
> ஏழு நாட்கள் தொடர்ந்து எடுக்கப்பட்ட இந்தக்காட்சி, திரையும் வெறும் மூன்று நிமிடங்களே வரும்.. அந்த மூன்று நிமிடங்களில் பல்வேறு கோணங்களில் இருந்தும், cut -shot உத்தியைப் பயன்படுத்தியும் காட்சியமைத்து நம்மை மிரட்டி இருப்பார்.. அமெரிக்க திரைப்படக் கல்லூரியிலே, ஹிட்ச்காக் இந்தக் காட்சி எப்படி படம் பிடித்தார் என்று ஒரு செயல்முறை விளக்க வகுப்பே இருக்கிறதென்றால் பார்த்துக்கொள்ளுங்கள்..
> கதையின் போக்கு மிகவும் அருமையாக இருக்கும்.. படத்தினுடைய முதல் பாதியில், அந்த நாற்பதாயிரம் டாலர்கள் தான் கதையின் முக்கியமான காரணி என்று நம்மை எண்ண வைத்து பிற்ப்பாடு கதையை வேறு களத்தில் நகர்த்திச்சென்றிருப்பார்..
> கதாநாயகிக்கு ஏதோ தப்பாக நடக்கப்போகிறது என்பதை நமக்கு அடுத்தடுத்த காட்சிகளின் வாயிலாக நம்மை எச்சரித்திருப்பார்.. அவளை சந்தேகக்கண்ணோடு அணுகும் நெடுஞ்சாலை காவலதிகாரி, அவளது காரை மாற்றிக்கொடுக்கும் அந்த கடை உரிமையாளர், அந்தக்கடையின் பணியாளர் கடைசியாக "Hey" என்று அழைத்து அவள் மறந்து விட்டுச்செல்லவிருந்த பெட்டியை கொடுப்பது என்று நம்மை அடுத்து நிகழவிருக்கும் பயங்கரத்திற்கு தயார் செய்திருப்பார்)..
> Anthony Perkins நடிப்பும், Bernard Herrmann இசைகோர்பும் படத்திருக்கு பெரிய பலம் சேர்த்ததென்பதையும் மறுக்க முடியாது.. (இவர்கள் மிகச்சிறந்த கலைஞர்களா இல்லையா என்பதெல்லாம் எனக்கு தெரியாது.. உண்மையைச் சொல்லவேண்டுமென்றால், இந்தப்படம் பார்த்த பிறகே இவர்களைப்பற்றி எனக்கு தெரியவந்தது.. ஆனாலும் Psycho-ல் இவர்களது பங்களிப்பைப் பார்த்தபிறகு என்னால் அதை எழுதாமல் இருக்க முடியவில்லை)
> இந்தப்படத்தின் மூலக்கருவைப் பயன்படுத்தி மூடுபனி (பிரதாப் போத்தன் நடித்தது) என்றொரு தமிழ்ப்படம் வந்தது.. அது வெற்றிகரமாக ஓடியதா இல்லையா என்று எனக்குத் தெரியாது..

Vertigo (1958)

> இதை ஒரு திகில் படம் என்று சொல்ல முடியாது.. மர்மப்படம் என்றே சொல்ல வேண்டும்..
> acrophobia எனும் உயரத்தைக் கண்டால் நடுங்கும் இயல்பை உடைய ஒரு துப்பறிவாளன் தான் படத்தின் கதாநாயகன்..
> கதாநாயகனது பயத்தை பார்வையாளர்களும் உணர வேண்டுமென்பதற்க்காக முதன் முதலில் இந்தப்படத்தில்தான் Zoom-Out டெக்னிக்கை இவர் பயன்படுத்திக் காட்டினார் என்று imdb-யில்படித்தேன்..
> acrophobia-வினால் தான் இழந்த வேலையே/அடைந்த அவமானத்தைத் துடைத்தெறிவதற்க்காக, நடத்தை சரிவராத ஒருவரது மனைவியை கண்காணிக்கும் பொறுப்பை ஏற்றுக்கொள்ளும் கதாநாயகன், பிற்பாடு அவுளுடனேயே காதலில் விழுவதாக கதைசெல்லும்..
> அந்தக்காதலானது மர்மம்/முற்பிறவி ஞாபகம்/ரகசியம் நிறைந்த பல சம்பவங்களுக்கு இட்டுச்செல்லும்.. அந்தப் பெண்ணுடைய கணவன் தன்னுடைய சுயநலத்திற்க்காக acrophobia குறைபாடுடைய கதாநாயகனைப் பயன்படுத்தியிருப்பார் என்பது இறுதில் தான் நமக்குத் தெரியவரும்..
> துப்பறியும் கதைதான் என்றாலும், தன்னுடைய திரைக்கதையின் மூலம் மிகவும் மிகவும் பிரமாதமாகப் படமாக்கி இருப்பார் ஹிட்ச்காக்..
> உயரமான கட்டிடத்தின் மேலேறிச் செல்லும் கதாநாயகி, அங்கிருந்து கீழே விழுந்து இறப்பது போல் (நாயகனை ஏமாற்றுவதற்காக) சித்தரிக்கப்பட்டிருக்கும் காட்சியை - அதே காலகட்டத்தில் எம்ஜியார் நடித்து வெளிவந்த "கலங்கரை விளக்கம்" என்ற தமிழ்ப்படத்தில் பயன்படுத்தி இருப்பார்கள்.. தமிழ் படங்களில் கூட வித்தியாசமாக, அதுவும் அந்நாட்களிலேயே யோசித்திருக்கிறார்களே என்று ரொம்பநாட்களாக வியந்து கொண்டிருந்தேன்.. சில வருடங்களுக்கு முன்பு Vertigo-படம் பார்க்கும் வரை எனக்கு இந்த உண்மை தெரியாது..

Shadow of a doubt (1943)

> ஹிட்ச்காக்கினது ஆரம்ப காலத்தில் வந்த இந்தப்படம் தான் அவரை ஒரு கைதேர்த்த திகில் திரைப்பட இயக்குனராக உலகுக்கு அறிவித்தது..
> ஹிட்ச்காக்கைப் பொறுத்தவரையில், தான் இயக்கியவற்றில் தனக்கு மிகவும் பிடித்த படங்கள் என்று சொல்லும் மிகச் சில படங்களில் இதுவும் ஒன்று..
> "Uncle Charlie", "Lady Charlie" என்ற இரு கதாபாத்திரங்களை மட்டும் பிரதானமாக வைத்துப் பின்னப்பட்டிருக்கும் இப்படம், ஒரு "silent thriller" வகையைச் சேர்த்தது..
> Lady Charlie என்பவள் தன் குடும்பத்தினருடன் ஒரு சிறு நகரில் வசித்து வரும் ஒரு இளம் பெண்.. அவளது வீடிற்கு வருகை தரும் (அவளது குடும்பத்தினர் இதுவரையில் பார்த்திராத) Uncle Charlie-னது வருகை, அதை தொடர்ந்து வரும் சம்பவங்கள் என்று நீளும் இப்படம், மிக அருமையாக திடுக்கிடும் சம்பவங்கள் கொண்டது..
> சத்யராஜ் நடித்த எண்பதுகளில் வந்த ஒரு திரைப்படம், இதே போன்ற ஒரு தளத்தில் எடுக்கப்பட்டிருக்கும்.. (படத்தின் பெயர் ஞாபகம் இல்லை.. சமீபத்தில் ராஜ் டிவியில் ஒளிபரப்பான பொழுது அதைப்பார்த்தேன்..)
> மேலும், Lady Charlie-யை Uncle Charlie பூட்டிய கார் செட்டில் சிக்க வைத்து, காரை ஸ்டார்ட் செய்து அந்த புகைமூட்டங்களில் சிக்கவைத்து கொலை செய்ய முயலும் சம்பவம், அஜித் நடித்த காதல் மன்னன் படத்தில் வேறு விதத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கும்..

மேற்கூறிய மூன்று படங்கள் மட்டுமே எனக்குப் பிடித்த படங்கள் என்றில்லை.. இதைதவிர Lifeboat, The Birds, Rebecca, Rope போன்ற படங்களும் எனக்கு மிகவும் பிடித்தவை.. அவற்றைப் பற்றி அடுத்து பதிவில் விரிவாக எழுதலாமென்றிருக்கிறேன்..

நன்றி!!

Tuesday, August 04, 2009

படித்ததும், படிக்க விரும்புவதும்

என் அபிமானத்திற்குரிய திரு.வைக்கோ அவர்கள், இரண்டு வருடங்களுக்கு முன்பு நடந்த அமரர். கல்கியின் புகழ் போற்றும் விழாவில், அவரது "சிவகாமியின் சபதம்" பற்றி பேசிய மேடைப்பேச்சினை சமீபத்தில் கேட்டேன்..
அதைக் கேட்டதிலிருந்து கல்கியின் Master Pieces என வர்ணிக்கப்படுகின்ற "பார்த்திபன் கனவு", "பொன்னியின் செல்வன்", "சிவகாமியின் சபதம்" என்ற இந்த மூன்று படைப்புகளையும் படித்துவிட வேண்டும் என்கிற ஆர்வம் மிகுந்துவிட்டது..
இங்கு பெங்களூரில் அதற்கான வாய்ப்புகள் அவ்வளவாக இல்லையென்பதால், அடுத்த வாரம் எனது ஊருக்கு ஒருவார விடுப்பில் செல்லும்போது குறைந்தபட்சம் எதாவது மலிவுவிலைப்பதிப்பாவது வாங்கி படித்துவிடவேண்டும் என்றிருக்கிறேன்..

இதற்கு முன்பே, நான் கல்கி அவர்களது படைப்புகளைப்பற்றி நிறைய கேள்விப்பட்டிருந்தாலும், அவற்றைப் படிக்கும் வாய்ப்பு கிடைத்தும் படித்ததில்லை..
சிறுவயதில் நான் ஒவ்வொரு வாரமும் நூலகத்திற்கு செல்வேன்.. என் தாத்தா என்னை அப்படி பழக்கிவிட்டிருந்தார்.. இந்தப்பழக்கம் நான் பத்தாவது முடித்தப்பின், அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போய்விட்டது.. (காரணம் ஒன்றும் புதிதில்லை - அந்த பதின் வயதிற்கே உண்டான வேறு சில விஷயங்களில் ஆர்வம் அதிகரித்து விட்டதுதான்..

கிட்டத்தட்ட ஐந்தாவது படிக்கும் வரையில் என்னுடைய அபிமானதிற்குரியது முல்லா, பீர்பால், தெனாலிராமன் வகையிலான நீதிக்கதைகள்தான்..
பிற்பாடு, தேவனின் "துப்பறியும் சாம்பு", சுஜாதாவின் கணேஷ்,வசந்த் ரீதியிலான துப்பறியும் கதைகளே என்னை ஆக்கிரமித்திருந்தது..
அப்போது, பொன்னியின் செல்வனைப் படிக்க வேண்டுமென்ற ஆசை/ஆர்வம் இருந்தாலும் கூட, அதன் எடை மற்றும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்கங்கள் என்னை படிக்கவிடாமல் செய்தன.. எங்கே புரியாமல் போய்விடுமோ என்ற அந்த வயதிற்கே உண்டான பயமும் ஒரு காரணம்.. இப்போது படித்தால் புரியும் என்கிற நம்பிக்கையில் படிக்கப்போகிறேன்.. பார்க்கலாம்..

பி.கு: இணையத்தில் தேடிப்ப்பிடித்து, கல்கி அவர்களது "சோலைமலை இளவரசி" என்கிற குறுநாவலைப் படித்துவிட்டேன்.. அவருடைய காட்சிகளை விவரிக்கும் பாங்கு, எழுத்து நடை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.. இப்போது பொன்னியின் செல்வனைப் படிக்க மிகவும் ஆர்வமாயிருக்கிறேன்..

இங்கே நம் திருவள்ளுவருடைய சிலை திறப்பிற்க்குப்பதிலாக, சர்வக்ஞர் என்கிற ஒரு கன்னட புலவருடைய சிலையை சென்னையில் திறக்கப் போகிறார்களாம்..
திருவள்ளுவர் எப்பேர் பட்டவர்.. அந்த தெய்வப்புலவருடைய குறள்கள், நம் வாழ்வின் எந்த ஒரு இக்கட்டான சூழ்நிலையிலும் நம்மை அறிவுறுத்தி, நல்வழிப்படுத்தும் வகையில் அமையப் பெற்றிருப்பதைக் காணலாம்.. (சிறுவயதில், ஒரு பந்தயத்திற்காக நூறு குறள்களை (விளக்கத்துடன்) மனப்பாடம் செய்ய முயன்று அதில் தோல்வி அடைந்திருக்கிறேன் என்பது ஒரு வேடிக்கையான மலரும் நினைவு)..
அப்படிப்பட்ட நம் வள்ளுவருக்கு இணையானவராக இப்போது காட்டப்படும் சர்வக்ஞர், உண்மையிலேயே தகுதி வாய்ந்தவர்தானா என்கிற சந்தேகம் எனக்கு மட்டுமல்ல, நம்மில் பலருக்கு எழும்பி இருப்பதில் ஆச்சர்யம் எதுவும் கிடையாது.. (இணையானவராக இருப்பின், மிக்க மகிழ்ச்சி)..
அவருடைய படைப்புகளின் தமிழ் மொழிபெயர்ப்பை, இணையத்தில் நான் தேடிப்பார்த்த வரையில் ஒன்றும் கிட்டவில்லை.. அடுத்த வாரம், பொன்னியின் செல்வனை வாங்கும்போது சர்வக்ஞருடைய படைப்புகளின் தமிழ் மொழிபெயர்ப்பு நூல் ஏதாவது கிடைக்குமா என்று பார்க்க வேண்டும்..

நன்றி!!

Monday, May 25, 2009

அந்த பத்து நாட்கள்

உடலளவிலும் மனதளவிலும் நிறைய மாற்றங்கள் தேவைப்பட்டிருந்தது எனக்கு.. என்னை நானே சரி செய்து கொள்வதற்காக, பத்து நாட்கள் விடுமுறையில் என் ஊருக்கு / வீட்டுக்குச் சென்றிருந்தேன்.. இந்த பத்து நாட்களுக்குப் பிறகு, எனது மனதும் உடலும் நன்கு தெளிவு பெற்றிருப்பதாகவே நான் உணர்கிறேன்..

இங்கே தனிமையிலேயே வாழ்ந்து கொண்டிருக்கும் எனக்கு, என் குடும்பத்தினருடைய அருகாமை மிகுந்த மன நிம்மதியை/அமைதியை/மகிழ்ச்சியைக் கொடுத்தது.. இதோ - குறைந்தபட்சம் அடுத்து வரும் மூன்று மாதங்களுக்குத் தேவையான சக்தியை சேகரித்துவிட்டு வந்துருக்கிறேன்..

பல்வேறு பிரச்சனைகளினால் குழப்பமான மன நிலையில் ஊருக்குச் சென்ற நான், என்னுடைய தந்தையுடனான கலந்துரையாடலுக்குப்பின் இப்பொழுது பின் தெளிந்த மனதுடன் இருக்கிறேன்..
என் சகோதரன், சகோதரியுடனான சிறுசிறு சண்டைகள், அம்மாவின் சாப்பாடு, நிம்மதியான உறக்கம், குடும்பத்தினருடனான ஊர்சுற்றல், DVD- ல்அருமையான நல்ல திரைப்படங்கள் என்று இந்த பத்து நாட்களுமே மிகவும் மகிழ்வான தருணங்களாகவே அமைந்திருந்தது..

நான் பார்த்த திரைப்படங்களையும் இங்கே சொல்லி விடுகிறேன்.. நமது வழக்கமான படங்களைப்போல் இல்லாமல், உலகஅளவில் பல்வேறு ஊடகங்களாலும், பார்வையாளர்களாலும் அங்கீகரிக்கப்பட்ட தரமான திரைப்படங்கள் இவை..
1. The Fall
2. The Pianist
3. The Shawshank Redemption
4. Brave Heart
5. Schindler's List
6. The Truman Show
7. Pulp Fiction
8. Downfall
இவற்றில் பெரும்பாலானவை சற்றே பழைய திரைப்படங்களாக இருப்பின்னும், இவற்றை பார்க்கக்கூடிய சந்தர்பம் எனக்கு இப்பொழுதுதான் கிட்டியது.. வாய்ப்பு கிடைத்தால் தவிர்க்காமல் பாருங்கள்..

உங்களுக்கும் சற்றேனும் குழப்பங்கள், தடுமாற்றங்கள் இருந்தால் - யோசிக்கவே வேண்டம்..
ஒரு முறை நீங்கள் பிறந்த மண்ணுக்கு,சொந்த வீட்டுக்குச் சென்று வாருங்கள்..
நீங்கள் மிகவும் தெளிவானவர்களாக உணர்வீர்கள்..

நன்றி!!

Thursday, April 02, 2009

மற்றுமொரு "சொல்லத்தான் நினைக்கிறேன்"

சமீபத்தில் இந்தக் கதையை "கர்ணன் Vs அர்ஜுனன்!!" என்ற தலைப்பிலே ஒரு வலைப்பதிவில் படித்தேன்..
இணைய முகவரி -> http://ninnaicharan.blogspot.com/2009/02/vs.html

கர்ணனுக்கு கிடைக்கும் புகழ் குறித்து அர்ஜுனனுக்கு எரிச்சல். அதை கண்ணனிடம் தெரியப் படுத்தினான்.

அவனைத் தெளிய வைக்க எண்ணிய கண்ணன், ஒரு நாள், ஒரு தங்க குன்று ஒன்றை உருவாக்கி, அர்ஜுனனை அழைத்து ஒரு மண் வெட்டி ஒன்றைக் கையில் கொடுத்து, “ இந்த குன்றை இன்று மாலைக்குள் காலி செய்.. யாருக்கு வேண்டுமானாலும் எவ்வளவு வேண்டுமானாலும் தானம் செய்து கொள்” என்றான்.

அர்ஜுனனும் காலையிலிருந்து போவோர் வருவோருக்கெல்லாம் வெட்டி வெட்டி கொடுத்துக் கொண்டே இருந்தான். தங்கம் தீருவதாகத் தெரியவில்லை. மாலையும் ஆகி விட்டது. இன்னும் அரைமணி நேரத்திற்குள் முடிவதாகவும் தெரியவில்லை. கண்ணனை அழைத்துச் சொன்னான் அர்ஜுனன்.

இதற்காகவே காத்திருந்த கண்ணன், கர்ணனை அழைத்து விபரம் சொன்னான்.

சரி என்று தலையாட்டிய கர்ணன், அவ்வழியே சென்ற இருவரை அழைத்து, ” இந்தத் தங்க குன்றை பாதிப் பாதியாக்கி, நீங்கள் இருவரும் வைத்துக் கொள்ளுங்கள்” என்று சொல்லி விட்டு நடையைக் கட்டினான்.

அப்பொழுத்தான் அர்ஜுனனுக்கு புரிந்தது, அவனவன் தகுதிக்கான புகழ்தான் கிடைக்கும், அடுத்தவனைப் பார்த்துப் பொறாமைப் படுவதில் அர்த்தமில்லையென்பது.

இப்போ என்னேட கேள்வி??

கொடுப்பது எனத் தீர்மானித்ததும், தானத்தின் அளவை மதிப்பிடாமல், ஒரு நொடியினில் தானம் செய்துவிட்ட கர்ணன், கொடையில் சிறப்பினும், அவ்வளவு தங்கத்தையும் இருவருக்கு மட்டுமே பகிர்ந்தளித்தான்.

விலையுர்ந்த தானம் என்பதால் எல்லோருக்கும் 'பகிர்ந்தளிப்போம்' என்று எண்ணி, அளந்து மதிப்பிட்டு, எல்லோருக்கும் தானம் செய்தாலும், தானத்தை அளந்ததான் அர்ஜுனன்..

ஆகக் கூடி, கர்ணன் சிறந்தவனா, அர்ஜுனன் சிறந்தவனா?


இதே கதையை, திருமுருக கிருபானந்தவாரியார் அவர்களது ஆன்மீக சொற்ப்பொழிவொன்றிலே "தானத்திலே சிறந்தவன் கர்ணனா தர்மனா" என்று அவர் பேசக் கேட்டிருக்கிறேன்..
மேற்கூறிய வலைப்பதிவர் அதை "கர்ணனா அர்ஜுனனா" என்று மற்றொரு இணையத்திலே படித்ததாகத் தெரிவித்தார்..

இந்தத் தருணத்திலே மற்றுமொரு விஷயத்தை நான் குறிப்பிட விரும்புகின்றேன்..
மதுரையைச் சேர்ந்த முனைவர் திரு.ஞானசம்பந்தன் அவர்களைப் பற்றி நிறைய பேருக்குத் தெரிந்திருக்குமா என்று தெரியவில்லை.. இயல்பான நகைச்சுவையோடு மேடைகளிலே உரையாற்றக்கூடியவர்.. நிறைய புத்தகங்களையும் எழுதி இருக்கிறார்.. அவருடைய நகைச்சுவைகள் எந்த தரப்பினரையும் புண்படுத்தாதவகையிலே அமைந்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்க ஒரு தனிச்சிறப்பு..

சன் தொலைக்காட்சியிலே அசத்தப் போவது யாரு என்கிற நிகழ்ச்சியிலே மதுரை முத்து என்றொருவர் பேசக் கேட்டிருப்பீர்கள்.. ஞானசம்பந்தன் அவர்களை தெரியாதவர்களுக்குக் கூட முத்துவை நன்றாக தெரிந்திருக்கும்..
முத்து சொல்லும் நகைச்சுவைகளிலே சுமார் நாற்பது சதவிகிதம் ஞானசம்பந்தன் அவர்கள் எழுதிய புத்தகங்களிலிருந்தே எடுக்கப்பட்டதாக இருக்கும்..

உரியவர் என்றொருவர் இருக்க அதை வேறொருவர் எந்த வித சிரமமும் இல்லாமல் களவாடி பெயர் பெற்றுக்குக்கொள்வது மிகவும் கேவலமான ஒன்று.. இதை சமீபத்தைய ஒரு பேட்டியில் ஞானசம்பந்தன் அவர்களே மிகுந்த வேதனையுடன் (எவருடைய பெயரையும் குறிப்பிடாமல்) தெரிவித்திருக்கின்றார்..

முத்து போன்றவர்களுக்கும், தன்னுடைய கற்பனைக்கும்/சிற்றறிவிற்கும் ஏற்றவாறு உண்மையான கதைகளை மாற்றி ஊடகங்களில் சொல்பவர்களுக்கும் "மானம் மாரியாத்தா, சூடு சூலாயுதம், வெக்க வேலாயுதம்" (நன்றி - கவுண்டமணி) போன்று எதுவுமே இருக்காது போலத்தான் தெரிகிறது.. "M S விஸ்வநாதன் - சொல்லத்தான் நினைக்கிறேன்.. உள்ளத்தால் துடிக்கிறேன்" என்கிற என் முந்தைய பதிவிலேயே நான் இதை சொல்லியிருப்பேன்...

என்ன செய்வது.. இது போன்ற சிலவற்றை கடந்து வரும்போது மறுபடியும் சொல்ல வேண்டியிருக்கிறதே..

நன்றி!!

Monday, March 09, 2009

தஸ்விதான்யா (The Best Goodbye Ever)

சமீபத்தில் தஸ்விதான்யா என்றொரு ஹிந்திப் படம் பார்த்தேன்..
இன்னும் சில நாட்களில் இறந்து போய்விடுவோம் என்று தெரியவருகிற ஒரு சாதாரண மனிதன் தன்னுடைய இறுதி ஆசைகளையெல்லாம் நிறைவேற்றிக்கொள்வதாக படம் போகிறது..
குறை சொல்ல முடியாத அளவிற்கு ஒரு நல்ல படம்..

படத்தைப் பார்த்த பிறகு, நமக்கு இது போல் என்னென்ன ஆசைகள் இருக்கின்றன என்று யோசித்துப்பார்த்தேன்..
அவ்வளவாக ஒன்றும் தேறவில்லை..
என்னுடைய அதிகபட்ச ஆசை என்னவாக இருக்குமென்று பார்த்தால், தினமும் எந்த வித பிரச்சனைகளும் இல்லாமல் அலுவலகத்திற்க்குச் சென்றுவருவதாகத்தான் இருக்கும்..

"ஆசைகள் அற்ற இடத்தில் துன்பங்கள் அற்றுவிடும்" என்கிறார் புத்தர்..
(அதே புத்தர், ஆசைப்படாமல் இருப்பதற்கு ஆசைப்பட்டார் என்பது வேறு விஷயம்)..அப்படி என்றால் எனக்கு துன்பங்களே இல்லையா என்று கேட்டால், எக்கச்சக்கமாக உண்டு..

வாழ்வில் பெரிதாக நிறைவேற்றவேண்டிய அளவிற்கு எனக்கொன்றும் கடமைகள் இல்லை..
பிறகு எதற்காக நான் வாழ்ந்துகொண்டிருக்கின்றேன்?
என்னுடைய இலக்கு என்ன?
எதை நோக்கி நான் போய்க்கொண்டிருக்கிறேன்?
ஒன்றுமே தெரியவில்லை..

சாதாரணமாக ஒரு படத்தைப் பார்த்து விட்டு இவ்வளவு தூரம் யோசிப்பது எனக்கே கொஞ்சம் அதிகம் போல்தான் தெரிகிறது.. என்ன செய்வது.. யோசித்துவிட்டேன்.. அதனால் எழுதியும் விட்டேன்..

நன்றி!!