Tuesday, December 08, 2009
அல்பிரட் ஹிட்ச்காக்
நான் அல்பிரட் ஹிட்ச்காக்-கினது திகில்/மர்மப் படங்களை மிகவும் விரும்பிப் பார்ப்பேன்.. சற்றேறக்குறைய அவரது எல்லா படங்களையுமே பார்த்திருக்கிறேன்.. தொழில்நுட்பம் வளர்ச்சியடையாத அந்தக் காலகட்டங்களிலேயே நாம் மிரளக்கூடிய அளவிற்கு அவருடைய படைப்புகள் இருக்கும்.. தற்பொழுது வருகின்ற திகில் திரைப்படங்களின் காட்சியமைப்பில் பெரும்பாலும் குரூரமும், வன்முறையுமே வியாபித்திருக்கும்.. இதற்கு மாறாக சற்றே நயமாக படம் பிடிக்கப்பற்றிக்கும் ஹிட்ச்காக்கினது படங்கள்..
மர்மப்படங்கள் மீது எனக்கு எப்படி ஈர்ப்பு ஏற்ப்பட்டது என்றால், சிறுவயதிலேயே எனக்கு மர்மக்கதைகளின்பால் ஏற்பட்ட காதல் தான் காரணம்..தேவனின் துப்பறியும் சாம்பு கதைகளை படிக்கும்போதெல்லாம் நானே அந்த கதையின் ஒரு கதாபாத்திரமாக மாறிவிடுவேன்.. (அவை பெரும்பாலும் குழந்தைகளை ஈர்க்கும் வண்ணம் சற்று நகைச்சுவை முலாம் பூசப்பட்டதாகவே இருக்கும்).. பிற்பாடு என்னுடைய பதின்ம வயதுகளில் பட்டுக்கோட்டை பிரபாகர், ஆர்னிகா நாசர், சுபா போன்றோர்களது படைப்புகளை மட்டுமல்லாது, சுஜாதவினது மர்ம நாவல்களையும் (எனக்கு மிகவும் பிடித்தமானவை - கரையெல்லாம் செண்பகப்பூ, நிர்வாண நகரம், கொலையுதிர் காலம்) விடாது படித்திருக்கிறேன்.. இந்திரா சௌந்தர்ராஜனுடைய அமானுஷ்யம் கலந்த மர்ம நாவல்களையும் எனக்கு ரொம்பப் பிடிக்கும்..
படித்து முடித்து, பிற்பாடு வேலையில்சேர்ந்த இப்பொழுதைய கால கட்டங்களில்தான் (கடந்த மூன்று/நான்கு வருடங்களில்) ஹிட்ச்காக்கினுடைய மர்மப்படங்களை தேடிப்பிடித்து பார்க்க ஆரம்பித்தேன்.. அவற்றில் எனக்குப் பிடித்த சில படங்களையும், அவற்றை தமிழ்த் திரைப்படங்களில் எவ்வாறு செலவில்லாமல் (ஹிட்ச்காக்கிடம் கண்டிப்பாக முறையாக உரிமையெல்லாம் பெற்றிருக்க மாட்டார்கள் என்பது என்னுடைய எண்ணம்) புகுத்தி இருக்கிறார்கள் என்பதைப் பற்றியும் இங்கு எழுதலாம் என்பதே இந்தப் பதிவினுடைய நோக்கம் ஆகும்..
Psycho (1960)
> ஹிட்ச்காக் என்றதுமே எல்லாருக்கும் நினைவிற்கு வருவது அவருடைய mastepiece என்று கருதப்படுகிற Psycho படமாகத்தானிருக்கும்.. இதைப்பற்றி ஒரு தனி பதிவே எழுத வேண்டி இருக்குமளவிற்கு விஷயங்கள் இருக்கின்றன..
> கலர்ப்படங்கள் சற்றேறக்குறைய முழுமையாக ஆக்கிரமிக்கப் பட்டுவிட்ட காலத்தில், முழுக்க முழுக்க கருப்பு வெள்ளையிலேயே எடுக்கப்பட்டது இந்தப் படம்..
> இந்தப்படத்தில் வரும் கொலைகாட்சிகளில் ஒன்றில் கூட கொலையாளியினுடைய கத்தி எதிராளியின் மீது பாய்வது போல் நீங்கள் பார்க்க முடியாது.. நீங்கள் உன்னிப்பாக கூர்ந்து கவனித்தால் தான் அது உங்களுக்குப் தெரியவரும்..
> அதிலும் குறிப்பாக, கதாநாயகி குளியலறையில் கொலை செய்யப்படும் காட்சி மிகவும் மூர்க்கத்தனமான காண்பிக்கப்பட்டிருப்பது போல் தெரியும்.. ஆனால், அந்தக்காட்சியில் அவள் மீது கத்திக்குத்து விழுவதை நீங்கள் பார்க்க முடியாது..
> ஏழு நாட்கள் தொடர்ந்து எடுக்கப்பட்ட இந்தக்காட்சி, திரையும் வெறும் மூன்று நிமிடங்களே வரும்.. அந்த மூன்று நிமிடங்களில் பல்வேறு கோணங்களில் இருந்தும், cut -shot உத்தியைப் பயன்படுத்தியும் காட்சியமைத்து நம்மை மிரட்டி இருப்பார்.. அமெரிக்க திரைப்படக் கல்லூரியிலே, ஹிட்ச்காக் இந்தக் காட்சி எப்படி படம் பிடித்தார் என்று ஒரு செயல்முறை விளக்க வகுப்பே இருக்கிறதென்றால் பார்த்துக்கொள்ளுங்கள்..
> கதையின் போக்கு மிகவும் அருமையாக இருக்கும்.. படத்தினுடைய முதல் பாதியில், அந்த நாற்பதாயிரம் டாலர்கள் தான் கதையின் முக்கியமான காரணி என்று நம்மை எண்ண வைத்து பிற்ப்பாடு கதையை வேறு களத்தில் நகர்த்திச்சென்றிருப்பார்..
> கதாநாயகிக்கு ஏதோ தப்பாக நடக்கப்போகிறது என்பதை நமக்கு அடுத்தடுத்த காட்சிகளின் வாயிலாக நம்மை எச்சரித்திருப்பார்.. அவளை சந்தேகக்கண்ணோடு அணுகும் நெடுஞ்சாலை காவலதிகாரி, அவளது காரை மாற்றிக்கொடுக்கும் அந்த கடை உரிமையாளர், அந்தக்கடையின் பணியாளர் கடைசியாக "Hey" என்று அழைத்து அவள் மறந்து விட்டுச்செல்லவிருந்த பெட்டியை கொடுப்பது என்று நம்மை அடுத்து நிகழவிருக்கும் பயங்கரத்திற்கு தயார் செய்திருப்பார்)..
> Anthony Perkins நடிப்பும், Bernard Herrmann இசைகோர்பும் படத்திருக்கு பெரிய பலம் சேர்த்ததென்பதையும் மறுக்க முடியாது.. (இவர்கள் மிகச்சிறந்த கலைஞர்களா இல்லையா என்பதெல்லாம் எனக்கு தெரியாது.. உண்மையைச் சொல்லவேண்டுமென்றால், இந்தப்படம் பார்த்த பிறகே இவர்களைப்பற்றி எனக்கு தெரியவந்தது.. ஆனாலும் Psycho-ல் இவர்களது பங்களிப்பைப் பார்த்தபிறகு என்னால் அதை எழுதாமல் இருக்க முடியவில்லை)
> இந்தப்படத்தின் மூலக்கருவைப் பயன்படுத்தி மூடுபனி (பிரதாப் போத்தன் நடித்தது) என்றொரு தமிழ்ப்படம் வந்தது.. அது வெற்றிகரமாக ஓடியதா இல்லையா என்று எனக்குத் தெரியாது..
Vertigo (1958)
> இதை ஒரு திகில் படம் என்று சொல்ல முடியாது.. மர்மப்படம் என்றே சொல்ல வேண்டும்..
> acrophobia எனும் உயரத்தைக் கண்டால் நடுங்கும் இயல்பை உடைய ஒரு துப்பறிவாளன் தான் படத்தின் கதாநாயகன்..
> கதாநாயகனது பயத்தை பார்வையாளர்களும் உணர வேண்டுமென்பதற்க்காக முதன் முதலில் இந்தப்படத்தில்தான் Zoom-Out டெக்னிக்கை இவர் பயன்படுத்திக் காட்டினார் என்று imdb-யில்படித்தேன்..
> acrophobia-வினால் தான் இழந்த வேலையே/அடைந்த அவமானத்தைத் துடைத்தெறிவதற்க்காக, நடத்தை சரிவராத ஒருவரது மனைவியை கண்காணிக்கும் பொறுப்பை ஏற்றுக்கொள்ளும் கதாநாயகன், பிற்பாடு அவுளுடனேயே காதலில் விழுவதாக கதைசெல்லும்..
> அந்தக்காதலானது மர்மம்/முற்பிறவி ஞாபகம்/ரகசியம் நிறைந்த பல சம்பவங்களுக்கு இட்டுச்செல்லும்.. அந்தப் பெண்ணுடைய கணவன் தன்னுடைய சுயநலத்திற்க்காக acrophobia குறைபாடுடைய கதாநாயகனைப் பயன்படுத்தியிருப்பார் என்பது இறுதில் தான் நமக்குத் தெரியவரும்..
> துப்பறியும் கதைதான் என்றாலும், தன்னுடைய திரைக்கதையின் மூலம் மிகவும் மிகவும் பிரமாதமாகப் படமாக்கி இருப்பார் ஹிட்ச்காக்..
> உயரமான கட்டிடத்தின் மேலேறிச் செல்லும் கதாநாயகி, அங்கிருந்து கீழே விழுந்து இறப்பது போல் (நாயகனை ஏமாற்றுவதற்காக) சித்தரிக்கப்பட்டிருக்கும் காட்சியை - அதே காலகட்டத்தில் எம்ஜியார் நடித்து வெளிவந்த "கலங்கரை விளக்கம்" என்ற தமிழ்ப்படத்தில் பயன்படுத்தி இருப்பார்கள்.. தமிழ் படங்களில் கூட வித்தியாசமாக, அதுவும் அந்நாட்களிலேயே யோசித்திருக்கிறார்களே என்று ரொம்பநாட்களாக வியந்து கொண்டிருந்தேன்.. சில வருடங்களுக்கு முன்பு Vertigo-படம் பார்க்கும் வரை எனக்கு இந்த உண்மை தெரியாது..
Shadow of a doubt (1943)
> ஹிட்ச்காக்கினது ஆரம்ப காலத்தில் வந்த இந்தப்படம் தான் அவரை ஒரு கைதேர்த்த திகில் திரைப்பட இயக்குனராக உலகுக்கு அறிவித்தது..
> ஹிட்ச்காக்கைப் பொறுத்தவரையில், தான் இயக்கியவற்றில் தனக்கு மிகவும் பிடித்த படங்கள் என்று சொல்லும் மிகச் சில படங்களில் இதுவும் ஒன்று..
> "Uncle Charlie", "Lady Charlie" என்ற இரு கதாபாத்திரங்களை மட்டும் பிரதானமாக வைத்துப் பின்னப்பட்டிருக்கும் இப்படம், ஒரு "silent thriller" வகையைச் சேர்த்தது..
> Lady Charlie என்பவள் தன் குடும்பத்தினருடன் ஒரு சிறு நகரில் வசித்து வரும் ஒரு இளம் பெண்.. அவளது வீடிற்கு வருகை தரும் (அவளது குடும்பத்தினர் இதுவரையில் பார்த்திராத) Uncle Charlie-னது வருகை, அதை தொடர்ந்து வரும் சம்பவங்கள் என்று நீளும் இப்படம், மிக அருமையாக திடுக்கிடும் சம்பவங்கள் கொண்டது..
> சத்யராஜ் நடித்த எண்பதுகளில் வந்த ஒரு திரைப்படம், இதே போன்ற ஒரு தளத்தில் எடுக்கப்பட்டிருக்கும்.. (படத்தின் பெயர் ஞாபகம் இல்லை.. சமீபத்தில் ராஜ் டிவியில் ஒளிபரப்பான பொழுது அதைப்பார்த்தேன்..)
> மேலும், Lady Charlie-யை Uncle Charlie பூட்டிய கார் செட்டில் சிக்க வைத்து, காரை ஸ்டார்ட் செய்து அந்த புகைமூட்டங்களில் சிக்கவைத்து கொலை செய்ய முயலும் சம்பவம், அஜித் நடித்த காதல் மன்னன் படத்தில் வேறு விதத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கும்..
மேற்கூறிய மூன்று படங்கள் மட்டுமே எனக்குப் பிடித்த படங்கள் என்றில்லை.. இதைதவிர Lifeboat, The Birds, Rebecca, Rope போன்ற படங்களும் எனக்கு மிகவும் பிடித்தவை.. அவற்றைப் பற்றி அடுத்து பதிவில் விரிவாக எழுதலாமென்றிருக்கிறேன்..
நன்றி!!
Subscribe to:
Post Comments (Atom)
கலக்குங்க பிரசன்னா..!! :)
ReplyDeleteவெர்டிகோ-வை போன வாரம்தான் பார்த்தேன். எழுதலாம்னு வச்சிருந்தா.., வேலையை சுலபமாக்கிட்டீங்க! :) :)
===
சில ப்லாக் விஷயங்கள்.
1. வேர்ட் வெரிஃபிகேஷனை ரிமூவ் பண்ணிடுங்க.
2. விருப்பம் இருந்தா ப்லாக் ஃபாலோயர்ஸ், தமிழ்மணம், தமிலிஸ் பட்டைகளையும் இணைச்சிடுங்க தல.
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்
ReplyDeleteமிக்க நன்றி பாலா..
நான் ரொம்பவும் தொடர்ச்சியா எழுதக்கூடிய ஆள் இல்ல.. அதனால, திரட்டிகள்ல இணைக்குறது இப்போதைக்கு வேணாம்ன்னு வச்சிருக்கேன்.. ஒருவேளை, தொடர்ந்து எழுத ஆரம்பிச்சிட்டேன்னா, கண்டிப்பாஇணைக்கிறேன்..
Shadow of a doubt பார்க்க வேண்டும். Psycho, அதன் பேருக்காகவே இன்னும் பார்க்கவில்லை. ஒரு பயம் தான்... :)
ReplyDeleteநீங்க கண்டிப்பா Charade பாருங்க. நீங்க கண்டிப்பா பாருங்க. இது ஒரு non-Hitchcock film...
ஹிட்சாக் படம் பற்றி நிறைய கேள்விப்படுகிறேன்.படப் பொட்டி கிடைக்கிறதுதான் குதிரைக் கொம்பா இருக்குது.
ReplyDeleteடி.வி.டிக் காரன்கிட்ட போனால் இந்தப் படம் பாருன்னு ஒரு ரத்தக் காட்டேரி இல்லைன்னா ஒரு வாம்பயர் பல் இளிச்சிட்டு இருக்கிறத சிபாரிசு செய்யறான்.படமெல்லாம் பார்த்து கருத்து சொன்ன மாதிரிதான்...
சீனு, ராஜ நடராஜன் - தங்கள் முதல் வருகைக்கு நன்றி..
ReplyDelete//சீனு -
Shadow of Doubt, Psycho - ரெண்டு படங்களையும் கண்டிப்பா பாருங்க..
Psycho படத்தில் Gore, Bloodshed இருந்தாலும் கூட பயப்படற அளவுக்கு இல்லாம, சற்று அழகியலோடு செதுக்கப்பட்டிருக்கும்..
//ராஜ நடராஜன் -
ஹிட்சாக் படங்களோட DVD கிடைக்கலேன்னு நீங்க சொல்றது எனக்கு ரொம்ப ஆச்சர்யமா இருக்கு..
தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
ReplyDeleteஇந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.
அன்புடன்
www.bogy.in
This comment has been removed by a blog administrator.
ReplyDelete//அஜித் நடித்த அமர்க்களம் படத்தில் வேறு விதத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கும்//
ReplyDeleteஅந்த படம் காதல் மன்னன் என்று நினைக்கிறேன்.
ஆமா, அமர்க்களம் கிடையாது.. காதல் மன்னன் தான் அது.. திருத்தியாயிற்று..
ReplyDeleteதவறை சுட்டிக்காடியதற்கு நன்றி.. இதுக்குதான் அமர் வேணும்ன்றது.. :-)
இப்பொழுதுதான் இந்த பதிவே கண்ணுல பட்டுச்சினு நினைக்கிறேன்.நல்ல அருமையான பதிவு..
ReplyDeleteஹிட்ச்காக் எனக்கு பிடித்த இயக்குனர்கள் முதன்மையானவர்..இப்போதுக்கூட இவரது படத்தை பார்த்துட்டுதான் கமெண்ட் போடுறேன்..
வாய்ப்பு கிடைச்சா இன்னும் நிறைய ஹிட்ச்காக படங்களை பாருங்க..மனுஷன் பின்னிடுவாரு..நீங்க சொன்ன மூன்று படத்தையும் பார்த்துவிட்டேன்.
நன்றி மற்றும் வாழ்த்துக்கள்..
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி குமரன்..
ReplyDeleteஎன்னிடம் கிட்டத்தட்ட அனைத்து ஹிட்ச்காக் படங்களுமே உள்ளன.. மற்ற சில படங்களையும் பற்றி விரைவில் எழுதுகிறேன்..