Pages

Wednesday, November 16, 2011

சினிமாவில் புதிர்கள் ? ? ?

கடந்த வாரம் முழுக்க ராஜ் டிவியில் இரவு 11:30 மணிக்கு, இயக்குனர் பாலச்சந்தரின் படங்களாக ஒளிபரப்பிக் கொண்டிருந்தார்கள்..
நானும் கடந்த வாரம் முழுக்க விடுப்பில் இருந்ததால், அவற்றில் சிலவற்றை பார்க்க நேர்ந்தது..

"ஒரு வீடு இரு வாசல்", "பொய்க்கால் குதிரை" என்ற இரு படங்கள் நான் இதற்கு முன்னர் கேள்விப்பட்டிராதவை.. இரண்டுமே சுமார் தான்..

"பொய்கால் குதிரை" - கிரேசி மோகனின் "Marriages made in Saloon" என்ற மேடை நாடகத்தை தழுவி எடுக்கப்பட்ட படம் என்று பின்னர் இணையத்தின் மூலமாக அறிந்தேன்.. நாடக மேடையில் பார்க்கும் போது, கண்டிப்பாக நன்றாக இருந்திருக்கும்.. பெரிய திரையில் அவ்வளவாக எடுபடவில்லை..

<<Marriages made in Saloon நாடகத்தை இங்கே பார்க்கலாம்>>

"ஒரு வீடு இரு வாசல்" - எண்பதுகளின் இறுதில் வந்த இந்த படம் கண்டிப்பாக ஒரு வித்தியாசமான முயற்சி என்று சொல்லலாம்.. ஒரே திரைபடத்தில் முழுக்க வேறுபட்ட இரு கதைகள் என்று எடுக்கப்படிருக்கிறது.. அதில் முதல் கதை எனக்கு பிடித்திருந்தது.. இரண்டாவது கதை சுமார்.. இரண்டு கதைகளுமே அனுராதா ரமணனின் புதினங்களை தழுவி எடுக்கப்பட்டவை என்று விக்கிபீடியாவில் போட்டிருக்கிறது.. அனால், டைட்டிலில் சிவசங்கரி என்று பார்த்ததாக ஞாபகம்..

மூன்றாவதாக நான் பார்த்தது, "அச்சமில்லை அச்சமில்லை".. கிராமத்து பின்னணியில் ஒரு அரசியல் படம்.. ரசிக்கும்படியான நிறைய Political Satire Dialogues.. ராஜேஷ்/சரிதாவின் நடிப்பில், வி.எஸ். நரசிம்மன் இசையில் அருமையான பாடல்கள் கொண்ட ஒரு திரைப்படம்..
படத்தில் வரும் எனக்கு மிகவும் பிடித்த 'ஆவாரம்பூவு ஆறேழு நாளா' என்ற பாடலை நீங்கள் அனைவரும் கேட்டிருப்பீர்கள். . அதை இயற்றியவர் கவிஞர் ஈரோடு தமிழன்பன்.. (அந்நாளைய தூர்தர்ஷன் செய்தி வாசிப்பாளர் - ஞாபகமிருக்கிறதா?)

சரி, விஷயத்திற்கு வருகிறேன்..
எனக்கு சுமார் 12 வயதிருக்கும் பொழுது, சென்னை தொலைகாட்சியில் "அச்சமில்லை அச்சமில்லை" படத்தினுடைய சில காட்சிகள் திரைமலரில் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது..
அதில் ஒரு காட்சி வரும்.. காதலிக்காக கோவிலை ஒட்டிய அருவியினருகே காதலன் காத்திருப்பான்.. காதலியோ அவனை சந்திக்க வராமல், அந்த அருவியினது மேல் பரப்பில் நின்று கொண்டு ஒரு குறிப்பை மரப்பட்டையில் எழுதி நீரிலே மிதக்க விடுவாள்..
அது அருவி வழியாக, தண்ணீரில் இறங்கி காதலனை வந்தடையும்.. பார்த்தவுடனே காதலனுக்கு புரிந்து விடும் - அது தன் காதலியின் செய்தி தான் என்று.. அனால் அதில் எழுதி இருக்கும் குறிப்பை அவனால் புரிந்து கொள்ள முடியாமல் தவிப்பான்.. அங்கு வரும் கதையின் நாயகி (சரிதா), அந்த குறிப்பை படித்து பார்த்து விட்டு, "இது கூட விளங்காமல் இருக்கிறாயே" என்று சிரித்துக் கொண்டே செல்வாள்.. எனக்கும் அந்த குறிப்பின் அர்த்தம் அந்த வயதில் புரியவில்லை.. என்னவாக இருக்கும் என்று யோசித்து கொண்டே இருந்தேன் சில நாட்கள்.. பின்னர் அதை முழுவதுமாக மறந்தும் விட்டேன்.. ஆனால், இந்த முறை பார்க்கும் போது என்ன அர்த்தம் என்று புரிந்து விட்டது.. :-)

காதலி தான் வர முடியாது என்பதை காதலனுக்கு தெரிவிக்க கொடுத்திருந்த குறிப்பு : "வந்ததால் வரவில்லை.. வராவிட்டால் வந்திருப்பேன்"..
என்ன, உங்களுக்கு அர்த்தம் புரிகிறதா?

இரண்டாவதாக விசுவினுடைய ஒரு படம்.. பெயர் சரியாக ஞாபகமில்லை..சுமார் பதினைந்து வயதில் பார்த்ததாக நினைவு.. வேடிக்கை அது வாடிக்கை, சம்சாரம் அது மின்சாரம் போன்று ஏதோ ரைமிங்காக தலைப்பை கொண்ட ஒரு படம்.. அதில் வரும் ஒரு காட்சி - எழுத்தாளரான ரவி ராகவேந்தர், தன்னை சந்திக்க வரும் தனது ரசிகையான பல்லவியிடம் ஒரு புதிர் போடுவார்.. அது புரியாமல் பல்லவி முழிப்பார்.. பின்னர் விடையை ரவியே பல்லவியிடம் கூறுவார்..

அந்த புதிர் - ஒரு பெண்ணை " ஊரார் கண்ட கோலம், ஆனால் உடையவன் காணாத கோலம்.." அது என்ன கோலம்? என்று எனக்கு விடை உடனேயே தெரிந்து விட்டது.. உங்களுக்கு விடை தெரிகிறதா?
விடாமல் அதை தொடர்ந்து, "உடையவன் மட்டும் கண்ட கோலம், ஆனால் ஊரார் காணாத கோலம்" என்று அடுத்த புதிர் கேள்வியாக வரும்.. அதை கேட்டு, பல்லவி வெட்கப்பட, பின்னர் ஏதேதோ நடந்து விடும் .. (ஆமா, என்ன நடந்திருக்கும்?? :-))

இறுதியாக, இன்று வரையில் எனக்கு விடை தெரியாத ஒரு புதிர்..
சுமார் பத்து வருடங்களுக்கு முன்பு - வரிசையாக சேனல் மாற்றிக் கொண்டே வரும் போது, இயக்குனர் பாக்யராஜ் ஒரு பெண்ணிடம் புதிர் போடுவதாக ஒரு திரைபடத்தின் காட்சியை கண்டேன்.. விடை என்னவென்று பார்பதற்குள் மின் தடை ஏற்பட்டு விட்டது.. படத்தின் பெயரும் தெரியவில்லை.. அந்த நடிகையும் யார் என்று தெரியவில்லை..

படு சுவாரசியமான அந்த புதிர் - "ஒரு பெண் தன் கணவனிடம் ஒரே ஒரு விஷயத்தை மட்டும் மறைத்து இறுதி வரை ரகசியம் காப்பாள்.கடைசி வரை அது என்னவென்று கணவனுக்கு தெரியவே தெரியாது.. அது என்ன ரகசியம்?" .. பாக்யராஜ் கேட்கிற கேள்வி என்பதால் நானும் பலவாறாக (எக்குதப்பாகவும் கூட) யோசித்து பார்த்துவிட்டேன்.. இன்று வரை எனக்கு விடை சிக்கவே இல்லை.. பார்க்கலாம், என்றாவது ஒரு நாள் எதேச்சையாக அந்த படத்தை நான் பார்க்காமலா போய்விடுவேன்..

நன்றி!!!