Pages

Sunday, October 02, 2011

மரண சிந்தனை (சிறுகதை)

அன்று சனிக்கிழமை.. இரவு மணி பதினொன்று இருக்கும்.. அவன் அப்பொழுதுதான் அழுவலகத்திலிருந்து வீட்டிற்க்கு வந்திருந்தான்.. இங்கே வீடு என்று அவனால் குறிப்பிடப்படுவது அவன் தனியாக தங்கி இருக்கும் அந்த 1 BHK வாடகை ரூமைத்தான்.. அவனைப் பொறுத்தவரையில், அதுதான் வீடு..

சமீப நாட்களாக அவன் மிகுந்த மனவருத்தத்தில் இருக்கின்றான் என்பதை அவன் முகத்தை வைத்தே சுலபமாக சொல்லி விடலாம்.. தன்னை தொடர்ந்து துரத்தி வரும் பிரச்சனைகள் அனைத்திற்கும் எப்பொழுது தீர்வு கிட்டும்? -அல்லது- தீர்வு கிட்டுமா? கிட்டாதா? என்று பலவாறாக மனதிற்குள் சிந்தனைகள் ஓடிக்கொண்டிருந்தது..

பேண்ட்டிலிருந்து கைலிக்கு மாறியவன், முகம் கழுவுவதற்காக குளியலறைக்குள் நுழைந்தான்.. பலவாறான சிந்தனையோட்டதில் இருந்த அவன் குளியலறை விளக்கை போட்டிருக்கவில்லை.. குழாயை திறந்ததும், சில்லென்று பீறிட்டு வரும் தண்ணீரை இரு கைகளிலும் பிடித்து , வேகமாக முகத்தை அடித்துக் கழுவியதும், சற்றே புத்துணர்ச்சி அடைந்ததாய் ஒரு உணர்வு அவனுக்கு.. குழாயை மூடலாம் என்று கையை அதனருகே கொண்டு சென்று போது, கையில் ஏதோ சுருக்கென்று தைத்ததைப் போன்றதொரு உணர்வு.. என்னவாக இருக்கும்? விளக்கை எரிய விட்டிருக்காததால், கண்ணுக்கு ஒன்று புலப்படவில்லை..

கண்ணை கசக்கி உற்று பார்த்தபொழுது - ஏதோ ஒன்று, குழாயின் கைப்பிடியருகே நெளிவதை போன்று தோன்றியது..சற்று பின்வாங்கி விளக்கை போட்டு அது என்னவென்று பார்த்தான்.. இப்பொழுது அது அவன் கண்களுக்கு பளிச்சென்று தெரிந்தது.. ஆம்,அது ஒரு பாம்பு.. சுமார் நான்கடி நீளம், சற்றே பழுப்பு நிறம்..சட்டென்று அறையில் வெள்ளிச்சம் பரவியதால் அதற்கு கண்கள் கூசியிருக்குமோ என்னவோ.. இவனைப் பார்த்து சற்று சீறியது ..

இவன் முகத்திலோ, சிறு சலனமுமில்லை.. பயம்? படபடப்பு? - ம்ஹும்..
அந்த பாம்பை அப்படியே வெறித்துப்பார்த்துக்கொண்டு நின்றிருந்தான்.. சிலநொடிகள் கடந்தன..ஏதாவதொரு கம்பை எடுத்து தன்னை அடிக்க முயற்சிப்பான் என்று எதிர்பார்த்திருந்த பாம்பு, இவன் ஒரு வெத்துவெட்டு என்று முடிவு செய்து, குழாயின் பின்னிருந்த பைப்பைப் பற்றி மேல்நோக்கி சென்று சாவகாசமாக வெளியேறியது..
இவனோ, எந்தவொரு சிந்தனையுமில்லாமல் - வெளியேறிச்சென்ற பாம்பைப் பார்த்தவாறு குளியலறையை விட்டு வெளியே வந்தான்..

சாவகாசமாக ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்தவாறு, வீட்டை விட்டு வெளியே வந்து வெளி வாசலில் நின்றவாறு தெருவை இருபக்கமும் பார்த்தான்.. எந்தவொரு ஆள் நடமாட்டமும் இல்லை.. ஒட்டு மொத்தமாக ஊரே அடங்கியிருந்தது.. "ஒரு வேளை அனைவருமே பாம்பு கடித்து அவரவர் வீட்டிற்க்குள் சமாதியாகி விட்டனரா?".. தன்னுடைய கற்பனை எவ்வளவு சிறுபிள்ளைத்தனமானது என்பது அவனுக்கு நன்றாகவே தெரியும்.. இருந்தாலும் , தன் கேள்வியை நினைத்து, தனக்குதானே மெலிதாக சிரித்துக் கொண்டான்..

கடிபட்ட தன் கையைப் பார்த்தான்.. வழக்கமாக பாம்பு கடிபட்ட இடம் என்பது, இரண்டு பற்கள் பதிந்ததுபோலதான் இருக்கும் என்று எங்கோ படித்த ஞாபகம்..தனக்கு மட்டும் ஏன் ஒரே ஒரு பல் பதிந்தது போல இருக்கிறது? ஒருவேளை பாம்பு நம்மை சரியாக கடிக்கவில்லையா??
மருத்துவரிடம் ஊசி போட்டுக்கொள்ளும் போது, முதலில் ஊசி குத்துவது தெரியும்.. பின்பு, அவர் மருந்தை செலுத்தும்போது ஏதோ ஒன்று உட்புகுவது போல் தோன்றும்.. அதுபோல, பாம்பு கடித்த போது நமக்கு முதலில் சிறு வலி தோன்றியது.. பிறகு, ஒரு திரவம் நமக்குள் உட்புகுவது போல தோன்றியது.. ஆக, பாம்பு நம்மை ஒழுங்காக தான் கடித்திருக்கிறது என்று நினைத்துக் கொண்டான்..

உள்ளுக்குள், பலவாறாக அவனது சிந்தனை உழன்று கொண்டிருந்தது..
"இந்த நாளில், இந்த நேரத்தில் பாம்பு நம்மை கடிக்க வேண்டு என்பது முன்பே எழுதி வைக்கப்பட்ட விதியா?" "அப்படிதான் என்றால், பாம்பு கடித்து நாம் இறக்க வேண்டுமென்றும் விதிக்கப்பட்டிருக்குமா என்ன?" "அப்படிதான் விதிக்கப்பட்டிருக்கும் என்றால், அது அப்படியே இருந்து விட்டு போகட்டுமே..நாம் ஏன் அதை மாற்ற முயற்சிக்க வேண்டும்?" "இதை நாம் ஏன், நம் துன்பங்களிலிருந்து/பிரச்சனைகளிலிருந்து விடுதலை பெற கிடைத்த வாய்ப்பாக எடுத்துக் கொள்ளக்கூடாது.. ?"

கிட்டத்தட்ட பதினைந்து நிமிடங்கள் கடந்து விட்டன.. உடம்பில் எந்தவொரு மாற்றமும் ஏற்படவில்லை.. பாம்பு கடிபட்டவர், இரவில் தூங்கக்கூடாது என்று ஏதோவொரு சினிமாவில் பார்த்தது ஞாபகம் வந்தது.. சரி,நாம் தூங்க முயற்சிப்போம் என்று அறைக்குள் திரும்பவும் வந்தான்..

பர்ஸில் இருக்கும் தன் பெற்றோரின் புகைப்படங்களை ஒரு முறை பார்த்து விட்டு, காலமாகிவிட்ட தன் பாட்டி தாத்தாவின் படங்களை தொட்டு கும்பிட்டு விட்டு விளக்கை அணைத்தான்.. கதவை வெறுமனே சாத்தி விட்டு, தாளிடாமல் வந்து படுத்துக் கொண்டான்.. காரணம் - நாளை நாம் இறந்த பிறகு, நம் உடலை எடுப்பதற்காக வீட்டு கதவு உடைக்கப்படும்.. போகிற நேரத்தில் ஏன் வீட்டின் உரிமையாளருக்கு வீணாக செலவு வைக்க வேண்டும் என்கிற எண்ணம் தான்..

விளக்கை அணைத்து படுத்த பின்னரும்,சிந்தனைகள் உழன்றன.. நாளை நாம் மரணமடைந்து விட்டோமென்றால், அதை எப்பொழுது அனைவரும் அறிவார்கள்?
சாதாரணமாக நாம் யார் வீட்டிற்கும் போனதில்லை.. பிறர் நம் வீட்டிற்கு வருவதையும் நாம் விரும்பியதில்லை.. பின்பு எப்படி நம் மரணம் இவ்வுலகிற்கு அறிவிக்கப்படும்?
வீட்டினருகே இருக்கும் கடையில் டீ குடிப்பதை தவிர வேறு யாரிடமும் தெருவில் பழக்கமில்லை...
வீட்டு உரிமையாளரும், முதல் தேதியன்று தான் வாடகை வாங்க வருவார்..நாளை முதல் தேதியும் அல்ல..
நாளை ஞாயிற்று கிழமை வேறு.. வார நாட்களாக இருந்தாலாவது, ஏன் வரவில்லை என்று அலுவலகத்திலிருக்கும் சக பணியாளர்கள் நம்மை தொடர்பு கொள்ள முயற்சித்து பார்ப்பார்கள்.. அதற்கும் இப்போது வாய்ப்பில்லை..
ஊரிலிருந்து அப்பா அம்மா யாராவது நாளை காலை போனில் அழைக்கலாம்.. ஓரிருமுறை முயற்சித்து பார்த்துவிட்டு, சற்று பதட்டமடைவார்கள்.. பின்பே, பல்வேறான முயற்சிகளுக்குப்பின் ஒருவாறாக நம் மரணம் அனைவருக்கும் தெரியவரும்..
நாம் மரணமடையும் பட்சத்தில், அது வெளியே தெரிய வருவதற்கே இவ்வளவு சிக்கல்கள் இருக்கிறதே.. நாம் மரணமடைவதில் தவறேதும் இல்லை என்று முடிவு செய்தவாறு கண்ணை மூடி தூங்க முயற்சித்தான்.. பின்னர், அதில் ஒரு வழியாக வெற்றியும் கண்டான்..

மறுநாள் காலை மணி ஒன்பதரை.. கண்விழித்தான்.. கடிபட்ட கையில் லேசாக வலி இருப்பது போலிருந்தது.. கடிபட்ட இடமும் சற்று தடித்திருந்தது.. பாம்பு நன்றாகதானே நம்மை கடித்தது.. ஏன், ஒன்றுமே ஆகவில்லை? ம்ஹ்ஹ்ம் - கஷ்டம்தான் .. "நாம் பலமாக இருக்கிறோமா ? அல்லது, அது ஒரு பலவீனமான பாம்பா? " ஒன்றுமே புரியவில்லை அவனுக்கு..
நமக்கு உயிர் போகவில்லை.. சரி, அதற்குப் பதில் வேறு ஏதாவது உடற்குறை ஏற்பட்டுவிட்டால்? கை வலிக்கிறதே.. ஒரு வேளை, அந்த கை மட்டும் விளங்காமல் போய்விட்டால்? உயிர் போனாலும் பரவாயில்லை.. இது போல் உடல் பலவீனங்கள் வந்து சேர்ந்தால், நாம் மேலும் பலவிதமான பிரச்சனைகளை எதிர்கொள்ள நேரிடும்.. இருக்கின்ற பிரச்சனைகளே போதும், சமாளித்து கொள்ளலாம் என்று எண்ணியவாறு அருகிலிருக்கும் மருத்துவமனைக்கு கிளம்பலானான்..

இனிமேலாவது, இது போலான முட்டாள்தனங்களுக்கு அவன் இடம் கொடுக்க மாட்டான் என்று நம்புவோமாக..

குறிப்பு:
>> Veronika Decides to Die கதையின் தாக்கத்தில் எடுக்கப்பட்ட ஒரு சிறு முயற்சியே இச்சிறுகதை..
>> இது கற்பனையும், உண்மையும் சரிவிகிதத்தில் கலந்து எழுதப்பட்ட கதை..