மகன்: அப்பா, நீங்க எங்க போறிங்கன்னு எல்லாம் நான் கேக்க மாட்டேன்.. ஆனா திரும்பி வரும் போது எனக்கு ஏதாவது வாங்கிட்டு வாங்கப்பா..
தந்தை: தம்பி, இது மாச கடைசிப்பா.. பாக்கெட்ல அஞ்சு பைசா இல்ல..
மகன்: அஞ்சு பைசாவா? அப்படின்னா?
தந்தை: அஞ்சு பைசாடா.. தெரியாதா?
மகன்: தெரியாதுன்றதுனால தானங்கப்பா கேக்குறேன்..
தந்தை: ????
சில நாட்களுக்கு முன்னர், என் தெருவிலுள்ள ஒரு சிறிய கடையில் நின்று டீ குடித்துக் கொண்டிருந்தேன்.. அப்போது கடையின் எதிரிலுள்ள ஒரு வீட்டில், நான் பார்த்த தந்தைக்கும் மகனுக்குமான உரையாடல் தான் இது..
அந்தப் பையனுக்கு சுமார் பத்து வயதும், அவன் அப்பாவிற்கு சுமார் முப்பத்தியைந்து வயதும் இருக்கும்.. முப்பத்தைந்து வயதான அந்த அப்பாவிற்கும், முப்பது வயதான எனக்கும் பரீட்சயமான ஐந்து பைசா, பத்து பைசா, இருபது பைசா போன்றவற்றையெல்லாம் கண்டிப்பாக அந்த சிறுவனுக்கு தெரிந்திருக்க நியாயமில்லை.. ஏன், இருபத்தைந்து பைசாவைக்கூட அவன் கண்டிருக்கமாட்டான் என்பது தான் எனது அனுமானம்..
காலவோட்டத்தில் பல விஷயங்கள் நம்மை கடந்து போய்க்கொண்டே இருக்கிறது.. நான் முதன் முறையாக - தொலைபேசியில் பேசியது என்னுடைய பதிமூன்றாவது வயதில்.. கணிப்பொறியை நேரில் கண்டது என்னுடைய பதினைந்தாவது வயதில்.. முதன்முறையாக அதை இயக்க ஆரம்பித்தது என்னுடைய பதினெட்டாவது வயதில்.. காரில் பயணித்தது பதிமூன்றாவதுவயதில்.. அனால் இன்றைய இளம்/பால்ய வயதினர் மிகவும் வேகமாக பயணிக்கின்றனர்..
இந்த வேகத்தைப் பார்க்கும்போது மிகவும் ஆச்சர்யமாக இருக்கிறது..
என் சிறுவயதில் (எண்பதுகளின் இறுதி/தொண்ணூறுகளின் துவக்கம்) என்னுடன் வியாபித்திருந்த Orson Black & White TV, VCR, "ராணி காமிக்ஸ், பூந்தளிர்" போன்ற பாலர் புத்தகங்கள், Promise Tooth Powder, திரைப்படம் ஆரம்பிப்பதற்கு முன்னர் போடும் நியூஸ் ரீல், தூர்தர்ஷனில் வாரா வாரம் ஒளிபரப்பாகும் ராமாயணம்/மகாபாரதம் தொடர்கள், "Gold Spot, Torino" போன்ற குளிர்பானங்கள், பண்டிகை காலங்களில் வீடிற்கு வரும் வாழ்த்து அட்டைகள், ஒரே தொடர்பு சாதனமாக அன்று அறியப்பட்ட கடிதம்/தந்தி, போக்குவரத்திற்கு பெரும்பாலும் உபயோகிக்கும் சைக்கிள் ரிக்க்ஷா/குதிரை வண்டி, மின்தடை நேரங்களில் கைகொடுக்கும் சிம்னி விளக்கு, என்று பல பொருட்கள்/விஷயங்கள் இன்றைய இளம் தலைமுறையினருக்கு தெரிந்திருக்கக்கூட வாய்ப்பில்லை.. :-)
அந்நாளைய பணத்தின் மதிப்பு மிகவும் குறைவாகவே இருந்தது.. ஊரில் இருந்த வரும் என் அப்பா, நான் சினிமா பார்க்கவேண்டும் என்பதற்காக என்னிடம் 10 ருபாய் குடுப்பார்.. நான் என் சித்தப்பாவை அழைத்துக் கொண்டு படத்திற்கு செல்வேன்.. ஹைக்ளாஸ் டிக்கெட் மூன்றரை ருபாய்/சைக்கிள் டோக்கன் எழுபத்தைந்து பைசா/பாப்கார்ன் பாக்கெட் ஒரு ருபாய் என்று அந்தப் பத்து ரூபாயில் சௌகர்யமாக படம் பார்த்துவிட்டு அதிலும் ஒன்னேகால் ருபாய் சேமிப்பேன்.. சில் மாதங்களுக்கு முன்பு நான் குடும்பத்தோடு படம் பார்க்கவேண்டுமென்று ஐந்து டிக்கெட் இணையத்தில் முன்பதிவு செய்தபோது ஆனா செலவு அறநூறு ருபாய் (டிக்கெட் ஒன்றிற்கு நூற்றி இருபது ருபாய் வீதம்).. இந்த செலவு டிக்கெட்டிற்கு மட்டும்தான்.. வீட்டிலிருந்து காரில் சென்ற பெட்ரோல் செலவு, இடைவேளையில் வாங்கித்தின்ற தின்பண்டங்கள் என்று கணக்கிட்டால் குறைந்தது எண்ணூறு ருபாய் வரும்.. இருவர் சென்றிருந்தால் தோராயமாக ஆகியிருக்கும் செலவு முன்னூறு ருபாய்.. 1990-ல் ஆன எட்டேமுக்கால் ரூபாய் செலவையும், 2011-ல் ஆன முன்னூறு ரூபாயையும் ஒப்பிட்டால் கிட்டத்தட்ட முப்பத்திநான்கு மடங்கு அதிகம்.. :-)
இன்னும்கூட ஒரு விஷயத்தை பகிரலாம் இங்கு.. எங்கள் ஊரான திண்டுக்கலில் அன்று தேன்மிட்டாய் என்ற ஒரு தின்பண்டம் ஐந்து பைசாவிற்கு இரண்டு கிடைக்கும்.. (அதுவே மதுரையில் ஐந்து பைசாவிற்கு ஒன்று மட்டுமே கிடைக்கும்).. என் பிறந்த நாளன்று எனக்கு கிடைத்த ஒரு ரூபாயை எடுத்துக்கொண்டு தேன்மிட்டாய் வாங்க கடைக்கு சென்றேன்.. பத்து பைசாவிற்கு நான்கு மிட்டாய் வாங்குவதுதான் என் எண்ணம்.. கடைக்காரரிடம் சென்று ஒரு ரூபாயை கொடுத்துவிட்டு தேன்மிட்டாய் கேட்டேன்.. ஆனால், பத்து பைசாவிற்கு தான் வேண்டுமென்று சொல்ல மறந்துவிட்டேன். அவர், நான் ஒரு ரூபாய்க்கும் தேன்மிட்டாய் கேட்கிறேன் என்று ஒரு பெரிய தினத்தந்தி பேப்பரை எடுத்து காட்டிக்கொடுக்க ஆரம்பித்துவிட்டார்.. (அன்று பிளாஸ்டிக் பை கலாசாரம் ஆரம்பித்திருக்கவில்லை தமிழ்நாட்டில்).. பின் ஒருவாறு, பத்து பைசாவிற்கு மட்டும் குடுத்தால் போதும் என்று சொல்லி வாங்கிவந்தேன்.. :-)
அன்று தான் எனக்கு ஒரு ரூபாயின் பெருமை தெரிந்தது.. "ஒரு ரூபாய்னா இவ்வளோ பெருசான்னு" எனக்கு அந்த ஆச்சர்யம் அடங்க சில நாட்கள் பிடித்தது.. :-)
நன்றி!!
No comments:
Post a Comment