Pages

Thursday, January 19, 2012

எதிர்மறையின் வெளிபாடு

சில் நாட்களுக்கு முன்பு, இலக்கின்றி இணையத்தை மேய்ந்து கொண்டிருந்தபொழுது என் கண்ணில் தட்டுப்பட்ட ஒரு கட்டுரையில் படித்தது - "உலகில் உள்ள ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் கண்டிப்பாக நேர்மறை/எதிர்மறை என்று இரு வேறு விதமான பக்ககங்கள் உண்டு"..  (ஆங்கிலத்தில் "Every man in this world has a positive & negative side within them" என்று சொல்லலாம்).. 

உலகில் உள்ள மற்றவர்களை விட்டுவிட்டு என்னை மட்டும் முன்னிறுத்தி யோசித்துப் பார்த்தால், எனக்குள்ளும் அது போலானதொரு இரு வேறு பரிணாமங்கள் உண்டு என்பதுதான் உண்மை. ஆனாலும், அதை முழுமையாக ஏற்றுக்கொள்வதில் எனக்கு சங்கடங்கள் இருந்தது.. எங்கே, இப்படி ஏற்றுக்கொண்டுவிட்டால்  அந்த சிந்தனைகள் என்னை முழுமையாக ஒரு விதமான கீழ் நிலைக்கு (downgrade) இறக்கிச்சென்று விடும் என்பது தான் காரணமாக இருந்திருக்க வேண்டும்..

பொதுவாகவே என் கோபத்தை நான் எப்பொழுதுமே வெளிக்காட்டிக் கொள்வதில்லை.. சில சமயங்களில் அதிகபட்சமாக எரிச்சல் அடைந்ததுண்டு.. அந்த சமயங்களில் கூட, கோபத்தை வெளிகாட்டிக் கொள்ளாமல் அதோடு அந்த இடத்தை விட்டு வெளியேறி விடுவேன்..

சமீபத்தில் எனக்கு நன்கு பரிட்சயமான ஒரு நபரிடம் விளையாட்டாக ஒரு விஷயத்தை பேச ஆரம்பித்து, அது வேறு ஒரு விதமாக வாக்குவாதத்தில் முடிந்தது.. அந்த தருணத்தில், நான் என்னுடைய கோபத்தை வெகுவாகவே வெளிப்படுத்தி விட்டேன்.. 

அந்த சம்பவம் நடந்த சில மணிகளுக்கு பின்பு யோசித்து பார்க்கையில், 'நானா இது போல் நடந்து கொண்டேன்' என்று ஆச்சர்யமாக உள்ளது.. எங்கள் இருவரது பக்கமும் தவறுகள் உண்டு.. அனால், என்னுடைய பக்கத்திலான தவறை நான் உணர்த்து கொண்ட பின்பும், அந்த நபரிடம் சென்று மன்னிப்பு கேட்க எனக்கு விருப்பம் இல்லை..

இங்கு - "கோபத்தை வெளிபடுத்தியது", "தவறு என் பக்கமும் உண்டு என்று தெரிந்தும் மன்னிப்பு கேட்க மறுப்பது", "அவரிடத்திலும் தானே தவறுள்ளது - முதலில் அவர் வந்து நம்மிடம் பேசட்டுமே.. - பின்பு நாம் மன்னிப்பு கேட்டுக்கொள்ளலாம்" என்பது போலான விஷயங்கள் தான் என் எதிர்மறையான பக்கத்தின் வெளிப்பாடு என்று நினைக்கிறேன்..

ஆம், I am no more an exceptional case for this.. 
என்னோடு பார்கின்ற/பழகுகின்ற அனைவரும் நான் எனது நேர்மறையான பக்கத்தை வெளிபடுத்தும் மனிதனாகவே காணப்படுகிறேன்.. அதே சமயம், எனக்குள்ளும் பலவிதமான எதிர்மறை சிந்தனைகள் உண்டு என்பது தான் உண்மை... 
(இன்னும் வெளிபடையாக சொல்ல வேண்டுமென்றால் - மேற்கூறிய விஷயங்களை தவிர்த்து பல விதமான வக்கிரமான சிந்தனைகள், அருவருக்கத்தக்க எண்ணங்கள், குரூரம்/வஞ்சம் போன்ற இயல்புகள் என்று பலவும் என்னுள் உண்டு).

இதோ, சில நாட்கள் கடந்துவிட்டது..
"ஒருவருக்கு நாம் தெரிந்தோ/தெரியாமலோ செய்கின்ற ஒரு காரியம் தப்பானது என்று உணர்ந்தால், அவரிடம் நாம் சென்று மன்னிப்பு கேட்க தாமதிக்கவோ தயங்கவோ கூடாது.. "என்னை மன்னித்து விடுங்கள்" என்று நாம் சொல்லும் அந்த வார்த்தைக்கு மிகவும் சக்தி அதிகம்.. அது பல இழப்புகளை காப்பாற்றி தரும்" - என்று என் நேர்மறை பரிணாமம் என்னை வழிப்படுத்த முயல்கிறது.. இறுதியாக நேர்மறை எதிர்மறையை வென்று விடும் என்று நினைக்கிறேன்.. வென்று விட வேண்டும் என்பது தான் என் ஆசையும் கூட..

இந்த விஷயத்தை பொதுப்படையாக பார்க்கபோனால் - என் எண்ணம் இதுதான்: "மனிதர்களில் - இவர் நல்லவர், இவர் மிகவும் நல்லவர் என்று பல்வேறு விதமான அளவைகளில் அடையாளப்படுத்தப்படுகின்றனர் அல்லவா.. அந்த அளவை தீர்மானிப்பது யாதெனில் அந்த மனிதர் எந்த அளவில் தன் எதிர்மறை பக்கங்களை மறைத்து வாழ்கின்றார் என்பதை வைத்துத்தான்"..


நன்றி!!

6 comments:

  1. மன்னிப்புக் கேட்பதால் சிலருக்கு மனநிம்மதி வரும். சிலருக்கு மன்னிப்புக் கேட்டதாலேயே மனநிம்மதி போய்விடும். இதில் நாம் எந்த ரகம் என்பதைத் தெரிந்து கொண்டு நமக்கு மனவமைதியைத் தருவது எதுவோ அதைச் செய்வது சிறந்தது.

    இதிலும், மன்னிப்புக் கேட்பதால் பொதுவாக மன அமைதி அடையும் ஒருவர் ஒரு குறிப்பிட்ட விஷயத்தில் மன்னிப்புக் கேட்பதாலேயே அமைதியை இழக்கலாம். அந்த நேரங்களில் நிம்மதியைத் தக்க வைத்துக் கொள்ள மன்னிப்புக் கேட்காமல் போவது நல்லதே.

    ReplyDelete
  2. தாமதமாக கருத்து தெரிவிப்பதற்கு முதலில் மன்னிக்கவும்..தங்களது வருகைக்கு பிறகே இதை படிக்க வாய்ப்பு கிடைத்தது.
    என் சிந்தனையை வெகுவாக கவர்ந்துவிட்டது தங்களது பதிவு..மன்னிப்பு மற்றும் நன்றி என்பது கடவுள் நமக்கு கொடுத்த பரிசு என்றே நினைக்கிறேன்..தங்களது வார்த்தைகளை போல இதை ஏற்றத்தாழ்வு எதுவும் இல்லாது சொல்வதன் வழி பல இழப்புகளையும் தவிர்ப்பதோடு மரியாதையும் பெற்றுக்கொள்ள முடியும்..நன்றி மற்றும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் கருத்தோடு முழுமையாக ஒத்துப்போகிறேன்.. நன்றி குமரன்!!

      Delete
  3. ஒரு சின்ன ஆலோசனை..தவறாக நினைக்க வேண்டாம்..தங்களது பதிவுகளை திரட்டிகளில் இணைக்கலாமே..எல்லாமே சிறப்பாக இருக்கிறது.நிறைய பதிவர்களையும் சென்றடையும்.ஓட்டுப்பெட்டியையும் முடிந்தால் இணைத்துவிடுங்கள்.நன்றி.

    ReplyDelete
    Replies
    1. நான் மிகவும் அரிதாகவே எழுதுகிறவன்.. அதுவும் பெரும்பாலும் என் சுய புராணங்கள், சுய அனுபவங்கள் மட்டுமே..
      திரட்டிகளில் இணைப்பதைப்பற்றி கண்டிப்பாக யோசிக்கிறேன்..

      Delete