Pages

Thursday, December 29, 2011

"என்றென்றும் ராஜா" - இசையுடன் என் அனுபவம்..

நான்  மிகவும் ஆவலுடன் காத்திருந்த "என்றென்றும் ராஜா" நிகழ்ச்சியை கடைசியில் பார்த்தாகி விட்டது..
இதே போன்றதொரு நிகழ்ச்சியை  ஜெயா தொலைகாட்சியில் முன்பே பார்த்து மிகவும் ரசித்த காரணத்தினால், இந்த முறை என் எதிர்பார்ப்பு மிகவும் அதிகமாகவே இருந்தது.. ஆனால், என் எதிர்பார்ப்பு முழுமையாக ஈடு செய்யப்படவில்லை என்பது என்னவோ உண்மை தான்.. ஆனாலும், ஒரு ரசிகனாக என்னை மகிழ்வித்த தருணங்கள் இதிலும் இருந்தது..

> நுழைவுச்சீட்டு முன்பதிவு செய்யும் போதே என்னை எரிச்சல் படுத்திய விஷயம் - நுழைவுச்சீட்டில் இருக்கை எண் போடப்படாமல், முன்னே வருபவர்க்கு முன் இருக்கைகளில் இடம் என்ற ஏற்பாடு..
> மாலை ஐந்து மணிக்கு நிகழ்ச்சி ஆரம்பிக்கும் என்று நுழைவுச்சீட்டில் போடப்பட்டிருந்தது.. அதனால் மாலை நான்கு மணிக்கே, எனக்கு குறிப்பிட்டிருந்த நேரு உள்விளையாட்டரங்கின் ஐந்தாம் எண் நுழைவாயிலுக்கு சென்றால், அங்கே மிகப்பெரிய கூட்டம் ஏற்கனவே காத்திருந்தது.. வரிசை முறை ஏதும் இல்லை.. பெண்கள், வயதானவர்கள், கையில் குழந்தைகளுடன் வந்திருந்தவர்கள் என்று அனைவருமே சற்று எரிச்சலோடு காணப்பட்டனர்..
> ஐந்து மணிக்கு வெளிக்கதவை திறந்து உள்ளே அனுப்பினார்கள்.. வரிசை முறை எதுவும் பின்பற்றப்படாததால், பலத்த நெரிசலுக்கிடையே தான் உள்ளே செல்ல முடிந்தது.. இரண்டு மூன்று காவலாளிகள் இருந்தும் அவர்கள் எதுவும் செய்யாமல் அமைதி காத்திருந்தது ஆச்சர்யமாக இருந்தது..
> வெளி வாசலை கடந்து உள்ளே சென்றபின், மையஅரங்கிற்கு உள்ளே நுழையும் மற்றுமோர் வாசல்.. நல்லவேளையாக அங்கே வரிசை முறை கடைபிடிக்கப்பட்டிருந்தது..
> உள்ளே சென்று இடம் பிடித்து அமருவதற்கே மணி ஐந்தரை ஆகிவிட்டிருந்தது,..



> ஆறரை மணிவரை ரசிகர்கள் வந்து கொண்டே இருந்தனர்.. கூட்டம் கட்டுக்கடங்காமல் போய்விட்டிருந்தது மகிழ்வான விஷயம் தான்.. அனால், இருக்கை எண் இல்லாமல், நுழைவுச்சீட்டு  அச்சிடப்படிருந்ததன் காரணம் அப்போது தான் தெரிந்தது.. ஆம், அனைத்து இருக்கைகளுமே  நிரம்பி விட்ட பின்பும், நிறைய பேர் நடை வழிப்பாதையில் அமர்ந்தும்/இருக்கைகளுக்கு பின்னால் நின்று கொண்டும் இருந்தனர்..

> இவையனைத்துமே நிர்வாக குறைபாடுகள் தான் என்பதை தவிர வேறெதுவும் இல்லை.. 

> ஆறரை மணிக்கு நிகழ்ச்சி துவங்கியது.. முதலில், இளையராஜா அழைத்து வந்திருந்த ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த இசை குழுவினர் சிறுது நேரம் தங்கள் இசை வல்லமையை காட்டினர்..  எனக்கு மிகவும் பிடித்திருந்தது.. அனால், பெரும்பாலானோர் பொறுமையிழந்து காணப்பட்டனர்.. ஒருவாறாக அது முடிந்த பின் சரியாக ஏழுமணிக்கு நம் இசைஞானி அரங்கில் தோன்றினார்.. கரகோஷம் அடங்குவதற்கு சற்று நேரம் பிடித்தது..

வந்த உடனேயே, என் "என் ஒரே நண்பனை அழைத்து வாருங்கள்" என்று சொல்லி தன ஆர்மோனிய பெட்டியை வாங்கி, தரையில் துண்டை விரித்து சம்மணமிட்டு அமர்ந்து, தனது விருப்பப் பாடலான "ஜனனி ஜனனி" பாடலை பய பக்தியுடன் இனிமையாக பாடி நிகழ்ச்சியை ஆரம்பித்து மிகவும் அருமையாக இருந்தது..


> நிகழ்ச்சி ஆரம்பித்ததும், அரங்கிற்குள் புகைப்படம் எடுக்க தடை செய்யப்பட்டது..  அதையும் மீறி அவ்வப்போது சிலர் புகைப்படம் எடுக்க, அங்கிருந்த காவலாளிகள் அவர்களிடம் சண்டையிட்டு கொண்டிருந்தனர்..

 > இரண்டாவது அம்மாவின் புகழ் பாடும், "அம்மாவென்றழைக்காத உயிரில்லையே" பாடலை கே. ஜே. யேசுதாசை அழைத்து பாடவைத்தார்..
பாடலை துவங்கும் முன், 'இது அந்த அம்மாவிற்காக' என்று இளையராஜா குறும்புடன் தன் விரல்களை வான் நோக்கி சுட்டிக் காண்பித்தார்.. :-)

> மறைந்து விட்ட தன் மனைவிக்காக சமர்ப்பணம் என்று மீண்டுமொரு அம்மா பாடலான "நானாக நான் இல்லை தாயே" பாடலையே எஸ். பி. பாலசுப்ரமணியத்தை அழைத்து பாடவைத்தார்..

> கே. ஜே. யேசுதாசின் அறிமுகத்திற்கு எழும்பிய கரவொலி, எஸ். பி. பாலசுப்ரமணித்தின் அறிமுகத்திற்கு எழும்பிய கரவொலியை விட அதிகமாக இருந்தது சற்று ஆச்சர்யமாக இருந்தது.. :-)
அனால் என்னை பொறுத்தவரையில் யேசுதாஸ் பாடியதில், "ஒரு ராகம் பாடலோடு காதில் கேட்டதோ", "என் இனிய பொன் நிலாவே" மட்டும் தான் இனிமையாக இருந்தது.. மற்ற பாடல்கள் அனைத்தையும் கொஞ்சம் சொதப்பி விட்டார் என்று தான்  சொல்லவேண்டும் .. இசை தகடுகளில் அவரது இனிமையான குரலில் பாடல்களை கேட்டு பழக்கப்பட்ட எனக்கு, மேடையில் சற்று தடுமாற ஆரம்பித்திருக்கும் அவரது குரல் அவ்வளவாக சுகப்படவில்லை..  வயதாகிவிட்டிருப்பது காரணமாக இருக்கலாம்..
> "This song is very close to my heart" என்ற முன்னுரையுடன் அவர் பாட ஆரம்பித்த "பூவே செம்பூவே உன் வாசம் வரும்" பாடலை துவக்கத்தில் நன்றாக ஆரம்பித்தாலும், பாடலின் இடையில் வரும் வயலின் இசை முடிவதற்கு முன்பே அவர் அடுத்த சரணத்தை பாட ஆரம்பிக்க, இளையராஜா அதை கண்டு பிடித்து பாடலை அப்படியே நிறுத்தி வைத்து யேசுதாசை மீண்டும் சரியாக இசையோடு இணைந்து பாட வைக்க முயற்சித்தார்.. இரண்டாவது முறையும் யேசுதாஸ் அதே தவறை செய்ய, ராஜா மறுபடியும் பாடலை நிறுத்தி  யேசுதாசுடன் ஒரு நிமிடம் பேசி தவறை செய்து மூன்றாவது  முறை சரியாக பாடவைத்தார்.. பாடல் முடித்ததும், "இந்த மேடை என்னை பொறுத்தவரையில்  ரெக்கார்டிங் ஸ்டூடியோ மாதிரி தான்.. தவறுகளை சரி செய்து கொண்டே பாடுகிறேன்" என்று சிரித்தவாறே சமாளித்தார்..

> இசைத்துறையில் இளையராஜாவிற்கு முன்னரே காலடி எடுத்து வைத்தவர் யேசுதாஸ்.. முதலில் மேடைக்கு வந்த போது "என் அன்புத்தம்பி" என்று இளையராஜாவை அழைத்ததோடு மட்டுமில்லாமல் எந்த வித ஈகோவும் இன்றி இளையராஜா சொன்ன திருத்தங்களை ஏற்று மூன்று முறை திரும்பவும் பாடியது அவரது பெருந்தன்மைக்கு நல்லதொரு சான்று.. கடைசி முறை சரியாக பாடும்போது, பாடலில் வரும் "
நான் செய்த பாவம் என்னோடு போகும்"  என்பதை இளையராஜாவை பார்த்து சிரித்துகொண்டே பாடியதை அரங்கில் இருந்த அனைவரும் ரசித்தனர்..

> எந்த சொதப்பல்களும் இல்லாமல் அனைத்து பாடல்களையும் அருமையாக பாடினார் எஸ். பி. பி.. பல வருடங்களுக்கு முன்பு பாடிய "பருவமே, புதிய பாடல் பாடு", "சுந்தரி கண்ணால் ஒரு சேதி", "மடைதிறந்து பாடும் நதி அலை நான்" பாடல்களை, அவர் இன்று பாடி கேட்க்கும் போதும் இனித்தது.. வயதாகி விட்டாலும் அவர் தன் குரலை இன்றும் இளமையாகவே வைத்திருக்கிறார்.. அவர் பாடிய
"மடைதிறந்து பாடும் நதி அலை நான்" பாடலுக்கு மட்டும் தான், மொத்த அரங்கமும் "Once More" கேட்டது.. இளையராஜா அதை நாசூக்காக தவிர்த்துவிட்டார்..


> ஒவ்வொரு பாடல் பாடி முடித்து மேடையில் இருந்து இறங்கும்போதும், ரசிகர்கள் அனைவரையும் எஸ். பி. பி பணிவுடன் தலை குனிந்து வணங்கி விடைபெற்றது  நெகிழ்வாக இருந்தது.. மற்றும் சில சமயங்களில், மேடையிலிருந்த இசை கலைஞர்களையும் அருகில் சென்று தட்டி கொடுத்து பாராட்டி விட்டு சென்றார்..
> மனோ, எஸ். ஜானகி இருவருமே நிகழ்ச்சியில் பாடாதது வருத்தமளித்தது.. அரங்கிற்கு வந்திருந்தனரா என்று கூட தெரியவில்லை..

> ஜானகி பாடிய பாடல்கள் அனைத்தையும் சித்ராவே பாடினார்..
"பருவமே, புதிய பாடல் பாடு, "சுந்தரி கண்ணால் ஒரு சேதி" என்று அவற்றில் பெரும்பாலானவற்றை ஏற்றுக்கொண்டாலும், ஜானகியின் "புத்தம் புது காலை" பாடலை மட்டும் சித்ரா பாடுவதை என்னால் அனுபவித்து கேட்க இயலவில்லை..  அது ஜானகியின் குரலில் மட்டுமே இனிக்கும் ஒரு பாடல் .. 

> தான் முதல் முதலில் எழுதிய பாடல் என்கிற வகையில் "இதயம் ஒரு கோவில்" பாடலை இளையராஜா பாடினார்..

> கண்ணதாசனுடன் தனக்கு ஏற்பட்ட இனிமையான அனுபவங்களை நினைவு கூர்ந்து கவிஞருக்கு புகழ்மாலை சூட்டினார் இளையராஜா..

> மறைந்த பாடகர் மலேசியா வாசுதேவனுக்காக என்று, அவர் பாடாத ஒரு பாடலை சமர்பித்தார் இளையராஜா..  என்ன பாடல் என்று நினைவில் இல்லை..

> நிகழ்ச்சியை தொகுத்தளித்தவர் நடிகர் பிரகாஷ்ராஜ்.. கடந்த முறை நடிகர் பார்த்திபன் தொகுத்தளித்த போது இருந்த சுவாரசியம் இந்த முறை சுத்தமாக இல்லை.. கடந்த முறை இளையராஜா "நான் தேடும் செவ்வந்தி பூவிது" பாடலை பாடும் முன் அவர் கொடுத்த முன்னுரை அவ்வளவு அழகாக இருக்கும்.. இந்த முறை அது போல் எந்த முன்னுரையும் இல்லாமல், அதே பாடலை இளையராஜா பாட ஆரம்பித்தது என்னவோ போல் இருந்தது..

> சிறப்பு விருந்தினராக ஹிந்தி திரைப்பட இயக்குனர் பால்கி வந்திருந்து, இளையராஜாவின் பின்னணி இசை சேர்க்கும் திறமையை பற்றி புகழ்ந்து பேசினார்.. அதற்க்கு "பா" படத்தில் வரும் ஒரு காட்சியை பின்னணி இசையில்லாமல் முதலில் திரையில் ஓடவிட்டு, பின்னர் பின்னணி இசையுடன் அதை மறுபடியும் ஓடவிட்டு  - ராஜாவின் இசை அந்த காட்சிக்கு எப்படியெல்லாம் மெருகேற்றி இருக்கிறது என்று அனைவருக்கும் பொறுமையாக விளக்கினார்..

> நிகழ்ச்சியில் தோன்றிய மற்றுமொரு சிறப்பு விருந்தினர், இளையராஜா பெரிதும் மதிக்கும் முதுபெரும் கர்னாடக இசை வல்லுநர் திரு. பாலமுரளிகிருஷ்ணா.. இளையராஜா இசையில் அவர் பாடிய "சின்ன கண்ணன் அழைக்கிறான்" பாடலை முழுவதுமாக பிசிறில்லாமல் கம்பீரமாக பாடினார்..


> பெரும்பாலான பாடல்கள் அனைத்தையும் எஸ். பி. பி, சித்ரா, இளையராஜா என்று மூவர் மட்டுமே பாடினர்.. ஹரிஹரன் "நீ பார்த்த பார்வை பொருள் நன்றி" என்ற ஒரே பாடலை மட்டும் பாடி விட்டு சென்றார்.. அந்த பாடலுக்கு இளையராஜாவே ஹார்மோனியம் வாசித்து மிகவும் அருமையாக இருந்தது..

> இன்றைய தலைமுறை பாடகர்கள் கார்த்திக், ஹரிசரண் இருவரும் வந்து தலா ஒரு பாடலை பாடிச் சென்றனர்... கார்த்திக் பாடிய "ஏதோ மோகம், ஏதோ தாகம்", ஹரிசரண், ரீட்டா பாடிய "சுந்தரி நீயும் சுந்தரன் நானும்" என்று இரு பாடல்களுமே அருமையாக இருந்தது.. இவர்களை இன்னும் சில பாடல்களை பாட வைத்திருக்கலாம்..

> பழைய பாடகர்கள் வரிசையில் தீபன் சக்கரவர்த்தியும், உமா ரமணனும் இணைந்து "பூங்கதவே  தாழ் திறவாய்" பாடலை அருமையாக பாடினர்.. பாடல் ஆரம்பிக்கும் போதே, அதன் முகப்பு இசையில் இசைக்குழுவை சேர்ந்த ஒருவர் சொதப்ப, பாடலை நிறுத்தி விட்டு - அவர் தவறை திருத்தி மீண்டும் முதலிலிருந்து பாடலை ஆரம்பித்தார் இளையராஜா.. இந்த நிகழ்வு, அவர் இசையில் எவ்வளவு "perfectionist" என்பதை மற்றுமொருமுறை நமக்கு உணர்த்தியது..


> சமீபத்தைய படங்களில் தனக்கு பிடித்த படம் என்று, "அழகர்சாமியின் குதிரை" திரைப்படத்தின் பின்னணி இசையை ஐந்து நிமிட நேரம் இளையராஜா வாசித்து காட்டினார்..

> இளையராஜாவின் மகள் பவதாரணி, ஹிந்தி திரைப்படமான "பா"-விலிருந்து "Ghum Shum Ghum" என்ற ஒரு ஹிந்தி பாடலை பாடினார்..

"சிம்பொனி என்றால் என்ன" என்று பிரகாஷ்ராஜ் மேடையில் இளையராஜாவைப் பார்த்து கேட்க, "பட்டிகாட்ல இருந்து வந்த என்கிட்ட ஏங்க அதபத்தி கேக்குறிங்க" என்று சிரிப்புடன் பதிலளித்த இளையராஜா - பின்னர் தான் இசையமைத்த சிம்பொனியிலிருந்து சில இசைக்குறிப்புகளை வாசித்து காண்பித்து அனைவரையும் பரவசப்படுத்தினார்.. அரங்கில் இருந்து பலர், அதை தங்கள் கைபேசியில் பதிவு செய்ததை காண முடிந்தது..

> மணி பத்தரையை தாண்டியும் நிகழ்ச்சி முடிவுறாமல் சென்றுகொண்டே இருந்தது.. எனக்கு நேரமாகிவிட்டிருந்த காரணத்தினால், நான் கிளம்பிவிட்டேன்..

> நான் தொகுத்திருந்த பத்து பாடல்களில் ஒன்று கூட பாடப்படவில்லை.. :-)

> இளையராஜா எழுதி, இசையமைத்து, பாடிய ஒரு பாடலில் வரும் வரிகள் இவை..
"எவரெவராகினும் அவர்க்கொரு துயரம்..
உயரிசை கேட்டிடில் துயர் மனம் உருகும்..
இன்னிசை, அது என்னிசை..
எவர்க்கும் பொதுவென்று அள்ளிக் கொடுப்பேன் "
இந்த வரிகள் உண்மை தான் என்பதை நேற்றைய நிகழ்ச்சி எனக்கு மீண்டுமொருமுறை பலமாக உறுதிப்படுத்தியது..

குறிப்பு: நிகழ்ச்சியின் மேலதிக படங்களை, இங்கே சென்று பார்வையிடலாம்..
 
நன்றி!!

8 comments:

  1. அருமை அருமை, நிகழ்ச்சியைக் கண்முன்னே கொண்டு வந்துட்டீங்க, நிறை குறைகளை விரிவாகச் சுட்டியது நிறைவாக இருக்கு

    ReplyDelete
  2. Nalla oru vimarasanam...muzhumaiyaga neengal irundhirukalam angu....chennaiyil naanum irundhal thangaludan vandhirupen nanbare...Varundhugiren...

    ReplyDelete
  3. எனக்கு மட்டும் நிகழ்ச்சி முடியிறதுக்குள்ள கிளம்பனும்னு ஆசையா என்ன :-)
    பத்தரை மணிக்கப்புறம் நான் வேளச்சேரி கிளம்பி வந்ததே கொஞ்சம் கஷ்டமாதான் இருந்தது சீனி..
    அடுத்த முறை இது மாதிரி ஒரு நிகழ்ச்சி நடந்தா, கண்டிப்பா நாம சேந்து போகலாம்.

    ReplyDelete
  4. நல்லதொரு விரிவான பதிவு ...! இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ...!

    ReplyDelete
  5. தங்கள் கருத்திற்கும், வாழ்த்துக்கும் நன்றி ஆனந்து!!

    ReplyDelete
  6. அருமையான பகிர்வு தல ;-)

    ReplyDelete
  7. நன்றி கோபிநாத்!!
    என்னை விடவும், நீங்கள் தான் நிகழ்ச்சியை மிகவும் ரசித்து/அனுபவித்து எழுதி இருக்கிறீர்கள்..

    ReplyDelete